அதிகாரப்பகிர்வை சிதைத்தல், மாகாண சபைகளை முடக்குதல்: சீர்திருத்தப் பொதிக்கானவொரு மறுதலிப்பு – கலாநிதி. தயான் ஜயதிலக்க

மிதவாத இன தேசியவாதியும், முன்னணி தாராளவாத ஜனநாயகவாதியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ஜப்னா மொனிட்டர் இதழுக்கு அளித்த நேர்காணலில் அதிச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த தகவல்  விசித்திரமான முறையில் பலரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி ஒரு ஒருகட்சி ஆட்சியை நிறுவுவதற்கான மிகவும் ஆபத்தான சாத்தியக்கூறுகள் குறித்தே அந்த நேர்காணலில் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுமந்திரனின் இந்த எச்சரிக்கை உள்ளுர் அல்லது புலம்பெயர் மக்கள் கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசப்பட்டதல்ல. மாறாக, தமிழீழ விடுதலைப்புலிகள், பிரபாகரன் உட்பட இலங்கையின் மோதல் குறித்து பல தசாப்தங்களாக ஆய்வு செய்து பல நூல்களை எழுதிய புகழ்பெற்ற இந்தியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளரான  எம்.ஆர். நாராயண சுவாமிக்கு அளித்த நேர்காணலிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லிக்கான குறுகிய விஜயத்தின்போது இடம்பெற்ற சந்திப்பில் சுமந்திரன் கூறியதை நாராயண சுவாமி ‘நாட்டின் முன்னாலுள்ள மிகப்பெரிய ஆபத்து தமிழர்களுக்கு மட்டுமானது அல்ல. ஜே.வி.பி ஒரு ஒருகட்சி ஆட்சியை நோக்கி நகருவது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட்டமான ‘பிரஜா சக்தி’ மிகக் கீழ் மட்டத்தில், ஏற்கனவே இருக்கும் உள்ளுராட்சி நிறுவனங்களையும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தரப்பினரையும் ஓரங்கட்டிவிட்டு, ஜே.வி.பியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மையப்படுத்தி நகர்த்தப்படுகிறது’ என்று மேற்கோள் காட்டியுள்ளது.

அத்துடன், தமிழ்மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வட மாகாணத்தில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்முறை குழுக்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக அமைப்பாளர்கள், ஆகியவற்றை ஜே.வி.பியானது தனது செல்வாக்கு அல்லது மேற்பார்வைக்கு வெளியே எந்தவொரு பெரிய சிவில் முன்முயற்சிகளையும் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் ‘வட மாகாண சபையின் அதிகாரங்களை அபகரிக்கும் வகையில், அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை ‘நிழல் அமைச்சர்களாக’ செயற்பட அரசாங்கம் நியமித்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை’ என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச மற்றும் நாமக்கல் ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கையின் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆபத்தான போக்குகள் குறித்து சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்பிய மகஜரில் கையெழுத்திட்டுள்ள போதிலும், அது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை செயன்முறைக்கு எதிரான அச்சுறுத்தல்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

‘தீக்கோழி’ குணமுடைய எதிர்க்கட்சிகள் உணர வேண்டியது என்னவென்றால், ஒருகட்சி ஆட்சியை நோக்கிய நகர்வுகள் 2029ஆம் ஆண்டு தேசிய தேர்தல்களை முடக்கிவிடும் ஆபத்துக்களைக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு நடைபெறுமாக இருந்தால், எதிர்க்கட்சித் தலைவர்களின் ஜனாதிபதிக் கனவுகள் காற்றில் கரைந்துவிடும்.

அடோல்ப் ஹிட்லர் முதல் அகஸ்டோ பினோசெட் வரை வரலாற்றில் எந்தவொரு ஒருகட்சி ஆட்சித்திட்டமும், தேசிய, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் பரந்த ஐக்கிய முன்னணி இல்லாமல் வெற்றிகரமாகத் தோற்கடிக்கப்பட்டதாக வரலாறு இல்லை.

அதிகாரப்பகிர்வை முடக்குதல்

சில நாடுகளின் சில விவகாரங்களில், மிகவும் பொறுப்பற்ற தலைவரோ அல்லது அரசாங்கமோ மட்டுமே கை வைப்பார்கள். இலங்கையைப் பொறுத்தவரை, இன-தேசிய விவகாரம் தொடர்பான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மிக முக்கியமானதாகும்.

