தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13க்குள் தீர்வு காணப்பட வேண்டும் மரிக்கார் எம்.பி. செவ்வி
- Editor
- June 26, 2026
- கருத்துக்கள்
- கருத்துக்கள்
- 0 Comments
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் ஊடாக, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் வரம்புகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எமது தலைவர் சஜித் பிரேமதாச உறுதியாக உள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
- கேள்வி: நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? மக்கள் மத்தியில் நிலவும் உண்மையான மனநிலை என்னவாக இருக்கிறது?
பதில்: தற்போதைய அரசியல் சூழலை பற்றி மிகவும் சுருக்கமாகச் சொல்வதானால், அது ஏமாற்றமும் கொந்தளிப்பும் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, ஆட்சி மாற்றங்கள் ஊடாகத் தங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று மக்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனால், இன்று சாதாரண நடுத்தர வர்க்க மற்றும் ஏழை மக்களின் நாளாந்த வாழ்க்கைச் சுமை குறையவில்லை.
அரசாங்கம் மேலோட்டமான புள்ளிவிபரங்களைக் காட்டி பொருளாதாரம் சீரடைந்துவிட்டதாகப் பிரசாரம் செய்கிறது. ஆனால், சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கும் தாய்க்குத்தான் தெரியும் உண்மை நிலை என்னவென்று. வரிகள், மின்சாரக் கட்டணங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் சாமானிய மனிதனின் கைக்கு எட்டாத தூரத்தில்தான் இன்னமும் இருக்கின்றன. எனவே, தற்போதைய அரசியல் சூழல் என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், மாற்று அரசியல் தலைமைத்துவத்திற்கான தேடலையும் கொண்டதாகவே நகர்கிறது.
- கேள்வி: அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியிருப்பதாகக் கூறுகிறதே? இந்த அணுமுறையை நீங்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள்?
பதில்: சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது தவறு என்று நாம் கூறவில்லை. எமது தலைவர் சஜித் பிரேமதாச ஆரம்பத்திலேயே ‘முறையான அணுமுறையுடன்’ அங்கு செல்ல வேண்டும் என்று தான் கூறினார். ஆனால் தற்போதைய அரசாங்கம் என்ன செய்கிறது? நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, மக்களின் தலையில் பாரிய வரிச்சுமைகளை ஏற்றியுள்ளது. உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த அதீத நேரடி மற்றும் மறைமுக வரிகள், நாட்டின் நுகர்வுச் சக்தியை முற்றாக அழித்துவிட்டன.
மக்களிடம் பணம் இருந்தால்தான் சந்தையில் வர்த்தகம் நடக்கும், தொழிற்சாலைகள் இயங்கும். அரசாங்கம் வருமானத்தை அதிகரிக்க ஒரே வழி ‘மக்களின் பொக்கெட்டுகளுக்குள் கையை வைப்பதுதான்’ என்று நினைக்கிறது. உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவிக்காமல், ஏற்றுமதியை அதிகரிக்காமல் வெறும் வரிகள் மூலமும், உள்நாட்டுச் சொத்துக்களை விற்பதன் மூலமும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதாகக் கூறுவது தற்காலிகமான மாயை மட்டுமே.
- கேள்வி: அப்படியாயின், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் மாற்றுத் தீர்வுகள் என்ன?
பதில்: எங்களிடம் மிகத் தெளிவான, நடைமுறைச் சாத்தியமான பொருளாதாரக் கொள்கைவகுப்பு இருக்கிறது. எமது பொருளாதாரக் குழுவில் சர்வதேச ரீதியில் அனுபவமிக்க நிபுணர்கள் இருக்கிறார்கள். எமது தீர்வுத் திட்டம் மூன்று முக்கிய தூண்களைக் கொண்டது:
முதலாவதாக, கடுமையான வரிச் சீர்திருத்தம். நியாயமற்ற வரிவிதிப்பைக் குறைத்து, நடுத்தர வர்க்கத்தினரையும் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களை வேண்டும்.
இரண்டாவதாக, ஏற்றுமதி உந்துதல் கொண்ட உற்பத்திப் பொருளாதாரத்தை முன்னெடுத்தல். ஆடை கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம், மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். குறிப்பாக, டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இளைஞர்களை வழிநடத்த வேண்டும். வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவான ஊழலற்ற, வெளிப்படையான முதலீட்டுச் சூழலை உருவாக்க வேண்டும்.
மூன்றாவதாக, சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னலாகும். பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு முறையான, அரசியல் தலையீடுகளற்ற தகுதியான மானியங்கள் மற்றும் நலன்புரித் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
- கேள்வி: நீங்கள் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் இளைஞர்கள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். தற்போதைய கல்வி முறையும், இளைஞர்களின் நாட்டை விட்டு வெளியேறும் போக்கும் பெரும் சவாலாக இருக்கிறதே?
பதில்: இது மிகவும் வேதனையான விடயம். நாட்டில் மூளைச் சாவே இன்று நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று நாட்டின் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதற்கு காரணம் தற்போதைய அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு எதிர்கால நம்பிக்கை அற்றதே ஆகும்.
- கேள்வி: அரசாங்கத்தின் மீதான உங்களது பிரதான விமர்சனங்களில் ஒன்றாக ‘ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ காணப்படுகிறமைக்கான காரணம் என்ன?
பதில்: இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது ஊழலை ஒழிப்பதாகக் கூறித்தான் வந்தது. ஆனால் இன்று என்ன நடக்கிறது? மருந்துக் கொள்வனவு ஊழல் தொடக்கம் சீனி, பூச்சிக்கொல்லி இறக்குமதி வரை பல்வேறு துறைகளில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு என்பது சாதாரண பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும், அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வேறு விதமாகவும் பிரயோகிக்கப்படுகிறது.
போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றனவே தவிர, போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவரும் பிரதான சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான சுயாதீன ஆணைக்குழுக்கள் மூலம், அரசியல் தலையீடுகளின்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். திருடப்பட்ட மக்கள் பணம் நாட்டிற்குள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி மிகவும் உறுதியாக இருக்கிறது.
- கேள்வி: சிறுபான்மையின மக்களின் (தமிழ், முஸ்லிம்) அரசியல் அபிலாஷைகள் மற்றும் தேசிய நல்லிணக்கம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன?
பதில்: ஐக்கிய மக்கள் சக்தி என்பது அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கும் ஒரு தேசியக் கட்சியாகும். இலங்கை என்ற ஒற்றையாட்சிக்குள் பல்லினத் தன்மையை அங்கீகரிப்பதே எமது கொள்கை. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் ஊடாக, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் வரம்புகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எமது தலைவர் உறுதியாக உள்ளார்.
அதேபோல், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் தனித்துவமான பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள், வாழ்வாதார சவால்கள் தீர்க்கப்பட வேண்டும். இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் நடத்தும் காலம் முடிந்துவிட்டது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அனைத்து இன மக்களும் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சமத்துவமாக வாழக்கூடிய ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காகும்.

