வர்த்தகக்கொள்கையால் சிறந்தவேலைவாய்ப்புகளைஉருவாக்கமுடியுமா?

நிலுபுலீ ரத்நாயக்க

1977ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச சந்தைக்காக  தனது கதவுகளைத் திறந்தபோது, வர்த்தகத் தாராளமயமாக்கல் செழிப்பையும், புதிய தொழில்துறைகளையும், பாதுகாப்பான வேலைவாய்ப்புகளையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இருந்தபோதும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகியும், அதன் யதார்த்தம் இன்னும் மிகவும் சிக்கலானதாகவே உள்ளது.

வர்த்தகம், பொருளாதாரத்தின் சில பகுதிகளை மாற்றியமைத்திருந்தாலும், ஒரு கசப்பான உண்மை இன்றும் தொடர்கிறது: இலங்கையின் உழைக்கும் சக்தியில் கிட்டத்தட்ட 70 சதவீதமானோர் இன்றும் முறைசாரா தொழில்களில் (Informal Jobs) சிக்கியுள்ளனர். அதாவது சட்டப்பூர்வ ஒப்பந்தங்கள், சமூகப் பாதுகாப்பு அல்லது நம்பகமான பாதுகாப்புகள் ஏதுமற்ற நிலையில் அவர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆடைத் தொழிற்சாலைகள், கிராமப்புற தொழிற்பட்டறைகள் முதல் சிறு அளவிலான உற்பத்தி நிலையங்கள் வரை இத்தகைய நிலையை காணலாம். இவை பெரும்பாலும் நிலையற்ற குறைந்த ஊதியம் கொண்ட  மற்றும் சுரண்டப்படும்போது தொழிலாளர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பையும் வழங்காதவையாகும்.  இந்தப்பின்னணியில் வர்த்தக விரிவாக்கம் ஏன் பாதுகாப்பான வேலைவாய்ப்புகளுக்கு வித்திடவில்லை ? இலங்கையின் எதிர்காலத்திற்கு இது என்ன பொருளைத் தருகிறது?என்பது குறித்து பின்வரும் ஆய்வு விளக்கமளிக்கிறது.

நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியத்தின் ‘ பேரண்டப்  பொருளாதாரக் கொள்கை மற்றும் சமூகப் பொருளாதார உரிமைகள்’ ஆய்வுத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட ஆய்வு இதற்குச் சில பதில்களை வழங்குகிறது. “இலங்கையின் உற்பத்தித் துறையில் வர்த்தகக் கொள்கையும் முறைசாரா வேலைவாய்ப்பும்” எனும் தலைப்பிலான அவரது ஆய்வுக் கட்டுரை, 2014 முதல் 2021 வரையான காலப்பகுதியில் தீர்வை வரிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவை பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு வடிவமைத்தன என்பதை ஆராய்கிறது.

உலகளாவிய பொருளாதார ஒருங்கிணைப்பு தானாகவே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்ற ஊகங்களை இந்த ஆய்வின் முடிவுகள் சவாலுக்கு உட்படுத்துகின்றன. சரியான பாதுகாப்புகள் இன்றி மேற்கொள்ளப்படும் வர்த்தகச் சீர்திருத்தங்கள் சமத்துவமின்மையைக் குறைக்காமல், அதை மேலும் ஆழப்படுத்தும் என்பதையும் இது உணர்த்துகிறது.

வர்த்தகக் கொள்கையும்

முறைசாரா யதார்த்தமும்

பொருளாதாரக் கோட்பாடுகளும் யதார்த்தமும் பொதுவாக, வர்த்தகத் தாராளமயமாக்கல் மற்றும் இறக்குமதி வரிகளைக் குறைப்பது ஒரு நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்று பொருளாதாரக் கோட்பாடுகள் கூறுகின்றன. ஆனால், இந்த வேலைகள் பாதுகாப்பானவையா அல்லது ஆபத்தானவையா என்பது, சந்தை மாற்றங்களுக்கு நிறுவனங்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதிலேயே தங்கியுள்ளது