13ஆவது திருத்தத்தின் மூலம் உருவான மாகாண சபை முறைமை, இன-பிராந்திய பிளவுகளுக்கு இடையேவொரு பாலமாக உள்ளது. அது பழுதடைந்திருந்தால், அதை விரைவாகச் சரிசெய்ய வேண்டும். ஆனால், அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதற்கு மாறாக இருக்கிறது.

பாராளுமன்றக்குழு ஒன்று மூன்று மாதங்களுக்குள் ஆரம்ப அறிக்கையை மட்டுமே சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இந்தத் தெரிவுக்குழு, தனது முதல் கூட்டத்திலேயே காலக்கெடுவின்றி இந்தச் செயன்முறை இழுத்தடிக்கப்படலாம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஜே.வி.பி.பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் தொனியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மாகாண சபைத் முறைமையின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பும் அவர் மாகாண சபைகள் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்றும், ஒரு மாற்றுத் திட்டம் இல்லாமல் அவற்றை அகற்றப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மாகாண சபைகளில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகங்களே இருந்துள்ளன. தனது சொந்த அணிகளுக்குள் இருந்த சக்திவாய்ந்த அதிகாரப்பகிர்வு எதிர்ப்புப் பருந்துகளின் அழுத்தம் இருந்தபோதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்க்காலத்தில் கிழக்கு மாகாணத்துக்கும், போருக்குப் பிந்தைய காலத்தில் வடக்கு மாகாணத்துக்கும் தேர்தல்களை நடத்தினார்.

இதற்கு மாறாக, அநுரகுமாரவின் நிர்வாகம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதை காலவரையின்றி தாமதப்படுத்தி, அதன்மூலம் அவற்றை செயலற்ற நிலையில் வைத்திருக்கிறது.

தேர்தல்களில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஜேவிபி  மாகாண சபைத் தேர்தல்களை வெகுதூரம் தள்ளிப் போடுகிறது என்றால், அது ஒரு கட்சி ஆட்சிக்கு மாறுவது குறித்த எம்.ஏ.சுமந்திரனின் எச்சரிக்கைக்கு வலுச் சேர்க்கிறது.

அரசின் இடைநிலை மட்டங்களில் ஒரு தேர்தலில் தோற்பதைக் கூட  ‘ஜே.வி.பி-என்.பி.பி’ இவ்வளவு வெறுக்கிறது என்றால், மத்தியில் அதாவது ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற கட்டமைப்புக்களில் அரசியல் அதிகாரத்தை இழப்பதைத் தவிர்ப்பதற்காக, அது ஒத்திவைப்பு நடவடிக்கைகளைக் கையாளாது அல்லது முயற்சிக்காது என்றும் எதையெல்லாம் நசுக்காது, யாரையெல்லாம் அது சிக்க வைக்க முயலாது என்றும் கேள்விகள் எழுகின்றன.

ஆகவே ஜேவிபியின் ஒரு கட்சி ஆட்சிப்போக்கை எதிர்ப்பதற்கு, சுமந்திரன், சஜித்பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ, ஆகியோரை  ஒன்றிணைக்க வேண்டும்.

ஜே.வி.பி.மாறவில்லை

மாகாண சபைகள் குறித்த ஜே.வி.பியின் எதிர்மறையான நிலைப்பாடு, அவர்கள் 1980களில் இந்தியத் தலையீட்டின் காரணமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்தார்கள் என்ற கதையை பொய்யாக்குகிறது. ஜே.வி.பியின் முதல் அரசியல் கொலை மாணவர் தலைவர் தயா பத்திரண ஆவார். இது இந்தியத் தலையீட்டிற்கு ஆறுமாதகாலத்துக்கு முன்பே நடந்தது.

தற்போது எந்தத் தலையீடும் இல்லை. ஜே.வி.பி-என்.பி.பி கூட்டணி இந்தியாவுடன் பல வெளிப்படையற்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இப்போதும் அந்தக்கட்சி அதிகாரப்பகிர்வுக்கு எதிராகவே உள்ளது. இது அவர்கள் மாகாண சபைகளின் கொள்கையையே எதிர்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அதிகாரப்பகிர்வு தொடர்பான

அடிப்படைக் கண்ணோட்ட மாற்றம்

தேசிய மக்கள் சக்தி நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கும் அதிகாரப்பகிர்வின் எதிர்காலத்திற்கும் பின்னால் என்னென்ன கருத்துக்களும் தர்க்கங்களும் இருக்கலாம்?

