பராமரிப்பிற்கானவொரு தேசிய கட்டமைப்பு ‘வடக்கின் சிறார்களுக்கான பாதுகாப்பு வலையமைப்பை உறுதியாக உருவாக்குதல்’
- Editor
- March 19, 2026
- விவரணங்கள்
- விவரணங்கள்
- 0 Comments

ஜீவன் தியாகராஜா
நாட்டின் வட மாகாணத்தின் எதிர்காலமானது அங்குள்ள 808 அரசாங்கப்பாடசாலைகளில் தங்கியுள்ளது. இதில் 791 மாகாணப் பாடசாலைகளும் 17 தேசியப் பாடசாலைகளும் உள்ளடங்குகின்றன.
இந்தப் பாடசாலைகளில் தான் அங்கு கல்வி பயிலும் 295,156 மாணவர்களின் நம்பிக்கைகள் புதைந்துள்ளன. இருப்பினும், பல தசாப்தங்களாக கல்வி முறையானது ஒரு ‘சராசரி’ மாணவனை இலக்கு வைத்து உருவாக்கப்பட்ட இறுக்கமான இயந்திரமாகவே இயங்கி வருகிறது.
இந்த அணுகுமுறையானது மெதுவாகக் கற்கும் மாணவர்களை அமைதியாகப் புறந்தள்ளியுள்ளதுடன், மாற்றுத்திறனாளி மாணவர்களைத் தனிமைப்படுத்தியும், தொழிற்கல்வி கற்கும் மாணவர்களைத் தரக்குறைவாகவும் கருதி வந்துள்ளது.
2026-2030ஆம் ஆண்டிற்கான கல்வி அமைச்சின் இலட்சியமாக கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ள நிலையில், நாம் வெறும் கொள்கை மாற்றங்களுக்கு அப்பால் நகர வேண்டியுள்ளது. எந்தவொரு மாணவர்களும் புறக்கணிக்கப்படாத, எந்தவொரு வளமும் வீணடிக்கப்படாதவொரு முழுமையான சூழலை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த மாற்றத்தின் இதயம் என்பது மதிப்பீட்டு முறையில் கல்வி அமைச்சு கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றத்தில் உள்ளது. அதாவது 70சதவீதமான தொடர்ச்சியான பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடு மற்றும் 30சதவீதமான மட்டுமே தேசியப் பரீட்சைகளுக்கான மதிப்பீடு என்பதாகும்.
இது வெறும் புள்ளிவிபர மாற்றம் மட்டுமல்ல. வகுப்பறையின் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ கிடைத்துள்ள சிவில் உரிமை வெற்றியாகும். பழைய பரீட்சை முறைமையை மையமாகக் கொண்ட முறையில், வாசிப்பு குறைபாடு, மெதுவாகக் கற்கும் திறன் அல்லது கற்றல் குறைபாடு கொண்ட ஒரு குழந்தை, அவர்களால் பெற முடியாத புள்ளிகளாலேயே அடையாளப்படுத்தப்பட்டது.
புதிய திறன் அடிப்படையிலான மாதிரியானது, இத்தகைய மாணவர்கள் செயன்முறை கற்றல், திட்டப் பணிகள் மற்றும் வாய்மொழி விளக்கங்கள் மூலம் தமது புரிதலை நிரூபிக்க அனுமதிக்கிறது. அதுவொரு பாடப்புத்தகத்தை மனப்பாடம் செய்யத் திணறும் மாணவர், ஒரு ளுவுநுஆ திட்டத்தில் ஒரு இயந்திர மாதிரியை உருவாக்குவதில் சிறந்து விளங்கக்கூடும் என்பதை இது அங்கீகரிக்கிறது.
பல்வேறு வகையான புத்திசாலித்தனங்களை அங்கீகரிப்பதன் மூலம், நாம் கஷ்டப்படும் மாணவர்களை வெளியே தள்ளுவதை நிறுத்தி, அவர்களை வகுப்பறையின் மையத்திற்கு உள்ளடக்கத் தொடங்குகிறோம்.இருப்பினும், ஒரு நல்ல கொள்கைக்குச் சிறந்த விநியோக வழிமுறைகள் அவசியமாகின்றது.
இங்குதான் ‘மையம் மற்றும் இணைப்பு’ மாதிரி அவசியமாகிறது. இந்த மாதிரியின் கீழ், 17தேசிய பாடசாலைகளும் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள மாகாணப் பாடசாலைகளும் உள்ளுர் ‘மையங்களாக’ செயற்படும். ஆனால் நாம் அதை விடப்பெரிதாகச் சிந்திக்க வேண்டும்.
