2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பற்றிய அபிப்பிராயங்கள்

எ ல்லோரும் நினைப்பது போலவே தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இலங்கையின் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நானும் பார்க்கிறேன்.

தமிழர் தமது சுயநிர்ணய உரிமை கேட்டுப் போராடிய கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசியல் கட்சிகளால் ஏமாற்றப்பட்ட நிலையில், இம்முறை ஒரு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

அவர் சார்ந்த கட்சியே பாராளுமன்றத்தையும் கைப்பற்றுமென்ற எதிர்பார்ப்பு இலங்கை அரசியல் வரலாற்றில் பெரியதொரு மாற்றம் நிகழ்வதற்கான அறிகுறியென சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழர்களில் கணிசமான தொகையினரும் நம்புகின்றனர்.

இது தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் மிக முக்கியமான காலகட்டம்.

எனது முன்னைய பதிவில் இலங்கை பாராளுமன்ற அரசமைப்பூடாக தமிழர்களால் தமது உரிமைக்கான போராட்டத்தில் வெற்றி பெற முடியாதென்ற யதார்த்த நிலையை வலியுறுத்தியிருந்தேன்.

1949ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை மிகத் தீவிரமாக போராடிய தமிழர்கள் தமது அரசியல் உரிமையை பெற முடியாத போதும் சகிப்புத்தன்மையுடன் தொடர்ந்து போராடி வந்தார்கள்.

இம்முறை 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல்வாதிகளால் எதுவுமே செய்ய முடியவில்லை, அவர்களை வீடுகளுக்கு அனுப்ப வேண்டுமென்ற கோஷம் எழுவதற்கான காரணம், தமிழர் தரப்பில் உதயமான புதிய தலைமுறையினரென்றே கருதுகிறேன்.

2009ஆம் ஆண்டு போர் முடிந்து பதினைந்து வருடங்களாகி விட்டன. அப்போது மூன்று வயதாக இருந்தவர்களுக்கு இப்போது பதினெட்டு வயதாகி, வாக்களிக்கும் தகுதியை பெற்று விட்டார்கள்.

தமிழர்களின் போராட்டம் பற்றிய மிக மங்கலான நினைவுகள்மட்டுமே அவர்களுக்கு இருக்கும்.

அவர்கள் உலகை அறியத் தொடங்கிய போது தமிழர்களின் தீவிரமான போராட்ட காலம் முடிந்துவிட்டது.

அவர்கள் முற்றிலும் வேறுபட்ட உலகத்தையே பார்க்கிறார்கள். ஊன்றிக் கவனிக்கும் போது தமிழர்களின் அரசியற்போராட்ட வரலாற்றையும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் இப்போதைய தலைமுறையினர் ஒரு தகவலாக மட்டுமே அறிந்துவைத்திருப்பார்கள். அதன் வலிகளை உணரமாட்டார்கள்.

எதிர்த்தரப்பினரின் நடவடிக்கைகள் மறுதரப்பினருக்கு ஏற்படுத்தும் இழப்புகளே ஒரு போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கான ஊக்கியாக இருக்கின்றன.

1958ஆம் ஆண்டு தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவிரோத நடவடிக்கைகள் ஏற்படுத்திய உயிர், உடைமை இழப்புகளும் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கோபமும் அவமான உணர்வும் தமிழருக்கான சுயநிர்ணய உரிமை கேட்டுப் போராடிய தமிழரசுக்கட்சியை வளர்த்தது.

1983ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழருக்கெதிரான மிகப்பெரும் வன்முறைகளே ஆயுதப் போராட்டமொன்றிற்கான உந்துசக்தியாக இருந்தது.

தமிழர்கள் உணர்வுபூர்வமாக அந்த ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

அந்தப் போராட்டத்தை அடக்குவதற்கு இலங்கை இராணுவம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் இன உணர்வையும் அவர்களுக்கான அரசியல் விடிவு வேண்டுமென்ற தாகத்தையும் தணியவிடாது வளர்த்தன.

ஆனால், இவை எவையுமே 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெறவில்லை. பொருளாதாரப் பிரச்சினை தவிர வேறெந்தப் பிரச்சினைகளுமின்றி வளர்ந்த புதிய தலைமுறையினரே தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றம் சென்று என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இந்த மனநிலை பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட மூத்தோரிடமும் காணப்படுகிறது.

மேலும், புலம்பெயர்ந்த தமிழர்களென்ற ஒரு புதிய தமிழர் சமூகம் உருவாகி, அவர்கள் நாடு திரும்பும்போது காட்டும் பகட்டையும் தாம் வேறோர் உலகத்திலிருந்து வந்தவர்கள்போல் தமது செல்வச் செழிப்பைக் காட்டும் நடவடிக்கைகளையும் பார்த்து ஏங்கும் அங்குள்ள இளம் சந்ததியினருக்கு, அரசியல், தமிழர் உரிமையெல்லாம் பெரிய விடயமாகத் தெரியவில்லை.