ஜேவிபி-என்.பி.பிக்கு வெளிப்படையாகவும் வலுவாகவும் அனுதாபம மற்றும் ஆதரவு தெரிவிப்பவர்களில் மிகப்பெரிய கல்வியாளரும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியருமான ஜெயதேவ உயங்கொட, ஜப்னா மொனிட்டருக்கு அளித்தவொரு நீண்ட பேட்டியில் இதற்கான விடை அடங்கியிருக்கலாம்.

பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட 1971இல் ஜே.வி.பியின் முன்னணி அங்கத்தவராக இருந்தார். அவ்விதமானவர், ‘இலங்கையின் இனப்பிரச்சினை என்று நீண்ட காலமாகப் புரிந்துகொள்ளப்பட்டு வரும் ஒரு விடயத்திற்கு ஜனநாயகத் தீர்வு காண்பது குறித்த புதிய சிந்தனைக்கான ஆரம்பபுள்ளியாக, பெரிதும் போற்றப்படும் அதிகாரப்பகிர்வுக் கட்டமைப்பின் வரம்புகளுக்கு உதாரணத்தை நான் முன்வைக்கிறேன்.

பல பத்தாண்டுகளாகத் தமிழ்த் தேசியவாத அரசியல் அடிக்கடி கருதி வந்ததைப் போல, இனப்பிரச்சினைகளுக்கு முற்றிலும் இன ரீதியான தீர்வுகள் மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை, தாமதமாகவேனும், உணர்ந்துகொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.

இதுபல சமூகங்களின் அனுபவங்களிலிருந்து பெறப்பட்டவொரு அடிப்படைப்பாடமாகும். மாறாக, பிராந்திய சுயாட்சிக்கான தேசியவாத அபிலாஷைகளையும், இனச்சிறுபான்மை சமூகங்களின் அரசியல், சமூக, மற்றும் வர்க்க விடுதலைக்கான கோரிக்கைகளையும் இணக்கப்படுத்தும் திறன் கொண்ட ஜனநாயகத் தீர்வுகள் தேவைப்படுகின்றன.

இலங்கையில், சிறுபான்மை இனங்களின் குறைகளுக்கான ஜனநாயகத் தீர்வு என்பது, பிராந்திய அதிகாரப்பகிர்வுக்கு வழிவகுக்கும் ஒன்றாகவே பெரும்பாலும் கற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை மேட்டுக்குடியினர் பிராந்திய ஆளும் வர்க்கங்களாக உருவெடுப்பார்கள் என்ற கருத்து, சிறிய பிராந்திய மற்றும் உள்ளுர் சிறுபான்மையினரிடையே உள்ள அரசியல் அங்கீகாரம், பிரதிநிதித்துவம் மற்றும் தன்னாட்சிக்கான அபிலாஷைகளைப் புறக்கணிக்கிறது.

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு மாகாணங்கள் உட்பட ஏறக்குறைய அனைத்து மாகாணங்களிலும் பிராந்திய பெரும்பான்மையினர் மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உள்ளுர் சிறுபான்மையினரும் உள்ளனர்;. இவர்களின் அடையாளங்கள் இன மற்றும் சமூக வேறுபாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அதிகாரப்பகிர்வின் வழக்கமான மாதிரிகள் போதுமானதாக இல்லை என்று தோன்றுகின்றன, ஏனெனில் அவை மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்குள் உள்ள சிறிய மற்றும் சிதறிய சிறுபான்மை சமூகங்களின் அரசியல் சமத்துவம் மற்றும் பிரதிநிதித்துவத்திற்கான இறையாண்மை உரிமைகளைக் கவனத்தில் கொள்ளத் தவறுகின்றன.

வேறுவிதமாகக் கூறினால், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு உண்மையான ஜனநாயகத் தீர்வு காண ஆழமான ஜனநாயக மாற்றுகள் தேவைப்படுகின்றன. இது எமது அரசியல் சொற்களஞ்சியத்தையே மறுபரிசீலனை செய்ய அழைக்கிறது, கூட்டாட்சியிலிருந்து ஆழமான கூட்டாட்சிக்கும், அதிகாரப்பகிர்விலிருந்து ஆழமான அதிகாரப்பகிர்வுக்கும், அதிகாரப்பரவலாக்கத்திலிருந்து உண்மையான உள்ளுர் ஜனநாயகத்திற்கும் நகர்வது அவசியம். பிராந்திய மேட்டுக்குடியினரை அதிகாரப்பதவிகளுக்கு உயர்த்துவது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு சாதாரண குடிமக்களின் உள்ளுர் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதும் முக்கியமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உயங்கொடவின் வாதமானது, ‘மிகவும் போற்றப்படும் அதிகாரப்பகிர்வுக் கட்டமைப்பின’ மீதானவொரு தாக்குதல் மட்டுமல்ல. அதுவொரு திசைதிருப்பலும், உண்மையை மூடிமறைப்பதுமாகவே உள்ளது.

