வடமாகாணத்தில் மீண்டெழும் பெண்  தலைமைத்துவங்களுக்கான வழிவரைபடம்

– ஜீவன் தியாகராஜா

இலங்கையின் வட மாகாணம் தற்போது முக்கியமானதொரு கட்டத்தில் நிற்கிறது. இது மகத்தான ஆற்றல் கொண்ட நிலமாக இருக்கின்றதோடு வரலாற்றால் வடுக்களைக் கொண்டிருக்கின்றது. எனினும் அங்குள்ள மக்களின் மீண்டெழும் மீள்திறன் தற்போது அடையாளப்படுத்தப்படுகின்றது.

எவ்வாறாயினும், புள்ளிவிபரங்கள் சவால்களின் கடுமையான நிலைமைகளையே காட்டுகின்றன. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 175,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் அதிர்ச்சியளிக்கும் வகையில் 73,681 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுடன், அம்மாகாணம் சமூக-பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இதற்கு வெறும் உதவிகளும், நிவாரணங்களும் மட்டும் போதாது, ஒரு தீவிரமான கட்டமைப்பு மாற்றம் தேவை.

பல ஆண்டுகளாக, வட மாகாணத்தின் கதையானது ‘வடமாகாணத்தை மீட்டெடுப்பதை’ பற்றியதாகவே இருந்தது. ஆனால் மீட்பு மட்டும் போதாது. இப்போது ‘மறுமலர்ச்சி’ பற்றிய கதைக்கான நேரம் இதுவாகும். இந்த மாற்றத்திற்கான கருவிகள் ஏற்கனவே எமது கிராமங்களில் உள்ளன. வட மாகாணம் ஒரு வலிமையான நிறுவனக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 1,145 கிராம அபிவிருத்திச் சங்கங்கள், 1,090 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், 1,138 பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி நிலையங்களின் வலையமைப்பு ஆகியன செயற்பாட்டில் உள்ளன.

அபிவிருத்திக்கான ‘வன்பொருட்கள்’ ஏற்கனவே உள்ளன. ஆனால் குறைபாடாக இருப்பது ‘மென்பொருளாகும்’. அதாவது சந்தைகள், நவீன தொழில்நுட்பம், நிதி வழிமுறைகளுடனான புத்திசாலித்தனமான இணைப்புகள், இவைதான் செயலற்ற பயனாளிகளைச் சுறுசுறுப்பான பொருளாதார உந்திகளாக மாற்றும்.

நாம் செயற்பாட்டுக்கான சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. வியட்நாம் மற்றும் இந்தியாவின் வெற்றிகரமான மாதிரிகளைப் பார்ப்பதன் மூலம், இரண்டு முக்கியமான நவீன வழிமுறைகளினூடாக வட மாகாணப் பெண்களின் ஆற்றலைப் பயன்படுத்தும் வழிவரைபடத்தினை வகுக்க முடியும். பங்குதாரர் உரிமை மற்றும் உரிமையாளர் அடிப்படையிலான விரிவாக்கம் அதற்கு முக்கியமானது.

விவசாயம் வட மாகாணத்தின் இதயத்துடிப்பாக உள்ளது. ஆனால் எமது விவசாயிகள் குறைந்த விளைச்சல் மற்றும் இடைத்தரகர்களிடம் தங்கியிருக்கும் சூழலில் சிக்கியுள்ளனர். இதற்கான தீர்வு சிறந்த பயிர்களை வளர்ப்பது மட்டுமல்ல, அந்த மதிப்புச் சங்கிலியில் உரிமையாளராக மாறுவதுதான் இலக்காக இருக்க வேண்டும்.

