ஈஸ்டர் உண்மை தொடக்கமாக அமையமுடியும்
கலாநிதி ஜெகான் பெரேரா
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு இலங்கை அரசியலுடன் ஒரு உறவுமுறை இருக்கிறது என்ற ஊகம் நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களிலும் முஸ்லிம் தற்கொலைக் குண்டுதாரிகளினால் அனேகமாக ஏககாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 270 பலியானதுடன் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகினர். இரு மதங்களுக்கு இடையிலான முரண்நிலை வரலாற்றை இலங்கை கொண்டிருக்கவில்லை என்பதால் அந்த குண்டுத் தாக்குதல்களை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அந்த படுமோசமான குற்றச்செயல்களினால் பயனடைந்திருக்கக் கூடியவர்கள் யாராக இருக்கும் என்ற அடிப்படையில் அரசியல் நோக்கம் ஒன்று குறித்து சந்தேகிக்கப்பட்டது.
குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து அன்று பதவியில் இருந்த அரசாங்கத்துக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டது. எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். சில மாதங்களில் நடைபெற்ற தேசிய தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்தது.
அன்று இடம்பெற்ற அரசாங்க மாற்றத்துக்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட அரசியல் தந்திரோபாயம் ஒன்றை சபை முதல்வர் பிமால் இரத்நாயக்க கடந்தவாரம் பாராளுமன்றத்தில் வெளியிட்டார். அந்த குண்டுத் தாக்குதல்கள் வெறுமனே ஒரு புலனாய்வுத் தோல்வியல்ல, அரசியலில் இருந்தவர்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் விளைவாகவே அவை இடம்பெற்றன என்ற சந்தேகத்துடன் பொருந்தியதாக அவரது கருத்துக்கள் இருந்தன.
அரசாங்க உயர்மட்டத்தினால் தெளிவாகவும் உத்தியோகபூர்வமாகவும் இப்போது கூறப்படுவதே அந்த சந்தேகத்தைப் பொறுத்தவரை, புதிய விடயமாகும். ” புலனாய்வு அமைப்புகளின் ஊடாக சிங்கள தீவிரவாதக் குழுக்களையும் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களையும் தோற்றுவித்து பேணியதன் மூலமாக 2013 ஆம் ஆண்டில் அவர்கள் இதை ஆரம்பித்தார்கள். அதன் முடிவு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா சம்பவத்தை ஒத்ததாக இருந்தது” என்று அமைச்சர் பிமால் இரத்நாயக்க கூறினார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா கம்பனி ஊழல் என்பது அரசியல் நோக்கங்களுக்காக வாக்காளர்களை இலக்குவைத்து உளவியல் சுயவிபரங்களை சேகரிப்பதற்கு முகநூலைப் பயன்படுத்தும் இலட்சக் கணக்கானவர்களின் தனிப்பட்ட தரவுகளைை அதிகாரமற்ற முறையில் பெறுவதுடன் சம்பந்தப்பட்டதாகும். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவினால் பெறப்ப்பட்ட தரவுகள் முக்கியமாக டொனால்ட் ட்ரம்புக்கு அனுகூலமான முறையில் 2016 அமெரிக்க தேர்தலிலிலும் ஐக்கிய இராச்சியத்தில் 2016 பிரெக்சிட் சர்வஜனவாக்கெடுப்பிலும் செல்வாக்கு செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டன. அந்த கம்பனி வாக்காளர்களின் நடத்தைகளை சூழ்ச்சித்தனமாக மாற்றியமைப்பதற்கு உளவியல் சுயவிபரங்களையும் டிஜிட்டல் விளம்பரங்களையும் பயன்படுத்தி கென்யா, நைஜீரியா, இந்தியா, டிரினிடாட் அன்ட் ரொபாகோ மற்றும் பல்வேறு நாடுகளின் தேர்தல்களிலும் செயற்பட்டது.
