இந்தியா-இலங்கை அறிவு பகிர்வு   கூட்டாண்மையின் தேவை ஏன்?

ஜீவன் தியாகராஜா

இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5சதவீதம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு கையிருப்புகள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் இலக்குகளையே மீறி முதன்மையான மிகை நிலை அடையப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2022இன் வீழ்ச்சி கடந்த காலமாகிவிட்டது போல் தெரிகிறது. ஆனால் தேயிலைத் தோட்டப் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தையோ, முல்லைத்தீவில் வசிக்கும் ஒரு தாயையோ, இந்த மீட்சி அவர்களை எட்டிவிட்டதா என்று கேட்டால், பதில் வேறுபட்டதாகவே இருக்கும்.

தேசியளவில் ஐந்தில் இரண்டு குடும்பங்கள் போதிய உணவு பெறவில்லை. இலங்கையில் ஐந்தில் ஒருவர் இந்தாண்டு உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோட்டப்புறப் பகுதியி;ல் வாழும் குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உணவு பாதுகாப்பின்மையில் உள்ளன. ஐந்தில் ஒரு பாடசாலை மாணவருக்கு மேல் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் காணப்படுகின்றன.

நெருக்கடிக்குப் பின்னரான ஓராண்டில் வறுமை விகிதம் 11சதவீதத்திலிருந்து 27.5சதவீதமாக உயர்ந்தது. இன்றும் அது 20சதவீத்துக்கு மேலேயே உள்ளது. நெருக்கடிகள் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னும் திறமையான தொழிலாளர்கள் இன்னும் வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலைமைதான் முக்கியமான இடைவெளியாகும். இலங்கை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என்பது அல்ல,  மாறாக, அந்த ஸ்திரத்தன்மை, அதற்கான விலையை அதிகம் செலுத்திய மக்களை எட்டும் மீட்சியாக மாறவில்லை என்பது தான் முக்கியமானது.

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவொர்க் சர்க்சியன் இந்த நிலைமையை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதுவரையிலான நாட்டின் பொருளாதார திருப்பம் உண்மையானது, ஆனால் அதை மீட்சியாகக் கருதுவது தவறாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவா கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவும் இக்கருத்தை வேறு வார்த்தைகளில் கூறியுள்ளார். ‘இலங்கையில் பணி முடிந்தது’ என்று அறிவிக்க இன்னும் நேரம் ஆகவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தனது வரலாற்றில் இத்தகைய நிலைமையைக் கடந்துள்ளது. 1991ஆம் ஆண்டில் கடுமையான கொடுக்கல்-வாங்கல் இருப்பு நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டது.

அதைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்கள் சீரற்றதாக இருந்தாலும் தொடர்ச்சியான வளர்ச்சி நிகழ்ந்தது. அதுவொரு தனி சீர்திருத்தத்தின் மீது அல்ல, ஒரு முறைமையின் மீது கட்டியமைக்கப்பட்டதாகும்.

முதலில் பெருமளவு ஸ்திரப்படுத்தல், பின்னர் ஏற்றுமதி சார்ந்த தொழில்துறை மற்றும் சேவைத் தொகுப்புகள், பின்னர் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பு, பின்னர் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பணத்தை உற்பத்தித் திறன் கொண்ட முதலீடாக மாற்றும் கருவிகள், பின்னர் வளர்ச்சி பின்தங்கிய பகுதிகளின் வேண்டுமென்றே மேம்பாடு என்பதாகும்.

இவை இந்தியாவின் பழங்கால வரலாறு அல்ல — அவை அண்மைக்கால அழியாத உதாரணங்களாகும். தற்போதைய சான்றுகளாகும். இந்த நிலைமை தான் இரு அரசுகளுக்கும் முன்னால் இருக்கும் உண்மையான வாய்ப்பாகும்.

மேலும் நாடுகளைப் பொறுத்தவரையில் இரு வேறுபட்ட வாய்ப்புக்களாகும். இந்தியா-இலங்கை உரையாடல் பெரும்பாலும் துறைமுகங்கள், மின் கட்டமைப்பு, முதலீட்டின் அளவு பற்றியே பேசுகிறது.

அவை முக்கியமனவை தான். ஆனால் இந்தியா இன்று வழங்கக்கூடிய மிகவும் மதிப்புமிக்க விடயம் மூலதனம் அல்ல. அதன் செயற்றிட்டமே ஆகும். வணிக மற்றும் முதலீட்டு டிஜிட்டல் மயமாக்கல், ஏற்றுமதி தொகுப்புகள், டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பு, புலம்பெயர்ந்தோர் முதலீட்டு கருவிகள், பின்தங்கிய பிராந்திய மேம்பாட்டு மாதிரிகள் — இவை இலங்கை அரசே தனக்கென நிர்ணயித்துள்ள முன்னுரிமைமிக்க விடயங்களுடன் ஏற்கனவே பொருந்துகின்றன.

இந்தக் கூட்டாண்மையை முதலில் நிரூபிக்க வேண்டிய இடம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளாகும். யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்கள் தமிழ்நாட்டிற்கு புவியியல், மொழி, உறவு என்று எல்லா வகையிலும் கொழும்பை விடவும் நெருக்கமானவை.

ஆற்றலுக்கும் வாய்ப்புக்கும் இடையேயான இடைவெளி இங்கு தான் மிகவும் கூர்மையானது. 90சதவீதத்துக்கும் அதிகமான கல்வியறிவு வீதம், தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் சரளம், ஆனால் இலங்கையின் இரு வறிய மாவட்டங்களும் வடக்கு,கிழக்கிலேயே உள்ளன.