நாம் ஒரு சங்கத்தில் ‘உறுப்பினர்’ என்ற நிலையிலிருந்து ஒரு வணிகத்தின் ‘பங்குதாரர்’ என்ற நிலைக்கு நகர வேண்டும். இந்தியாவின் ‘லிஜ்ஜத்’ மற்றும் ‘ரங்சுத்ரா’ மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு, வட மாகாணம் ‘பெண் உற்பத்தியாளர் நிறுவனங்களை’ நிறுவ வேண்டும். இந்த மாதிரியில், 1,090 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் வெறும் சேமிப்புக் குழுக்களாக மட்டும் செயற்படாமல், ஒரு மத்திய உற்பத்தி நிலையத்தின் பங்குதாரர்களாக மாறுகின்றன.

வவுனியாவின் மிளகாய் உற்பத்திப் பகுதிகள் அல்லது யாழ்ப்பாணத்தின் வெங்காய உற்பத்திப் பகுதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். தற்போது, பெண் விவசாயி தனது அறுவடையை ஒரு வியாபாரியிடம் விற்பனை செய்து, அதன் மீதான அவரது நேரடியான கட்டுப்பாட்டை இழக்கிறார்.

ஆனால் ‘பங்குதாரர் மாதிரியில்’, அவர் தனது விளைச்சலின் ஒரு பகுதியை ‘வடக்கு வாசனைத் திரவிய நிறுவனத்திற்கு’ வழங்குகிறார். அதற்குப் பதிலாக, அவருக்கு அந்த நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படுகின்றன. அந்த நிறுவனம் மிளகாயை அரைத்து, தூள் உள்ளிட்ட வேறுவேறு வடிவங்களில் மாற்றி, கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கும்போது, அவருக்கு இலாபப்பங்கு அதிகமாகக் கிடைக்கிறது. அந்த வகையில் அவர் வெறும் தொழிலாளி அல்ல. அவர் அந்த வர்த்தக நாமத்தின் பங்குடைமை உள்ள உரிமையாளர்.

மேலும், நாம் வியட்நாமின் ‘பாதுகாப்பான காய்கறி’ சங்கிலி முறையைப் பார்த்து ‘உரிமையாளர் அடிப்படையிலான விவசாயத்தை’ நடைமுறைப்படுத்தலாம். மாகாணசபை, பெண்கள் அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக குறிப்பிட்ட ‘பாதுகாப்பான பண்ணை’ தரநிலையை சான்றிதழ் அளிக்க முடியும். இந்தத் தரம் பங்குடைமையாகிறது. அதிக மதிப்புள்ள சந்தையை அணுக விரும்பும் எந்தவொரு பெண் விவசாயியும், தமது உற்பத்திகளில் இரசாயணக் கலப்படமற்ற கடுமையான நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பங்குடைமை முறைமையில் இணையலாம்.

பதிலுக்கு, அவருக்கு அந்த வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தும் உரிமை, கூட்டுறவுச் சங்கத்தால் கொள்வனவு உறுதி மற்றும் விசேட விலை ஆகியவை பெற்றுக்கொள்ள முடியும்.

பங்குதாரர் மற்றும் பங்குடமை மாதிரிகள் நடைமுறை ரீதியாக வெற்றிகரமாக செயற்பட வேண்டுமானால், வடக்குப் பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் சொத்துக்களுக்குப் பொருத்தமான, அதிக சாத்தியமுள்ள செயற்பாடுகள் அவசியமாகின்றன.

1. ‘கொல்லைப்புற’ விவசாய வணிகம் (வீட்டு அடிப்படையிலான நாற்று மேடைகள்) நிலப் பற்றாக்குறை ஒரு பெரிய தடையாக உள்ளது. இருப்பினும், வியட்நாமின் வீட்டுத் தோட்ட மாதிரி இதற்குத் தீர்வை வழங்குகிறது. பெண்கள் தங்கள் கொல்லைப்புறங்களை வெறும் நுகர்வுக்காக மட்டுமல்லாமல், வணிக ரீதியான நாற்று மேடைகளாகப் பயன்படுத்தலாம். மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இதற்கான விதைகள் மற்றும் தொழில்நுட்பத்தை (குசயnஉhளைந முவை) வழங்கும். பெண்கள் வீட்டில் வளர்க்கும் நாற்றுகளை மீண்டும் கூட்டுறவுச் சங்கத்திடமே விற்பனை செய்வார்கள். இது ஒரு சிறிய கொல்லைப்புறத்தை அதிக லாபம் தரும் நுண்-தொழிலாக மாற்றுகிறது.