கார்டினலின் உறுதியான நிலைப்பாடு
ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று நிரூபிக்கப்படுமானால், அவை இலங்கையில் போரின் முடிவுக்கு பின்னரான காலப் பகுதியில் அரசியல் நோக்கங்களுக்காக வன்முறை பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான — நெறிமுறைகெட்ட உதாரணங்களாக அமையும். அரசியல் அதிகாரத்துக்கு மீண்டும் வருவதற்கு வழிவகுப்பதற்கு பீதியையும் மரணத்தையும் அழிவையும் பயன்படுத்துவது என்பது அறவே ஏற்றுக்கொள்ள முடியாததும் மனச்சாட்சியே இல்லாத காரியமுமாகும்.
அத்தகைய ஏற்றுக் கொள்ளமுடியாத செயற்பாடுகளை கையாளுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் இருந்து தற்போதைய தருணத்தை வேறுபட்டதாகக் காட்டுவது அரசியல் துணிவாற்றல் இருப்பது போன்ற தோற்றப்பாடேயாகும். விளைவுகளோ அல்லது தாக்கங்களோ அதிகாரத்தின் உயர் மட்டங்களை எட்டுவதாக இருந்தால் கூட, விசாரணைகளை தொடருவதில் தற்போதைய அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருக்கிறது என்ற உணர்வு காணப்படுகிறது.
ஓய்வுபெற்ற அதிகாரிகளான ஷானி அபேசேகரவையும் ரவி செனவிரத்னவையும் மீண்டும் நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை முக்கியமாகக் கவனிக்கக்கூடியதாகும். அந்த இரு உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளும் முன்னைய அரசாங்கங்களினால் விசாரணை செயற்பாடுகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள். இப்போது அவர்கள் மீண்டும் விசாரணைகளை முன்னெடுக்கப் போகிறார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் இறுதிக்கட்டங்களில் அரசாங்கத் தரப்பின் அரசியல் மேடைகளில் ஏறியதன் மூலம் அவர்கள் இருவரும் சர்ச்சைக்குரியவர்களாக நோக்கப்பட்டார்கள். கார்டினல் மல்கம் ரஞ்சித் விடுத்த வேண்டுகோளைக் காரணம் காட்டி அவர்கள் இருவரும் மீண்டும் நியமிக்கப்பட்டதை அமைச்சர் பிமால் இரத்நாயக்க நியாயப்படுத்தினார். இந்த பின்புலத்திலேயே, நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்தின் அக்கறை குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தின் நம்பிக்கையை பெறுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும் என்று நிலையுறுதியாக வலியுறுத்துவதில் கத்தோலிக்க திருச்சபையும் கார்டினல் மல்கம் ரஞ்சித்துவம் வகித்துவரும் பாத்திரம் மெச்சத்தக்கது. குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கார்டினல் குரல் கொடுத்துவருகிறார். வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மை கொண்ட விசாரணைையையும் கோருவதிலும் குண்டுத் தாக்குதல்களுக்கு உண்மையில் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதிலும் கார்டினல் எந்த விதமான தடுமாற்றமும் இன்றி தொடர்ச்சியாக உறுதியாக இருந்து வருகிறார்.
கார்டினலின் இந்த நெருக்குதல் காரணமாக பல வருடங்களாக முன்னைய அரசாங்கங்களின் தலைவர்கள் குண்டுத் தாக்குதல்களின் குறாறவாளிகளையும் சூத்திரதாரிகளையும் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தார்கள். அதை கார்டினலும் வரவேற்றார். ஆனால், முன்னைய பல உறுதிமொழிகளைப் போன்றே அந்த உறுதிமொழிகள் நடைமுறையில் எந்த உருப்படியான பயனையும் தரவில்லை.
தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவருதல்
பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஏற்கெனவே முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் ஒரு நேரத்தில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றத்தை காணக்கூடியதாக இருக்கிறது. முன்னர் பலம் பொருந்தியவர்களாக இருந்த அரசியல்வாதிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுககப்பட்டு வருகின்றன. இது முன்னர் ஒருபோதுமே நாம் கண்டிராத நிலைவரமாகும். அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் இருப்பவர்கள் குற்றச் செயல்களுக்காக தண்டனையை அனுபவிக்காமல் இருந்துவந்த நடைமுறை பல தசாப்தங்களாக நீடித்து வந்தது.
