நாட்டின் முன்னிருக்கும் சவால்களும் இம்முறை ஜனாதிபதி தேர்தலும்…

பல்வேறு விடயங்களினால் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும்.  நான்கு வருடங்களுக்குப் பின் நாம் முகம் கொடுக்கவுள்ள முதலாவது தேர்தல் இதுவாகும். இக்கூற்றின் பொருள் யாதெனில் கடந்த நான்கு வருட காலமாக நாட்டில் இடம்பெற வேண்டிய மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகியவை பல்வேறு காரணங்களினால் நடத்த முடியாமல் போயிருக்கும் சூழ்நிலையில், மக்கள் ஆணை எதுவென்று கண்டறிவதற்கான வாய்ப்பு இம்முறை ஜனாதிபதி தேர்தலின் ஊடாகவே வெளிப்படவுள்ளது. மேலும் வரலாற்றில் இடம் பெற்ற மிக பாரதூரமான பொருளாதார வங்குரொத்து நிலையை சந்தித்த இலங்கை வங்குரொத்து நிலையில் இருந்து மீள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கும் தருவாயில் இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமையால் இந்த ஜனாதிபதி தேர்தல் நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும்.

மேலும் சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டில் நிலையாக இருந்த எந்தவொரு அரசியல் கட்சியும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் கூட்டணிகளை உற்று நோக்கையில் அவற்றின் வரலாறு ஒரு தசாப்தத்தை கூட எட்டவில்லை என்பது புலப்படுகிறது. அதேபோன்று வரலாற்றில் முதல் முறையாக இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பதிலாக மும்முனை போட்டியாக இந்த தேர்தல் இடம்பெறவுள்ளது. எது எவ்வாறாக இருப்பினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என்பது எதிர்வரும் 5 வருட காலங்களுக்கான அரச தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான சந்தர்ப்பமாகும். மற்றுமொரு விதத்தில் இதை குறிப்பிட்டால் நாட்டின் எதிர்காலத்தின் போக்கையும் மக்களின் தலையெழுத்தையும் தீர்மானிப்பது இந்த ஜனாதிபதி தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பாக வெற்றிக்கொள்ள வேண்டிய மூன்று சவால்கள் எம்முன் இருப்பதால் இந்த சந்தர்ப்பம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதில் நாட்டை பொருளாதார வங்குரொத்து நிலையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை வெற்றிகரமான முடிவை நோக்கி கொண்டு செல்வதே மிகவும் இக்கட்டான மற்றும் பாரதூரமான சவாலாக அமைகிறது. அதை  இலகுவான சவாலாக கருத முடியாது. இந்நிலையை எதிர்கொண்ட ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் நாம் குறுகிய காலத்தில் பெற்றுக் கொண்ட முன்னேற்றத்தை எண்ணி சிறிதளவு மகிழ்ந்தாலும் எந்த விதத்திலும் இதை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த சவாலை கூட்டு முயற்சியின் ஊடாகவே வெற்றிக்கொள்ள முடியும். எதிர்வரும் காலத்தில் இப்பணிக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டிய கடமை இந்த தேர்தலின் ஊடாக வெற்றி பெறும் ஜனாதிபதிக்கே உள்ளது. இரண்டாவது சவாலாக அமைவது நாட்டினுள் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாகும். குறிப்பாக அண்மை காலங்களில் நாட்டில் இடம் பெற்ற பல்வேறு சம்பவங்களினால் நாட்டின் நிலையாக இருந்து வந்த கட்சி முறை தற்போது நலிவடைந்து போய் உள்ளது. சுதந்திரத்திற்கு பின் நாட்டிற்கு தலைமைத்துவம் வழங்கிய இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் நிலை மற்றும் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தங்களுக்கு காரணமாக இருந்த பாரம்பரிய இடதுசாரிகளின் வீழ்ச்சி போன்ற விடயங்களினால் கட்சி முறைக்கு பதிலாக தனிநபர் ஆளுகை மீது நம்பிக்கை வைப்பதற்கு மக்கள் முன் வந்திருப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்கும் நபர்கள் மீது பாரிய மரியாதை வைத்திருந்தாலும் நாடென்ற வகையில் கருத்தில் கொள்ளும்போது நாம் நம்பிக்கை வைப்பது கொள்கைகளின் மீதாகும். இதன் போது கொள்கை ரீதியாக மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஆற்றல் கட்சிகளுக்கே உள்ளது. மேலும் அதிக அரசியல் கட்சிகளின் செயற்பாடு ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அம்சமாக அமையும்.