2. ‘அசல் யாழ்ப்பாண சமையல்’ பிரான்சைஸ் பாரம்பரிய தமிழ் உணவுகளுக்கு உலகளாவிய ரீதியில் பெரும் தேவையுள்ளது. கேரளாவின் ‘குடும்பஸ்ரீ’ (முரனரஅடியளாசநந) மாதிரியை நாம் இங்கு பயன்படுத்தலாம். ‘யாழ்ப்பாணம் டிலைட்ஸ்’ (லுயடியயயெஅ னுநடiபாவள) போன்ற ஒரு பொதுவான வர்த்தக நாமத்தின் கீழ், பெண்கள் தங்கள் வீடுகளில் சுகாதாரமான முறையில் சிற்றுண்டிகள், ஊறுகாய்கள் மற்றும் கறி பேஸ்ட்களைத் தயாரிக்கலாம். இவை சேகரிக்கப்பட்டு கொழும்பில் அல்லது புலம்பெயர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

3. பனைசார் புத்தாக்க ஆய்வகம் (குழு அடிப்படையிலான செயலாக்கம்) பனை மரம் வடக்கின் வாழ்வாதாரமாகும். இந்தியாவின் லிஜ்ஜத் மாடல் காட்டுவது போல, அதிக உழைப்பு தேவைப்படும் வேலைகளைக் குழுக்களாகச் செய்யலாம். 10-15 பெண்கள் கொண்ட குழுக்கள் ஒடியல் மாவு தயாரித்தல், பனம் வெல்லம் மற்றும் வினிகர் தயாரித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம். இவர்கள் ஒரு பெரிய ‘வடக்கு பனை நிறுவனத்தின்’ (ழேசவாநசn Pயடஅலசயா ஊழஅpயலெ) ஒரு பகுதியாகச் செயல்படுவார்கள்.

4. சூழல் சுற்றுலா மற்றும் கைவினைப் பட்டறைகள் சுற்றுலா என்பது வெறும் தங்குமிடத்துடன் முடிந்துவிடக் கூடாது. பனை ஓலை பின்னுதல், குரோஷே வேலைப்பாடுகள் அல்லது பாரம்பரிய மட்பாண்டக் கலை போன்றவற்றைச் சுற்றுலாப் பயணிகளுக்குக் கற்றுக்கொடுக்கும் பட்டறைகளை (றுழசமளாழிள) பெண்கள் தங்கள் வீடுகளிலேயே நடத்தலாம்.

5. டிஜிட்டல் சேவை மையம் (ர்ழஅந-டீயளநன டீPழு) வடக்கின் அதிக கல்வியறிவு விகிதத்தைப் பயன்படுத்தி, கிராமங்களுக்கே அலுவலகங்களைக் கொண்டு வரலாம். தரவு உள்ளீடு (னுயவய நவெசல), மொழிபெயர்ப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க மேலாண்மை போன்ற வேலைகளைப் பெண்கள் தங்கள் கிராமங்களிலுள்ள மையங்களில் இருந்தோ அல்லது வீடுகளில் இருந்தோ செய்யலாம்.

சுற்றுலாத்துறையில் வியட்நாமின் ‘சபா’ (ளுயிய) பிராந்தியத்திலுள்ள ஹோம்ஸ்டே மாதிரியைப் பின்பற்றி, வடக்கில் ‘யாழ் பாரம்பரியத் தங்குமிடங்கள’ என்ற பங்காண்மை கட்டமைப்புக்களை உருவாக்கலாம்.

இதில் இணையும் வீடுகளுக்குச் சுகாதாரம் மற்றும் தரம் குறித்த தரநிலைகள் வழங்கப்படும். இதன்மூலம் ஒரு கிராமப்புறப் பெண் தனது வீட்டை தொழில்முறை ஹோட்டலின் பகுதியாக மாற்ற முடியும்.