இந்தக் கருத்தை மையப்படுத்தியதாக ‘தேசிய டிஜிட்டல் கூட்டாண்மை’யாக விரிவுபடுத்தலாம். கொழும்பு, கண்டி அல்லது கம்பஹா போன்ற வட மாகாணத்திற்கு வெளியே உள்ள வளங்கள் மிக்க முன்னணிப் பாடசாலைகளை ‘டிஜிட்டல் வளப்பங்காளிகளாக’ மாற்றமுடியும்.
தமது நூலகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், சிறந்த ஆசிரியர்களின் வகுப்புகளைப் பதிவு செய்தல் மற்றும் மெய்நிகர் ஆய்வகங்களை அமைப்பதன் மூலம், இந்த நிறுவனங்கள் உயர்தர உள்ளடக்கங்களை நேரடியாக வடக்கில் உள்ள மையங்களுக்கு அனுப்ப முடியும்.
அந்த மையங்கள் பின்னர் அவற்றை தங்களுடன் இணைந்துள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்க வழிசமைக்கலாம். இது வளங்கள் மீதான புவியியல் ரீதியான பாகுபாட்டை மாற்றியமைப்பதுடன், கொழும்பில் உள்ள மாணவருக்கு கிடைக்கும் அதேபாடப்புத்தகங்கள் மற்றும் அறிவியல் செயல்முறைகள் கிளிநொச்சியில் உள்ள மாணவருக்கும் கிடைப்பதை உறுதி செய்கிறது.
மெதுவாகக் கற்கும் மாணவர்கள் மற்றும் விசேடதேவை உள்ளவர்களுக்கான ஆதரவை உண்மையிலேயே பயனாக்குவதற்காக நாம் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். 40 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பறையில் வௌ;வேறு கற்றல் வேகத்தைக் கையாள்வதில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கிய இணைப்பாக உள்ளது.
கற்றல் முகாமை அமைப்புகளின் தேசிய விரிவாக்கத்துடன், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கற்றல் தளங்கள் 24-7 மணிநேரமும் இயங்கும் ஆசிரியர்களாகச் செயற்பட முடியும். விசேட தேவையுடைய மாணவர்களுக்கு, ஒரு கருத்தை வௌ;வேறு வழிகளில் பொறுமையாக மீண்டும் மீண்டும் தெளிபடுத்துவதற்கும் புரியவைப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு ஆசிரியரால் முடியும்.
பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, டிஜிட்டல் பாடப்புத்தகங்களை உடனடியாக அணுகக்கூடிய வடிவங்களாக செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால் மாற்ற முடியும். இது ஆசிரியர்களை வழிகாட்டியாகச் செயற்பட வைக்கிறது, நிர்வாகச் சுமைகளை செயற்கை நுண்ணறிவின் ஊடாக கையாள்வதால், ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தேவையான மனிதாபிமான ரீதியான தொடர்பில் அதிக கவனம் செலுத்த முடிகிறது.
புரிவுணர்வு மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். மையப் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் ‘சிறந்த மாணவர்கள் தன்னார்வத் தொண்டுப் படை’ ஒன்றினை உருவாக்கலாம். மையப் பாடசாலைகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்கள், இணைப்பு பாடசாலைகளில் பின்தங்கியுள்ள சிறு குழு மாணவர்களை மெய்நிகர் முறையில் ‘தத்தெடுத்து’ வழிநடத்த ஊக்குவிக்கப்படலாம்.
நீடிக்கப்பட்ட பாடசாலை நேரங்களில், இந்த மாணவர்கள் மற்றவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தல் மற்றும் திட்டப் பணிகளில் வழிகாட்டுதல் போன்றவற்றைச் செய்யலாம். இது பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமான, உயர்தரப் பயிற்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், திறமையான மாணவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்க்கிறது.
முக்கியமாக, நாம் வகுப்பறைக்கும் பணியிடத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும். நீடிக்கப்பட்ட பாடசாலை நேரம் இதற்கொரு சிறந்த வாய்ப்பாகும். உள்ளுர் மற்றும் தேசிய வணிக நிறுவனங்களை (தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் விருந்தோம்பல் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் வரை) எமது மையப் பாடசாலைகளில் ‘பாடசாலைக்குப் பின்னரான திறன் ஆய்வகங்களை’ நடத்த அழைக்கலாம்.