அவர்களது சமூக, பொருளாதாரப் பின்னடைவுகள் அவர்களுக்கு ஒருவித ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவேதான், தமது பொருளாதார அபிவிருத்திக்கு உதவாத, தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாத அரசியலும் அரசியல்வாதிகளும் தேவையற்றவையென்று உதாசீனம் செய்கிறார்கள்.

அதேநேரம், தமிழ்ப் போராட்ட வரலாறு தெரிந்த, அதன் தாக்கங்களை அனுபவித்த, தமிழருக்கான அரசியற்தீர்வு வேண்டிப் போராடும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மூத்த அரசியல்வாதிகள் பதவிப் போட்டிகளில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூக ஊடகங்களுக்கூடாக ஒருவருக்கொருவர் சேறுபூசி, எதிர் அரசியல்வாதிகளை அரசியலிலிருந்தே ஒதுக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதைப் பார்க்கும் புதிய சமூதாயத்தினர், பழையவர்கள் ஒதுக்கப்படவேண்டியவர்கள் என்ற கோஷத்தை முன்வைக்கிறார்கள்.

மூத்த அரசியல்வாதிகளோ அந்தக் கோஷம் தமக்கானதல்ல, தமது எதிர்த்தரப்பினருக்கானதென்று பாவனை செய்கிறார்கள்.

மூத்த அரசியல்வாதிகளை ஒதுக்கி புதிதாக அரசியல் செய்யவருபவர்களும் இந்திய தமிழ் சினிமாக்களால் உந்தப்பட்டவர்களாக ஊழல் ஒழிப்பைத் தமக்கான முக்கிய அரசியற்செயற்பாடாக நினைக்கிறார்கள்.

உண்மையில் இலங்கையில் நிர்வாகப் பதவிகளில் பணியாற்றியவர்களுக்குத் தெரியும், அங்கே ஊழலை ஒழிப்பதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக நடைமுறைகள் உள்ளன.

சட்டங்கள் உள்ளன. அவை சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அங்கு நிச்சயமாக ஊழலைத் தடுக்கலாம். அதை இப்போது புதிய ஜனாதிபதி மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது ஆட்சிக்காலத்தில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுமென்று நம்பலாம்.

எனவே, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று ஊழல் ஒழிப்பு சம்பந்தமாக செய்வதற்கு எதுவுமே இல்லை.

புதிய சமுதாயம் நினைப்பதுபோல் அரசியல் உரிமைப் பிரச்சினைகளை உதாசீனம் செய்துவிட முடியாது.

இப்போது ஏற்பட்டிருக்கும் புதிய சூழ்நிலையில் அதை சீர்செய்யாவிட்டால் தமிழர்களின் அரசியற்பிரச்சினை என்றென்றைக்குமே தீரப்போவதில்லையென்பதே உண்மை.

அது மட்டுமல்ல தமிழருக்கு பிற்காலத்தில் பாரதூரமான விளைவுகளும் ஏற்படலாம்.

இப்போதுள்ள நிலையில் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் அவர்களின் செறிவைக் குறைக்கும் விதத்திலான குடியேற்றங்கள் நடைபெறுவதை உடனடியாகத் தடுக்கவேண்டும். மற்றைய விடயங்களைப் படிப்படியாகக்கூட அணுகலாம்.

தமிழர்களின் உரிமைபற்றிய பிரச்சினை, இப்போது நடைமுறைக்கு வரவிருக்கும் பாராளுமன்றம்கூடி ஒரு வருடத்துக்குள்ளேயே தீர்க்கப்படவேண்டும்.

அதன் பின்னர் அத்தீர்வின் காரணமாக ஏற்படும் அரசியல் அமைப்புக்கமைய, அது நாம் எதிர்பார்க்கும் சமஷ்டி முறையிலான அரச அமைப்போ அல்லது பூரண அதிகாரங்களைக்கொண்ட மாகாணசபையாகவோகூட இருக்கலாம்.

மிக விரைவாகவே அவை இயங்கத் தொடங்கி, தமிழ்ப்பிரதேசங்களதும் தமிழ் மக்களதும் அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அதற்கு ஒரே இலக்கை நோக்கிய மிகப் பலம் வாய்ந்த தமிழர் பிரதிநிதித்துவம் இலங்கைப் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டும்.