‘பல பிற சமூகங்களின் அனுபவங்கள்’ என்ற அவரது போலியான கூற்றை நாம் ஒதுக்கி வைப்போம், ஏனெனில் அவர் எந்த உதாரணங்களையும் அதற்காக வழங்கவில்லை.

இனப்பிரச்சனைகளுக்கு ‘கட்டாயமாக’ ‘முற்றிலும்’ இனரீதியான தீர்வுகள் இல்லை என்றாலும், இனப்பிரச்சனைகளுக்கு அடிப்படையில், பிரதானமாக, முதன்மையாக, முக்கியமாக, மற்றும் மையமாக இனரீதியான தீர்வுகள் ‘கட்டாயமாக’ உள்ளன.

இனப்பிரச்சனைகள் முதன்மையாக கூட்டு இன-தேசிய மற்றும் பிராந்திய அடையாளத்தில் இருந்து உருவாகின்றன, இதன் விளைவாக அரசியல் இடத்திற்கான கோரிக்கைகள் எழுகின்றன, சில சமயங்களில் இதுவொரு சுதந்திர அரசு வரை நீள்கிறது.

இலங்கையில், ஒரு தனி சுதந்திர அரசுக்கான கோரிக்கைக்காக முப்பது வருடப் போர் நடத்தப்பட்டது. சுதந்திர தனி அரசுக்கான முழக்கம் இன்னும் அழியாமல், புலம்பெயர்ந்தோர் மத்தியிலும், தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் உணர்வு பூர்வமாக உள்ளது.

அவ்வாறான நிலையில், நீடித்த பிரிவினைவாத அல்லது சுதந்திரவாத வடக்கு அயர்லாந்து முயற்சிகளின் ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளிலும், அதன் விளைவு, தீர்வு, சமரசம் அல்லது முகாமையை பின்வரும் மாதிரிகள் முன்தாரணமாக காண்பிக்கின்றன.

(1) சுதந்திரம் (எரித்திரியா).

(2) முழுமையான மற்றும் முறையான கூட்டாட்சி (கனடா).

(3) பகுதி-கூட்டாட்சி (இந்தியா).

(4) மையத்திலிருந்து அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் கூட்டாட்சியற்ற பிராந்திய சுயாட்சி மற்றும் தன்னாட்சி.

சுயாட்சி அல்லது அதிகாரப் பரவலாக்க மாதிரியை பின்வரும் இரண்டு வகைகள் வெளிப்படுத்துகிறது

(அ) ஒற்றையாட்சி அரசுக்குள் (வியட்நாம், இலங்கை).

(ஆ) அரசின் வடிவம் குறித்து மௌனம் காக்கும், ஆனால் கூட்டாட்சியற்ற ஒரு அரசுக்குள் (தென்னாபிரிக்கா).

வடக்கின் இன உறவு மாநிலமான தமிழ்நாட்டின் அதீத அருகாமையைக் கருத்தில் கொண்டு, கூட்டாட்சியானது அபாயகரமான மையவிலக்கைக் கொண்டது எனக்கருதி, இலங்கை அதை உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் எதிர்த்து வருகிறது.

இவை அனைத்தும் அடிப்படையில் இன-மொழி அல்லது இன-தேசிய அல்லது இன-பிராந்தியத் தீர்வுகளாகும். அவை முதன்மையாக இனரீதியான தீர்வுகளைத் தவிர வேறொன்றுமில்லை. அவையொரு இன அல்லது இன-தேசிய தொடர்ச்சியில் நிலைத்திருக்கின்றன.

அதனொரு முனையில் சுதந்திரமும், மறுமுனையில் அதி-மையவாதமும், நடுவில் கூட்டாட்சி அல்லது பிராந்திய சுயாட்சியின் வடிவங்களும் உள்ளன.

