இலங்கை மின்சார சபைக்கு 38.7 பில்லியன் ரூபா நட்டம்
- Editor
- May 2, 2026
- பொருளாதாரம்
- பொருளாதாரம்
- 0 Comments
மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட 2025 வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி மாதத்திலும் மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 20 சதவீதத்தால் மேலும் குறைக்கப்பட்டன.
2025 முதல் காலாண்டில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்து, வெப்ப மின் உற்பத்தி அதிகரித்தது. இதனால் மின் உற்பத்திச் செலவு உயர்வடைந்தமை மின்சார சபையின் நிதிச் செயற்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஏற்பட்ட நிதி இழப்புகளை ஈடுகட்டும் நோக்கில் 2025 ஜூன் மாதத்தில் மின்சாரக் கட்டணங்கள் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், திரட்டப்பட்ட நட்டங்களை ஈடுசெய்ய அந்த உயர்வு போதுமானதாக இருக்கவில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் 174.3 பில்லியன் ரூபாவாக இருந்த இலங்கை மின்சார சபையின் குறுகிய காலக் கடன்கள் மற்றும் பொறுப்புகள், 2025ஆம் ஆண்டு இறுதியில் 206.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளன. அதே காலப்பகுதியில் நீண்ட காலப் பொறுப்புகள் 409 பில்லியன் ரூபாவிலிருந்து 411.2 பில்லியன் ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது காலாண்டின் மின் விநியோகச் செலவு மற்றும் வருமான முன்கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, 2026 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன.
2025ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியுடன் மின்சாரத்திற்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது, ஒட்டுமொத்த மின் விற்பனை 2025ஆம் ஆண்டில் 5.8 சதவீத வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டுப் பிரிவினரின் மின் தேவை இரண்டாவது காலாண்டிலிருந்து வலுவான வளர்ச்சியை எட்டியது.