பொருளாதாரக் குற்றங்களிலும் அரசியல் வன்முறையிலும் ஈடுபடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அரசாங்கத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக அரைமனதுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்த ஒரு போக்கை கடந்த காலத்தில் கண்டோம். குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்கள், ஆனால் நடவடிக்கைகள் இடைநடுவில் கைவிடப்பட்டு சந்தேகநபர்கள் பெரும்பாலும் விடுதலை செய்யப்படடார்கள். ஆனால், தற்போது குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றங்களில் துரிதமாக விசாரணை செய்யப்பட்டு முன்னுதாரணமான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை பொறுத்தவரை, உயிர்தப்பியவர்களின் சாட்சியங்களும் புலனாய்வுத் தவறுகள் தொடர்பிலான விபரங்களும் தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. பிள்ளையான் போன்று முன்னர் துணை இராணுவக் குழுவினராக இருந்து அரசியல்வாதிகளாக மாறியவர்கள் உட்பட முக்கியமான சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்னிறுத்தும் நடவடிக்கைகள் இனிமேலும் பெயரளவிலானவையாக இருக்கப்போவதில்லை என்பதை காட்டுகின்றன.
இந்த விவகாரத்தில் தற்போது காணப்படுகின்ற உத்வேகம் தணிந்து போகாமல் இருப்பதை உறுதிசெய்வது அரசாங்கத்துக்கு ஒரு சவாலாக இருக்கப் போகிறது. சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புக்கள் தலையீடுகளின்றி இயங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். எந்தளவுக்குத்தான் அரசியல் ரீதியில் உணர்ச்சிபூர்வமானதாக இருந்தாலும், இலங்கை மக்களுக்கு பதில்கள் முக்கியமாக நீதி தேவைப்படுகிறது.
தண்டனையின்மை கலாசாரம் ஒன்றினால் இலங்கை பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த கலாசாரம் அவநம்பிக்கையையும் வெறுப்பு மனப்பான்மையையும் வளர்த்திருக்கிறது. அந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் மிகவும் முன்கூட்டியே நடவடிக்கைகளைை எடுத்திருக்கிறது. அதனால் முழுமையான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்குமா என்பதை இப்போதே கூறிவிடமுடியாது.
முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயங்களை பொறுத்தவரை அரசாங்கத்திடம் ஒரு நிரல் ஒழுங்கு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. முதலில் பொருளாதாரக் குற்றங்கள், பிறகு இப்போது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் போன்ற அரசியல் குற்றங்கள் ; அடுத்து சாத்தியமானால் போர்க்குற்றங்கள். போர்க்காயங்கள் ஆழமானவையாகவும் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன. போர்க்கால துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கத்திடம் தற்போது இருப்பதாக தோன்றுகின்றதை விடவும் கூடுதலான அளவுக்கு அரசியல் மூலதனம் தேவை. அத்தகைய நடவடிக்கைகள் நாளடைவில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுக்கப்படக் கூடும்.
செம்மணி மனிதப் புதைகுழிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, முன்னைய அரசாங்கங்கள் மன்னார் மற்றும் மாத்தளை மனிதப் புதைகுழிகள் விடயத்தில் நடந்து கொண்டதைப் போலன்றி, தற்போதைய அரசாங்கம் நீதி விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படுவதை அனுமதிக்கின்றது போன்று தெரிகிறது. செம்மணி விசாரணை முன்னெடுக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படுவதை பார்க்கின்றபோது முற்றுமுழுதான தண்டனையின்மை யுகம் முடிவுக்கு வருகின்றது என்பதற்கும் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்பதற்குமான சமிக்ஞைகளை காணக்கூடியதாக இருக்கிறது.
ஆறு வருடங்களாக திருப்திகரமான முடிவைக் காணமுடியாமல் இருக்கும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்
போன்ற ஒரு குற்றச்செயல் வெற்றிகரமான முறையில் விசாரணை செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படுமானால், போர்க் காலப்பகுதி உட்பட கடந்த காலத்தை ஆழமாக துருவி ஆராய்வதற்கான வெளி திறக்கப்படக்கூடும். இதைச் சாத்தியமாக்குவது சுயாதீனமான நிறுவனங்கள், நீதித்துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றின் ஊக்கத்திலேயே தங்கியிருக்கிறது

