சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள்தொடர்பில் தவறான செய்திகள்; நிதி பிரதியமைச்சர்
- Editor
- September 28, 2026
- பொருளாதாரம்
- பொருளாதாரம்
- 0 Comments
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 7 ஆம் கட்ட மீளாய்வுக்கு முன்னதாக நடாத்தப்பட்ட தொழில்நுட்பக்குழு கலந்துரையாடல்கள், விவாதங்கள் குறித்து சில ஊடகங்கள் தவறாக விளக்கமளிக்கும் வகையிலான செய்திகளைப் பிரசுரித்திருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 7 ஆம் கட்ட மீளாய்வு மற்றும் உறுப்புரை 4 தொடர்பான இவ்வாண்டுக்கான கலந்தாய்வு என்பன நாட்டுக்கு வருகைதந்திருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 7 ஆம் கட்ட மீளாய்வை நிறைவுசெய்வதற்கு அவசியமான தேவைப்பாடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்குரிய பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று நேற்று முன்தினம் புதன்கிழமை (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள பிரதியமைச்சர் அனில் பெர்னாண்டோ, ‘இந்த விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் அடுத்தகட்ட நிதியை விடுவிப்பது தொடர்பான 7 ஆம் கட்ட மீளாய்வுக்கு முன்னர் நடாத்தப்பட்ட தொழில்நுட்பக்குழுக் கூட்டமானது, 7 ஆம் கட்ட மீளாய்வுக்கான இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தை என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் பற்றிய அறியாமை அல்லது புரிதலின்மையின் விளைவாகவோ அல்லது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்குவதற்காகவே மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சியாகும்’ என தெரிவித்துள்ளார்.
அதேவேளை உள்ளக மற்றும் வெளியகக் காரணிகளால் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டு வருமானத்தைத் திரட்டுவதற்கும், அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு அவசியமான வெளிநாட்டுக் கையிருப்புக்களைத் திரட்டுவதற்கும் அரசாங்கம் வலுவான நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு மேற்படி நடவடிக்கைகளின் பலன்களை மக்கள் அனுபவித்துவரும் தற்போதைய சூழ்நிலையில், அவை மேலும் விரிவாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மக்களைத் தவறாக வழிநடத்தும் செய்தியறிக்கைகளைப் பொறுப்பற்ற முறையில் பரப்புவது நாட்டுக்கு இழைக்கும் தீங்காகும் எனவும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

