இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை தீர்வுக்கான பேச்சுக்கள் தொடரும் அமைச்சரவைபேச்சாளார் நளிந்த ஜயதிஸ்ஸ
அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் செயற்படுவதற்கான வரையறைகள் உள்ளன. எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு 05-02-2025 இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மீனவர் பிரச்சினை நீண்ட காலமாக காணப்படும் ஒரு சிக்கலாகும். பல்வேறு அரசாங்கங்களின் கீழ் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட ஒரு பிரச்சினையுமாகும்.
இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கிடையில் அதிகளவில் பேசப்பட்ட, பேசப்படும் ஒரு பிரச்சினையாகவும் இது காணப்படுகிறது.
எமது அரசாங்கத்திலும் இந்த பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் என்ற ரீதியில் செயற்படுவதற்கான வரையறைகளும் உள்ளன.
கடற்படை அதன் சுற்றிவளைப்புக்களை அதிகரித்திருக்கிறது. அதற்கமையவே கைதுகளும் அதிகரித்திருக்கின்றன.
அதேவேளை மறுபுறம் பேச்சுவார்த்தைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களுக்குள் தீர்வினை வழங்க முடியும் என்று நாம் நம்பவில்லை.
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை கடற்படை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.
எமது கடல் வளங்களை எமக்கு நன்மை கிடைக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு, அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
அதனை அடிப்படையாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவோம் என்றார்.