அத்தனை பிரதிநிதிகளும் தமிழர் உரிமை சம்பந்தமாக ஒரே நிலைப்பாட்டைக்கொண்டவர்களாக இருக்கவேண்டும். அங்கேயும் போய் ஏட்டிக்குப் போட்டியாக ஒருவரையொருவர் காலைவாரித் தமது முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்யாது ஒருமித்து நின்று தமிழர் உரிமைகளை இயன்றளவு நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

பாராளுமன்றத்தில் உறுதியாக நின்று வாதாடும் வல்லமையுள்ள, அரசியல் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த, சிங்கள அரசியல்வாதிகளிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளவர்கள் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

ஆகவே, தமிழர்களது அணுகுமுறை சவால் விடுவது, சண்டித்தனம் காட்டுவது, மூர்க்கமாக எதிர்த்துநின்றால்த்தான் தமிழ் மக்கள் தம்மைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் வீரம் பேசுவதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட்டு, கௌரவமான முறையில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவேண்டும்.

அரசியல் நுணுக்கங்கள், பேச்சுவார்த்தை நடைமுறைகள் அறிந்தவர்களால்த்தான் அத்தகைய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளமுடியும்.

தமிழ் அரசியல்வாதிகள் சாத்தியமற்ற அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து மக்களிடையே வீரத் தலைவர்களாகலாமென்று எண்ணி செயற்படுவதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

ஏனெனில், தமிழ்த் தேசியத்தை வைத்து நீண்டகாலம் அரசியல் செய்யமுடியாதென்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கி விட்டன.

தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழ்ப்பொதுமக்களும் புலம்பெயர்ந்த தமிழ்க் குழுக்களும் தேர்தலை ஒரு பொழுதுபோக்கான விளையாட்டாகக் கருதிக் குழப்பிவிட்டுக் கூத்துப் பார்க்காமல் நிலைமையின் தீவிரத்தன்மைய உணர்ந்து செயற்படவேண்டும்.

இம்முறை தேர்தல் களத்திலே அரசியலில் குதித்துள்ள சிலரது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது நிலத்திலும் புலத்திலும் வாழும் தமிழர்களில் சொற்ப தொகையினர் எமது மிகத் தீவிரமான அரசியலை விளையாட்டாக நினைப்பதுபோலத் தெரிகிறது.

இந்த நடவடிக்கைகள் மூலம் பிழையானவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றுவிட்டால் அது வேலியில்போன ஓணானை மடியில் கட்டிய கதையாக முடிந்துவிடும். மிகுந்த அவதானமாக செயற்பட வேண்டும்.

தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்தம் அரசியல் பிரச்சினையை அடுத்த வருடத்திற்குள் தீர்த்து, அபிவிருத்தி அரசியலில் உடனடியாகவே ஈடுபடத் தொடங்கா விட்டால் தமிழ்த் தேசியம் என்ற நிலைப்பாட்டுக்குப் பெரும் ஆபத்து காத்திருக்கிறதென்றே கூறமுடியும்.

அடுத்த ஐந்து வருடங்களின் பின்னர் இடம்பெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலின் போது, போர் முடிந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்கள் இருபது வயதை அடைந்து விடுவார்கள். அந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெறப் போகும் அவர்கள் தமிழ்த் தேசிய உணர்வுக்குப் பெரும்பாலும் அந்நியப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

தமிழர்களின் அரசியல் தீர்வு அடுத்த வருடத்துக்குள் எட்டப்படா விட்டால் 2029ஆம் ஆண்டில் வாக்களிக்கவிருக்கும் பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தமிழ்த் தேசியம் என்பது ஒரு தேவையற்ற விடயமாகவே இருக்கப் போகிறது.

அவர்கள் தமது தமிழ் அரசியற் தலைவர்களை புறக்கணித்து, தமது வாழ்க்கை வளம்தேடி இலங்கைத் தேசியக் கட்சிகளுடன் நேரடியாகவே இணைந்து செயற்படும் சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. அதற்கான அறிகுறிகள் இந்தத் தேர்தலிலேயே தெரியத் தொடங்கி விட்டன.

வரப்போகும் காலத்தில் புலம்பெயர்ந்தவர்களிலும் மிகச் சொற்பமாக எஞ்சியிருக்கக்கூடிய முதல் தலைமுறையினர் மட்டுமே பணத்தை கையூட்டாகக் கொடுத்து இலங்கையிலே தமிழ்த் தேசிய அரசியலை நிலைநாட்ட முயன்றாலும் அது பலன் தரும் முயற்சியாக இருக்காதென்பதே உண்மை.

இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் தமிழ் மக்கள் தமது எல்லைகளை மீறி, அரசியல் கட்சிகளில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டு மேலும் பிளவுகளை உண்டாக்கி கட்சிகளை சீரழிக்காமல், தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை கையாளக்கூடியவர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதிலேயே தமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

கட்சிப் பிரச்சினைகளைக் கட்சிகளே தீர்த்துக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் யாவும் சுபமாக அமையும்.

Leave A Comment