பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக 23-03-2026 முதல் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள்சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய பாண் ஒன்றின் புதிய விலை 130 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், ஏனைய சிற்றுண்டிகளின்  விலையும் 10 ரூபாவால் உயர்வடையும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய சூழல் காரணமாக பேக்கரி கைத்தொழில் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு உற்பத்தியாளர்களும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக  கடந்த காலங்களில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரித்திருந்தோம்.   

எனினும் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இரண்டு கட்டங்களாக லீட்டருக்கு 100 ரூபாவுக்கும்  அதிகமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை  தொழிலை கடுமையாக பாதித்துள்ளது.  சகல பேக்கரிகளிலும் டீசலில் இயங்கும் மின அடுப்புகளே  பயன்படுத்துகின்றன.

இந்நிலையில் டீசலைப் பெற்றுக்கொள்வதும் பெரும் சிரமமாக உள்ளது. அதேபோன்று, உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் வாகனங்களுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன. எரிபொருள் விலை உயர்வால் இறக்குமதி செய்யப்படும் ஏனைய மூலப்பொருட்களின் விலையும் சடுதியாக உயர்ந்துள்ளன.  

முட்டையின் விலை 39 ரூபா வரை அதிகரித்துள்ளது.  பேக்கரி உற்பத்திக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுபவையே.. அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. கோதுமை விலை அதிகரிக்காத போதிலும், ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதால் இந்தத் தொழிலைக் கொண்டு நடத்த விலை அதிகரிப்பு  அவசியம் என்றார். 

Leave A Comment