பாதுகாக்கப்பட்ட தொழில்துறைகளும் முறைசாரா வேலைகளும் அதிக இறக்குமதி வரி விதிப்பின் மூலம் சர்வதேசப் போட்டியிலிருந்து பாதுகாக்கப்படும் உள்நாட்டுத் தொழில்துறைகளில், ‘முறைசாரா வேலைகள்’ அதிகமாக இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உலகளாவிய போட்டி இல்லாததால், இத்தகைய நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களை நோக்கி நகராமல், செலவைக் குறைப்பதற்காக ஒப்பந்தங்கள் அல்லது சலுகைகள் இல்லாத தொழிலாளர்களைப் பணியமர்த்துகின்றன. மாறாக, வரி குறைப்பால் சர்வதேசப் போட்டிக்கு முகம் கொடுக்கும் துறைகள், தங்களை நவீனப்படுத்திக் கொள்வதுடன் முறையான வேலைவாய்ப்புகளையும் வழங்குகின்றன.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் முரண்பட்ட தாக்கம் இந்த ஆய்வின்படி, இறக்குமதி அதிகரிப்பது முறைசாரா வேலைவாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறது. வெளிநாட்டுப் பொருட்களின் வருகையால் உள்நாட்டு நிறுவனங்கள் தமது தரத்தையும் செயல்திறனையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவதே இதற்குப் காரணமாக இருக்கலாம்.

ஆனால், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஏற்றுமதி அதிகரிக்கும் போது முறைசாரா (பாதுகாப்பற்ற) வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இது உலகளாவிய பொதுவான போக்குக்கு முற்றிலும் முரணானது.

இலங்கையின் தனித்துவமான நிலைமை உலக நாடுகளில் ஏற்றுமதித் துறைகள் பொதுவாக சர்வதேச தரக்கட்டுப்பாடுகளுக்கு அமைய முறையான வேலைவாய்ப்புகளை வழங்கும். ஆனால், இலங்கையின் ஆடைத் தொழிற்சாலை போன்ற பிரதான ஏற்றுமதித் துறைகள், இன்னும் ‘துணை ஒப்பந்தங்கள்’ மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களையே நம்பியுள்ளன.

இதனால், ஏற்றுமதி வருமானம் அதிகரித்தாலும், தொழிலாளர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்குப் பதிலாக, குறைந்த ஊதியம் மற்றும் எந்நேரமும் பறிபோகக்கூடிய தற்காலிக வேலைகளே அதிகம் உருவாகின்றன. இது இலங்கையின் ஏற்றுமதித் துறை இன்னும் ‘நெகிழ்வான மற்றும் குறைந்த செலவு உழைப்பை’ மட்டுமே சார்ந்து இருப்பதைக் காட்டுகிறது.

நெருக்கடியால்

ஏற்பட்ட தாக்கம்

கோவிட்-19 பெருந்தொற்று இதில் மற்றொரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. 2020-2021 காலப்பகுதியில், தீர்வை வரிகளுக்கும் முறைசாரா வேலைவாய்ப்புக்கும் இடையிலான வழமையான தொடர்பு முறிவடைந்ததை ரத்நாயக்கவின் ஆய்வு கண்டறிந்துள்ளது. நெருக்கடி காலத்தில் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் போராடியதால், தொழிலாளர்கள் பெருமளவில் பாதுகாப்பற்ற முறைசாரா வேலைகளுக்குத் தள்ளப்பட்டனர்.

பொருளாதார நெருக்கடிகள், கடன் நிலுவைகள் அல்லது நாணயச் சரிவு ஏற்படும்போது, முறையான சமூகப் பாதுகாப்பு வலைகள் இல்லாத நிலையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களே முதலில் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

முறைசாரா வேலையின் மனித விலை

இலங்கையின் முறைசாரா உழைப்புச் சந்தையின் விளைவுகள் வெறும் பொருளாதாரத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. இது அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியம் சார்ந்தது. முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், காப்புறுதி அல்லது வேலையின்மை நன்மைகள் கிடைப்பதில்லை. அவர்கள் ஒரு தொழிற்சங்கமாகத் திரண்டு பேரம் பேசவோ அல்லது அநீதி இழைக்கப்படும்போது நீதி கோரவோ முடிவதில்லை.