இங்கு முக்கியமான முன்னுரிமைகள் பிரமாதமானவை அல்ல. உப்புத்தண்ணீர் ஊடுருவலை எதிர்கொள்ளும் தீவகத்தில் உணவு பாதுகாப்பும் காலநிலை தாங்கும் விவசாயமும் தமிழ் மொழியில் டிஜிட்டல் விரிவாக்க சேவைகள்; யாழ்ப்பாணத்தின் இளைஞர்கள் வெளியேற வேண்டாமல் வேலைவாய்ப்பு பெறும் திறன் மற்றும் டிஜிட்டல் தாiர் பாக்குநீரிணை மீனவர் பிரச்சினையை முன்நிபந்தனையாகத் தீர்க்கும் மீன்வள ஒத்துழைப்பு; மற்றும் கிராமப்புற மகளிர் சங்கங்களை செயலற்ற நிலையிலிருந்து பங்குதாரர்களாக மாற்றும் தொழில்முனைவு மாதிரிகள்.

இந்தக் கூட்டாண்மை பொதுமக்கள் கண்காணிக்கக் கூடிய பரிசோதனை வேண்டுமெனில், அது மத்திய வங்கி அங்கீகரித்த வடமாகாண முதலீட்டு நிதியமாக இருக்கலாம். புலம்பெயர்ந்தோர் மற்றும் நிறுவன மூலதனத்தை விவசாயம், நிதி தொழில்நுட்பம், சிறு தொழில்களில் ஈர்க்கும் கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டு வழிமுறையை உருவாக்க வேண்டும்.

ஓராண்டில் திரட்டப்படும் மூலதனம், மூன்றாண்டில் உருவாகும் தொழில்முயற்சிகள், உருவாகும் வேலைவாய்ப்புகள் — இவை வெளியிடப்பட்ட இலக்குகள். பெரிய உச்சிமாநாட்டு அறிக்கைகளைவிட, ஓராண்டில் வடக்கு-கிழக்கு மக்களின் கைகளில் மூலதனத்தையும் வருமானத்தையும் கொண்டுவருகிறதா இல்லையா என்பதே இந்தக் கூட்டாண்மையின் உண்மையான அளவுகோலாகும்.

தமிழ்நாட்டின் சொந்த அரசியலும் இதற்கு ஒரு சவாலாகும். — பாக்குநீரிணை மீன்பிடி பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார். ஆனாலும் தமிழ்நாட்டின் சொந்த உற்பத்தித் தளமும், அறுபது கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் ஏற்றுமதி சந்தையும் இதை தர்மமாக அல்ல, வணிக சுயநலமாகவே முன்வைக்க அனுமதிக்கின்றன. அதுவே இப்பிரச்சினை நீடித்து நிற்பதற்கான அடித்தளமாகும்.

ஆகவே இப்பிரச்சினையில் இருதரப்பு அணுகுமுறையின் வலிமை அதன் அவசரமின்மையில் உள்ளது. பெரிய அறிவிப்புகள் எதிர்வினைவுகளைத் தூண்டுகின்றன என்பதை கொழும்பு துறைமுக நகர அனுபவம் காட்டுகிறது.

அதை எதிர்த்த அரசே அதைத் தொடர்ந்தது, ஆனால் அடிப்படை அச்சம் தீர்க்கப்படாமலே இருந்தது. இதற்கு மாற்றாக, சிறிய, சரிபார்க்கக்கூடிய, பெருமளவில் அறிவிக்கப்படாத வெற்றிகள் காணப்பட்டன. ஒரு படகுப் போக்குவரத்து கால அட்டவணை சீராக இயங்குவது, ஒரு சிறிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணைப்பு — இவை மீண்டும் மீண்டும் நிகழும்போதே நம்பிக்கை உருவாகிறது. அரசு அறிவிப்பதற்கு முன் சுயேச்சையான குரல்கள் இதைப் பதிவு செய்யும்போது, அதற்கு அதிக நம்பகத்தன்மை கிடைக்கிறது.

வடக்கு-கிழக்கில் தொடரும் பொறுமை இன்னும் முக்கியமானது, ஏனெனில் பொருளாதார வளர்ச்சி மட்டும் போதுமானதாக இருக்காது என்பதால் தான் 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும், பதின்மூன்றாவது திருத்தத்தின் முழுமையான செயல்படுத்தலையும், தாமதமான மாகாண சபை தேர்தல்களையும் தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகாரப் பகிர்வு ‘இலங்கையின் சொந்த நலனுக்கே உகந்தது’ என்று இந்தியா ஐ.நா.வில் வெளிப்படுத்தியுள்ளது. பொருளாதார வளர்ச்சியை அரசியல் உறுதிமொழிகளுக்கு மாற்றாகக் கருதினால், அது வடக்கு-கிழக்கில் ஏமாற்றமாகவே தோன்றும்.

ஆகவே இருதரப்பு உறவுக்கு தேவையானது கொள்கையேயாகும். அறிவிப்புகளை விட பொறுமை. கொழும்பும் வடக்கு-கிழக்கும் வேறுவேறு உறுதிமொழிகளை எதிர்பார்க்கின்றன, ஆனால் இருவரும் வேண்டுவது ஒன்றேயாகும்.

அதாவது,  வாக்குறுதிகள் அல்ல, இலங்கைக்கு இன்னொரு நன்கொடையாளர் தேவையில்லை. தனது சொந்த நெருக்கடியைக் கடந்து, ஆண்டுக்கு ஆண்டு அதைச் செய்த விதத்தைக் காட்டக்கூடிய கூட்டாளர் ஒருவே தேவை. யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் எவ்விதமான பலாபலன்களை அளிக்கப்போகின்றது என்பதன் அடிப்படையில் இருதரப்பு உறவு மதிப்பிடப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.

Leave A Comment