இது சுற்றுலாப் பயணிகளிடையே அதிக நம்பிக்கையை உருவாக்குவதுடன், அதன்மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் நேரடியாகப் பெண்களைச் சென்றடையச் செய்யும்.

இந்தியாவின் ‘சேவா ரூடி’ மாதிரியைப் பின்பற்றி, பெண்களால் நிர்வகிக்கப்படும் ஒரு விநியோக வலையமைப்பை உருவாக்க வேண்டும். மாதர் சங்கங்கள் மத்திய உற்பத்தி மையத்தை உருவாக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றன. கிராமங்களிலுள்ள பெண்கள் ‘நுண்-விநியோகஸ்தர்களாக’ மாறி, அப்பொருட்களைத் தங்கள் கிராமங்களிலேயே விற்பனை செய்வார்கள்.

இதுவொரு சுழற்சிப் பொருளாதாரத்தை உருவாக்கி, கிராமத்தின் பணம் கிராமத்திலேயே தங்குவதை உறுதி செய்யும். அது வாழ்வாதார மேம்பாடையும் பெற்றுக்கொடுக்கும்.

நிதி வசதி இல்லாமையே பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் மிகப்பெரிய தடையாகும். இந்தியாவின் ‘மான் தேஷி’ மாதிரியைப் பின்பற்றி, மாதர் சங்கத்தலைவிகளை வங்கியின் ‘வணிகத் தொடர்பாளர்களாக’ மாற்றலாம்.

அவர்கள் மடிகணினி மூலம் கிராம மக்களுக்கே வங்கிச் சேவைகளை வழங்குவார்கள். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவர்களுக்கு தரகுப் பணம் கிடைக்கும். இது அவர்களுக்கு கௌரவமான வருமானத்தை வழங்கும்.

இந்தியாவின் ‘குடும்பஸ்ர்;’ மாதிரியின் வெற்றிக்கு அது உள்ளுராட்சி மன்றங்களுடன் சட்டப்பூர்வமாக இணைக்கப்பட்டதே காரணமாகும். வடமாகாணத்திலுள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் பிரதேச சபைகளுடன் முறையாக இணைக்கப்பட வேண்டும்.

சமூகக் குளிரூட்டும் அறைகள் அல்லது சந்தைக் கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களில் மாதர் சங்கங்கள் பங்குகளை வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பெண்கள் அரசின் நிதி உதவிக்காகக் காத்திருக்காமல், உள்ளுர் பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மாறுவார்கள்.

இலங்கையின் வட மாகாணம் ஏற்கனவே மிகக் கடினமான காலங்களைக் கடந்துவிட்டது. வடக்குப் பெண்கள் பல தசாப்த கால மோதல்கள் மற்றும் பொருளாதார இன்னல்களுக்கு மத்தியிலும் தங்கள் குடும்பங்களை ஒன்றிணைத்து வைத்திருப்பதன் மூலம் தங்கள் மீள்திறனை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். இப்போது அவர்களுக்குத் தேவைப்படுவது பரிதாபம் அல்ல, வாய்ப்பு மட்டுமே.

வியட்நாமின் மதிப்புச் சங்கிலி முறை, இந்தியாவின் கூட்டு நிதி மற்றும் சமூக நிறுவன மாதிரிகளைப் பங்குதாரர் உரிமை மற்றும் கூட்டாண்மை தரப்படுத்தலுடன் இணைப்பதன் மூலம், புதிய பொருளாதார சக்தியை எம்மல் உருவாக்க முடியும்.

1,090 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இந்தப் புரட்சிக்கான ஏவுதளங்களாக இருக்கட்டும். 1,138 கூட்டுறவுச் சங்கங்கள் செயலாக்கஷ ஒரு பெண்ணிடம் ஒரு திட்டமும், சந்தையும், குரலும் இருந்தால், அவளே வளர்ச்சியின் மிக வலிமையான சக்தி என்பதை உலகுக்கு நிரூபிப்போம்.

Leave A Comment