இதில் பெண்களே அதிக சுமையைச் சுமக்கிறார்கள். ஆடைத் தொழில் மற்றும் சிறு அளவிலான உற்பத்திகளில் ஆண்கள் விட பெண்களே முறைசாரா முறையில் அதிகம் பணியமர்த்தப்படுகின்றனர். இதனால் வர்த்தக மாற்றங்கள் நிலவும் பாலின சமத்துவமின்மையை மேலும் ஆழமாக்குகின்றன.

அதேபோல், கொழும்புக்கு வெளியிலுள்ள கிராமப்புறத் தொழிலாளர்களும், குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்களும் முறையான வேலைவாய்ப்புகளைப் பெற முடியாமல் முறைசாரா வேலைகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இது அந்த குடும்பங்களை வறுமைச் சுழற்சியிலேயே வைத்திருக்கின்றது.

என்ன மாற்றங்கள் தேவை?

வர்த்தகத் தாராளமயமாக்கல் மட்டும் தரமான வேலைகளைத் தராது என்பதை ரத்நாயக்கவின் ஆய்வு தெளிவுபடுத்துகிறது. உலகளாவிய சந்தையுடன் இணைவது மக்களைச் சுரண்டுவதற்குப் பதிலாக அவர்களை மேம்படுத்த வேண்டுமானால், வர்த்தகக் கொள்கைகள் தொழிலாளர் பாதுகாப்புடன் கைகோர்க்க வேண்டும்.

அவர் முன்வைக்கும் சில பரிந்துரைகள்:

  • தொழிலாளர் பாதுகாப்புடன் கூடிய வர்த்தகச் சீர்திருத்தம்: சந்தைகளைத் திறக்கும்போது நியாயமான ஒப்பந்தங்கள், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் உழைப்புத் தரநிலைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • சமூகப் பாதுகாப்பு வலைகளை வலுப்படுத்தல்: வேலையின்மை நன்மைகள், சுகாதாரக் காப்புறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும், குறிப்பாக நெருக்கடி காலங்களில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஏற்றுமதித் துறைச் சீர்திருத்தம்: ஆடைத் தொழில் போன்ற துணை ஒப்பந்தங்களை அதிகம் நம்பியிருக்கும் துறைகளில் முறையான கண்காணிப்பு அவசியம். சிறு உற்பத்தியாளர்கள் முறையான கட்டமைப்பிற்குள் வர ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
  • நெருக்கடி காலக் கொள்கைகள்: பொருளாதார அதிர்ச்சிகளின் போது முறைசாரா வேலைவாய்ப்பு திடீரென அதிகரிப்பதைத் தடுக்க அவசரகாலப் பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

நீதிக்கான ஒரு கேள்வி

வர்த்தகக் கொள்கை என்பது வெறும் பொருளாதார விவகாரம் மட்டுமல்ல, அது நீதி மற்றும் உரிமைகள் சார்ந்த விடயமாகும். கண்ணியமான வேலைக்கான உரிமை என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சமூகப் பொருளாதார உரிமையாகும். ஆனால் இலங்கையில், பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

இலங்கை பொருளாதார மீட்சியை நோக்கிப் பயணிக்கும் வேளையில், நாம் எவ்வளவு வர்த்தகம் செய்கிறோம் என்பது மட்டுமல்ல, எத்தகைய நிபந்தனைகளின் கீழ், யாருடைய உழைப்பில் அந்த வர்த்தகம் நடக்கிறது என்பதே முக்கியமான கேள்வியாகும். வர்த்தகமானது வெறும் இலாபத்திற்காக மட்டுமல்லாமல், மக்களின் உரிமைகளுக்காகவும் கண்ணியத்திற்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆய்வை முழுமையாக பார்வையிட https://neelan.org/macroeconomic-_policy/

Leave A Comment