இலங்கையில் வரி வருமானம் 17.7 வீதம் அதிகரிப்பு; உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
- Editor
- April 22, 2026
- பொருளாதாரம்
- பொருளாதாரம்
- 0 Comments
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 606,002 மில்லியன் ரூபா (606 பில்லியன்) வரி வருமானத்தை ஈட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத வளர்ச்சியாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 2026 ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையான காலப்பகுதியிலேயே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. பிரதான வரி வகைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற அதிகப்படியான பங்களிப்பே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வருமான வரி, பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி என்பன இதில் உள்ளடங்கும்.
நாட்டின் பொருளாதார விரிவாக்கம், முறையான வரிக் கொள்கைகள் மற்றும் வரி நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்ட வினைத்திறன் மிக்க மாற்றங்கள் ஆகியவையே இந்த அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் சுயமாக முன்வந்து வரி செலுத்தும் முறை கணிசமாக மேம்பட்டுள்ளமை, வரி முறைமை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்காக அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட ஒட்டுமொத்த வருமான இலக்கில் சுமார் 25 சதவீதத்தை முதல் மூன்று மாதங்களிலேயே திணைக்களம் எட்டியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு திணைக்களம் தனது வரலாற்றில் அதிகூடிய வருமானத்தைப் பதிவு செய்திருந்த நிலையில், அந்த வேகத்தை 2026 இலும் தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரி செலுத்துபவர்கள் மற்றும் அரச, தனியார் துறையைச் சேர்ந்த பங்குதாரர்களின் ஒத்துழைப்பினால் தான் இந்த நேர்மறையான பெறுபேற்றை எட்ட முடிந்தது என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பி. எச். பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களிலும் இதே போன்ற வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் எனத் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