எந்தவொரு சீர்திருத்தத் தொகுப்பிலும் பிற சமூக, பொருளாதார-வளர்ச்சி, பாலினம் சார்ந்த அல்லது பொது ஜனநாயகக் கூறுகள் இருக்கக்கூடாது அல்லது இருக்க முடியாது என்று பொருள்படவில்லை. ஆனால், அவை அரசியல் தீர்வின் இன அடிப்படைக் கூறுகளுக்கு (கூட்டாட்சி அல்லது தன்னாட்சி அல்லது அதிகாரப்பகிர்வு) மாற்றாக அமைய முடியாது. மேலும் அவை இரண்டாம் பட்சமானவையாக மட்டுமே இருக்க முடியும்.

பேராசிரியர் உயங்கொட, இனப்பிரச்சினைக்கான ‘இன’ தீர்வு மற்றும் ‘அதிகாரப்பகிர்வின் மரபுசார் மாதிரிகளுக்கு’ பதிலாக ஒரு ‘ஜனநாயக’ தீர்வை முன்வைத்து மாற்றீடு செய்ய முயற்சிக்கிறார். இது மூன்று காரணங்களுக்காகப் பொருத்தமற்றது.

01.ஏறக்குறைய அருகருகே அமைந்துள்ள பகுதியில், ஒரு தனித்துவமான கூட்டு அடையாளத்தைக் கொண்ட மக்கள் ஓரளவிற்குத் தன்னாட்சியையும் சுயாட்சியையும் அனுபவிக்க வழிவகுக்கும். இன சுயாட்சியானது, உள்ளார்ந்த ஜனநாயகத் தீர்வாகும். இது அரசின் ஜனநாயகத் தன்மையை ஆழப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் விரிவுபடுத்துகிறது.

02. இந்தத் தருணத்தில், ‘இனத் தீர்வு’ மற்றும் ‘மிகவும் போற்றப்படும் அதிகாரப்பகிர்வுக் கட்டமைப்பு’ ஆகியவற்றிலிருந்து கவனத்தை மாற்றி, பலதரப்பட்ட பிற காரணிகளையும் பங்களிப்பாளர்களையும் உள்ளடக்கிய ஒரு ‘ஜனநாயக’ தீர்வை நோக்கிச் செய்யப்படும் முயற்சியானது, பரந்த அரை-தன்னாட்சிப் பிராந்தியமான மாகாணத்திற்குள் இருக்கும் சிறிய ‘உள்ளுர்’ சிறுபான்மையினரை, அப்பகுதியின் பெரும்பான்மையினருக்கு எதிராக நிறுத்துவதற்கு மட்டுமே உதவுகிறது.

இந்தப் பெரும்பான்மையினர் பொதுவாக பெரிய தேசிய சிறுபான்மையினராக (அல்லது சிறுபான்மை தேசிய இனமாக) இருப்பார்கள். இதுவொரு காலந்தாழ்த்தும் தந்திரமாகும், மேலும் இது ‘பிரித்தாளும் சூழ்ச்சிக்கு’ ஒப்பானது. தற்போதுள்ள இன அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு, பிராந்திய மேட்டுக்குடியினர் பிராந்திய ஆளும் வர்க்கங்களாக மாறுவதற்கு வழிவகுக்கும் ஒரு பொறிமுறையாக ‘கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது’ என்ற விமர்சனம் அபத்தமானது.

பிராந்திய ஆளும் வர்க்கங்களாக மாற விரும்பும் பிராந்திய மேட்டுக்குடியினருக்குப்பதிலாக, அடிமட்ட வகுப்பினரையும் சாதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கேரள பாணியிலான இடதுசாரி நிர்வாகங்களை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் உருவாக்குவதை தடுக்கவில்லை. வட,கிழக்கு மாகாண சபையின் (1988-1990) முதல் இடதுசாரி நிர்வாகம், கொழும்பில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியுடன் மோதலில் ஈடுபட்டு, அதன் கலைப்புக்கும் பதவி நீக்கத்திற்கும் வழிவகுக்கும் தவறைச் செய்ய எந்தக் கட்டமைப்பு ரீதியான நிர்ப்பந்தமும் இல்லை. வடக்கு மற்றும் கிழக்கு உட்பட எந்தவொரு மாகாண சபையிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறுவதற்கு எந்தக் கட்டமைப்பு ரீதியான தடையும் இல்லை.

உயங்கொட ‘ஆழ்ந்த ஜனநாயகம்’, ‘ஆழ்ந்த கூட்டாட்சி’ மற்றும் ‘ஆழ்ந்த அதிகாரப் பகிர்வு’ ஆகியவற்றை பரிந்துரைக்கிறார். ‘ஆழ்ந்த கூட்டாட்சி’ என்பது கூட்டாட்சியை விட ஆழமானதா அல்லது மேலோட்டமானதா என்பதில் எனக்குக் குழப்பம் உள்ளது, ஆனால் எதற்காக வீண் விவாதம் செய்ய வேண்டும்?