பொதுவான தொழில் வழிகாட்டலுக்குப் பதிலாக, தொழில் வல்லுநர்கள் தங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட தொழில்நுட்பத் திறன்களை நேரடியாகக் கற்பிக்க முடியும். இது மாணவர்கள் நேரடியாக வேலை வாய்ப்புகளைப் பெற வழிவகுக்கும்.
கணிதத்தில் திணறும் ஆனால் இயந்திரப் பணிகளில் சிறந்து விளங்கும் ஒரு மாணவன், ஒரு தொழில் நிறுவனத்தால் ‘மெதுவாகக் கற்பவர்’ என்று ஒதுக்கப்படாமல், ஒரு பெறுமதிமிக்க சொத்தாக அங்கீகரிக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.
இத்தொடர்பு சர்வதேச ஒத்துழைப்பிற்கான கதவுகளையும் திறக்கிறது. இத்தகைய கூட்டாண்மைகள் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்ய, கலாசார ரீதியாகவும் மொழிரீதியாகவும் அணுகக்கூடிய உள்ளடக்கங்களை நாம் தயார் செய்ய வேண்டும்.
இதற்கு இந்தியாவின் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற மாதிரிகளை பார்க்கலாம். அவர்கள் தமிழ் மொழியில் தொழிற்கல்வி வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அதேநேரத்தில், இந்தியாவின் ‘தேசிய திறந்த நிலைப் பாடசாலைகள்’ அல்லது ‘ஸ்வயம்’ போன்ற தளங்கள் மூலம் ஆங்கில வழிச் சான்றிதழ் படிப்புகளையும் நாம் பெற முடியும்.
பிற்பகல் 1:30 மணிக்குப் பிறகு இத்திட்டங்களை மையப் பாடசாலைகளுக்குக் கொண்டு வருவதன் மூலம், வடக்கிலுள்ள ஒரு மாணவன் சமையற்கலை அல்லது பிளம்பிங் போன்றவற்றைத் தமிழில் கற்றுக்கொள்ள முடியும், அதேவேளையில் மற்றொரு மாணவர் உலகளாவிய சந்தைக்குத் தன்னைத் தயார்படுத்த தகவல் தொழில்நுட்பம் அல்லது வணிக நிர்வாகத்தை ஆங்கிலத்தில் கற்க முடியும்.
இருப்பினும், கற்றல் என்பது பாடசாலை வாசலோடு முடிந்துவிடக் கூடாது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வீட்டில் கல்விக்கான ஆதரவு குறைவாக இருக்கலாம். இதற்காகப் பாடசாலைகளுக்கு அருகில் ‘சமூக அடிப்படையிலான செயற்பாட்டு மையங்களை’ நிறுவ வேண்டும்.
சமூக மண்டபங்கள் அல்லது கோவில்களில் இயங்கும் இந்த மையங்கள் ‘பாடசாலைக்குப் பிந்தைய புகலிடங்களாக’ செயற்படும். இவற்றிற்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருக்கும்: முதலாவது, வீட்டுப்பாடம் செய்ய உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் ஆதரவு வழங்குவதாகும்.
இரண்டாவது, ஆங்கில அறிவை வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்துவது. இந்தியக் கூட்டாண்மைகள் மூலம் தமிழ் வழிப் பாடங்கள் கிடைத்தாலும், இந்த மையங்கள் உரையாடல் ரீதியான ஆங்கிலப் பயிற்சியை வழங்குவதன் மூலம் மாணவர்களை உலகளாவிய தொழிலாளர் சந்தையுடன் இணைக்கும்.
2030-ஐ நோக்கிய பயணம் மாற்றத்திற்கான எதிர்ப்புகளைக் கடந்து செல்ல வேண்டும். ‘மையம் மற்றும் இணைப்பு’ மாதிரி, செயற்கை நுண்ணறிவு, இந்தியக் கல்வி நிறுவனங்களுடனான கூட்டாண்மை, சிறந்த மாணவர்களின் பங்களிப்பு, தொழில் நிறுவனங்களின் ஈடுபாடு மற்றும் சமூகங்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் வட மாகாணத்திலுள்ள 295,156 குழந்தைகளும் ஒரு திறமையுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்காலத்தில் கால்பதிப்பதை நாம் உறுதி செய்யலாம்.
‘எந்தவொரு மாணவரும் பின் தங்கிவிடக் கூடாது’ என்பது வெறும் கோஷம் மட்டுமல்ல அது புதிய இலங்கையின் தொழில்நுட்ப ரீதியான, கட்டமைப்பு ரீதியான மற்றும் தேசிய அளவிலான கட்டாயமாகும்.