ஒரு நாட்டை ஆட்சி செய்யும் போது ஒன்றிணைந்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். தனிநபரின் ஆதிக்கத்திற்கு வசப்பட்ட அனைத்து நாடுகளும் அழிவை மாத்திரமே சந்தித்துள்ளது என்பதற்கு ஒட்டுமொத்த உலக வரலாறும் சாட்சி அளிக்கின்றது.எமது நாட்டில் அமுலிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டியது புதிய ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் கடமையாகும். அதற்கு அமைய நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு புதிதாக பதவி ஏற்க உள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தக் கடமையை மக்கள் அவருக்கு வழங்குவதால் இந்த பாரதூரமான கடமை அவரால் நிறைவேற்றப்பட வேண்டும். தெரிவு செய்யப்படவிருக்கும் ஜனாதிபதிக்கு மற்றும் ஒரு பாரிய சவால் காத்திருக்கின்றது. நாட்டினுள் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்வது அவரின் கடமையாகும். சுதந்திரத்திற்கு பின்னரான 76 வருட காலத்தில் நாம் எவ்வித வளர்ச்சியும் பெறாத ஒரே துறை இதுவென்றும் குறிப்பிடலாம். பூரண தேசிய அரசை கட்டி எழுப்ப தவறியது எமது நாட்டின் பின்னடைவுக்கு காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. அதன் தாக்கத்தை தான் நாம் தற்போது அனுபவித்து வருகிறோம். சுதந்திரத்திற்கு பின்னர் நாம் பிளவு பட்ட இனமாகவே இருந்து வருகிறோம். அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இது பொறுப்பேற்க உள்ள புதிய அரச தலைவருக்கு காத்திருக்கும் மற்றுமொரு பாரிய சவாலாக குறிப்பிடலாம்.

மேலும் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான கடமை எமக்கு உள்ளது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் கடந்த மூன்று தசாப்தங்களை உற்று நோக்கையில் மகிழ்ச்சி அடையக் கூடியதாக இருக்கின்றது. ஏனென்றால் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் முறையை உறுதி செய்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதற்காக சிவில் சமூகங்கள் மேற்கொண்ட தலையிட்டையும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்ட வேண்டும். தேர்தலுக்கு முன் மற்றும் தேர்தலுக்குப் பின்னரான காலகட்டங்களில் சுமூகமான மக்கள் வாழ்வை உறுதி செய்ய வேண்டும். ஏற்படக்கூடிய நிலைகளை கருத்தில் கொண்டே நாம் இந்த வேண்டுகோளை முன் வைக்கின்றோம்.

ஏனென்றால் அரசியல் விமர்சகர்கள் பலர் முன்வைக்கும் கருத்தின் படி இம்முறை போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் நூற்றுக்கு 50% ம், மேலதிகமாக ஒரு வாக்கும் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போவதற்கான அதிக சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய சூழல் ஏற்பட்டால் இரண்டாவது விருப்ப வாக்கை  எண்ணுவதற்கான கட்டாயம் ஏற்படும். இதன்போது இரண்டாம் விருப்ப வாக்கை எண்ணுவதற்கு முன் முதலாம் கட்ட எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்து விடும். அதேபோன்று இரண்டாவது விருப்ப வாக்கை எண்ணுவதற்கு ஒரு தினத்துக்கு மேலதிகமான காலம் தேவைப்படலாம். அது எமது நாட்டிற்கு புதிய அனுபவமாக அமையும். மேலும் இரண்டாம் விருப்ப வாக்கை கணக்கெடுத்ததற்கு பின்,  முதலாம் சுற்றில் வெற்றியாளராக இருந்தவர் தோல்வியடைந்து, இரண்டாவது இடத்தில் இருந்த வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது. இந்த செயற்பாடுக்கு தேவைப்படும் கால எல்லையை கருத்தில் கொண்டு மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய உணர்ச்சிகளை கருத்தில் கொண்டு அனைத்து துறையினரும் பாரிய கவனம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்வின் அமைதிக்கும் நாட்டின் இருப்புக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது.

Leave A Comment