உண்மையில் ‘ஆழமாக’ நடப்பது என்னவென்றால், அநுரகுமார திசாநாயக்கவால் அதிகாரப்பகிர்வும் மாகாண சபைகளும் ‘ஆழமாக முடக்கப்படுவது’தான். 50சதவீத வாக்குகளைப் பெறத்தவறி, வெறும் 42சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற, இலங்கையின் ஒரேயொரு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற முறையில், மாகாண அதிகாரப்பகிர்வுக்கு எதிரான அவரது கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான மறுதலிப்பு சீர்திருத்தங்கள் சட்டபூர்வமான தன்மையற்றவை.

இலங்கையைச் சீர்குலைத்தல்

போருக்குப் பிந்தைய வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ் ஈழவாத உணர்வு முன்னெப்போதையும் விட அதிகமாக வெளிப்படுகிறது. 1948 பெப்ரவரி 4 அன்று இலங்கை பெற்ற முற்றிலும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய, சுதந்திரத்தைக் கண்டித்து நிராகரிக்கும் பல ஆர்ப்பாட்டங்களே இதற்குச் சான்றாகும்.

2009-க்குப் பிறகு, ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சிக்காலத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. உலகெங்கிலும், தீவிர அல்லது அதிதீவிர தேசியவாதம், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள தன்னாட்சி அல்லது அரை தன்னாட்சி சட்டமன்றங்களால் அரசியல் ரீதியாக குறித்த தீவிரநிலைமைகள் கட்டுப்படுத்தபப்டுகின்றன.

அத்தகைய சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், அதிதீவிரவாதிகளை வலுக்குன்றச் செய்து மிதவாத தேசியவாதிகளை வலுப்படுத்துகின்றன, இதனால் அதிதீவிரவாதிகள் விளிம்புநிலைக்குச் சென்று விடுகின்றனர். இந்த வாய்ப்பு தற்போது இலங்கையில் தடுக்கப்பட்டுள்ளது. மாகாண தேர்தல்கள் நடத்தப்படும் என்பதற்கான காலக்கெடு கூட தற்போது இல்லை.

அதிகாரப்பகிர்வு முடக்கப்பட்டிருப்பதாலும், இடைநிலை அரசியல் அடுக்கு (மாகாண சபைகள்) ‘முற்றிலும் பயன்படுத்தப்படாமல்’ இருப்பதாலும், அநுரவின் ஆட்சியில் பிரிவினைவாத அதிதீவிர தேசியவாதத்தின் வளர்ச்சியைத் தடுக்க அமைப்பு ரீதியான கட்டுப்பாடு மட்டுமல்ல, கட்டமைப்பு ரீதியான கட்டுப்பாடும் இல்லை.

சிறுபான்மை அரசியல் தீவிரவாதம் எப்போது, எங்கு வளர்கிறதோ, அங்கு பெரும்பான்மையினரின் அதிதேசியவாதப் பின்னடைவு தொடங்குகின்றது. 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாண சபைகளும் பரந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. அவற்றைச் செயற்படுத்துவதற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது – இது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது.

இலங்கை, கூட்டாட்சி மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட கோரிக்கைகளை எப்போதும் தவிர்க்கவோ அல்லது எதிர்க்கவோ முனைந்திருக்கின்றது. ஆனால் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகளில் தனது நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

அநுர, இலங்கைக்கு அந்த மாற்றீட்டையும், அதன் விளைவாக, அந்த நம்பகமான தற்காப்புப் பதிலையும் பறிக்கிறார். இதனால் மாகாண சபைகளை இராஜதந்திர ரீதியாக, நாம் தக்கவைத்துக் கொள்ளாது விட்டால்; ‘முன்னோக்கிய அரசியல் தற்காப்பு அரண்’ எதிர்காலத்தில் இருக்காது.

நான் இங்கு எழுதிய எதுவும் ரொக்கெட் விஞ்ஞானம் அல்ல. ஆனால் அது அரசியல் விஞ்ஞானம்.

(கலாநிதி தயான் ஜயதிலக்க லங்கா கார்டியனுக்காக எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இதுவாகும். இக்கட்டுரையாளர் 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் முறைமையின் இளம் அமைச்சராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது)  

Leave A Comment