எமக்கு சுமந்;திரனின் தேவை  ஒருபோதும் ஏற்படாது : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் செவ்வி

எமக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரனின் தேவை ஒருபோதும் ஏற்படாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி: மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன ஆகியோர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக காணப்படுகின்றமைக்கான காரணம் என்ன?

பதில்: மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக எந்தவிதமான குழப்பங்களும் இல்லை. தோழர் ரில்வின் சில்வா, மிகத்தெளிவாகவே கருத்துக்களை முன்வைத்தார். ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. சட்டத்தில் காணப்படும் சிக்கலை தீர்ப்பதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏற்பட்ட தித்வா அனர்த்தத்தினால் நாட்டில் 4.2பில்லின் டொலர்கள் பொருளாதார ரீதியான நட்டம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று யாரும் விரும்பாத அமெரிக்க, ஈரான் போர் முன்னெடுக்கப்படுவதால் நாட்டில் வெளியழுத்தங்களினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலைமையால் தான் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். அந்தக் கருத்துக்களை அவர் வெளிப்படுத்தியபோது நான் அருகிலேயே இருந்தேன். அவருடைய கருத்து தொடர்பில் புரிதல் இல்லாமல் எதிர்க்கட்சிகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப்பார்க்கின்றன.

கேள்வி: ஜே.வி.பியைப் பொறுத்தவைரயில் மாகாண சபை முறைமையை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கின்றதா?

பதில்: 1987 ஜுலை 29ஆம் திகதி இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது மாகாண சபை முறைமை என்பதொரு வெள்ளை யானை என்றும், ஆட்சியாளர்கள் தங்களது பிள்ளைகளையும் உறவினர்களையும் அடுத்த தேர்தலுக்கு தயார்ப்படுத்துவதற்கானவொரு தளமாகும் என்றும் அன்றே நாங்கள் கூறினோம். கடந்த கால அனுபவங்களில் நாம் கூறிய விடயத்தினை தவிர வேறெதுவும் சாதிக்கப்படவில்லை. மாகாண சபை முறைமையானது தமிழ் மக்களுக்கான நீண்ட நிலைத்திருக்கக்கூடிய தீர்வும் அல்ல. ஆனாலும், நிரந்தரமான தீர்வொன்று புதிய அரசிலமைப்பு உருவாக்கத்தின் ஊடாகவே, அல்லது யாப்பு திருத்ததின் மூலமாகவே எட்டப்படும் வரையில் மாகாண சபை முறைமையை தமிழ் மக்கள் தங்களுடைய உரிமையாக கருதுகின்றார்கள். அதனடிப்படையில் தான் ஜே.வி.பியும், தேசிய மக்கள் சக்தியும் இணக்கத்துடன் வெளிப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவோம் எனவும் அவற்றை அர்த்தபுஷ்டியான வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் கூறியுள்ளோம்.  மேலும் நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாகாண சபை முறைமையானது நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆகவே அதனை தவிர்த்துவிட முடியாது என்பது தான் எமது நிலைப்பாடாகும். 

கேள்வி: ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் ரில்வா ‘நிழல் அதிகார மையமாக’ இருக்கின்றார். இதனால் ரில்வின், அநுர என்ற ‘இரு அதிகார மையங்கள்’ காணப்படுகின்றது என்ற கருத்துக்கள் தீவிரமாகி வருகின்றனவே?

பதில்: அவற்றில் எந்தவொரு உண்மையும் கிடையாது. அவற்றை நிரகாரிக்கின்றேன். தோழர் ரில்வின் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர். கட்சியை கட்டியெழுப்புவதிலும், மக்களிடத்தில் அதனைக் கொண்டு செல்வதிலும் கருத்தியலை வளர்ப்பதிலும் அவருடைய வகிபாகம் மிகப்பெரியது. அதனைத் தவிர்க்க முடியாது. உதாரணமாக தற்போதைய அரசாங்கத்தில் அவர் நினைத்திருந்தால் அமைச்சுப்பதவிக்கோ அல்லது அதனை விடவும் அதிகாரமிக்க பதவிக்கோ வந்திருக்கலாம். ஆனால் அவர் அவற்றுக்கு ஆசைப்படவும் இல்லை. முயற்சிக்கவும் இல்லை. அவரது பங்களிப்பு அனைத்துச் செயற்பாடுகளிலும் காணப்படுகின்றது. ஜே.வி.பி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு என்றவகையில் நாட்டை சிக்கலில்லாது வழிநடத்துவதற்கான கூட்டச்செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

கேள்வி: கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுப்பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கை, இந்திய மீனவர்கள் விவகாரத்தில் எவ்விதமான முன்னேற்றத்தைக் கண்டிருக்கின்றீர்கள்?

பதில்: தமிழகத்தில் கடற்றொழிலில் இராஜாங்கம் செலுத்துகின்ற ஒருசில இராஜாக்களும் அவர்களின் கீழ் இயங்கும் குழுக்களும் இந்தியப் பெறுமதியில் இரண்டு முதல் ஐந்து கோடி வரையிலான இழுவை மடிப்படகுகளில் எங்களுடைய எல்லைகளைத்தாண்டி வந்து ஒட்டுமொத்த வளங்களையும் அழித்துச் செல்கிறார்கள். இதுவொரு ஏற்றுக்கொள்ளமுடியாத அநீதியான செயற்பாடுகளாகும். நான் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் 15 தடவைகளுக்கு மேலாக இந்திய அதிகாரிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். ஐ.நா.அதிகாரிகளிடத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போதும் அத்துமீறல்கள் தொடர்கின்றன. இவற்றையெல்லாம் செய்துவிட்டு செல்லும் வழியில் தொப்புள்கொடி உறவுகள் என்கிறார்கள். எமது மீனவர்கள் எல்லை தாண்டுகின்றபோது அவர்கள் சித்தவதை செய்யப்படுகின்றார்கள்.

அண்மையில் கூட அவ்விதமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. தமிழக மீனவர்கள் கேரள கடலுக்குள் செல்ல முடியாது. அவ்வாறான நிலையில் நாங்கள் மட்டும் இழித்தவாயர்களா? தமிழகத்தில் புதிய யுகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவர் சினிமாவில் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக செயற்பட்ட காட்சிகளைப் பார்த்திருக்கின்றோம். தற்போது நிஜயத்திலும் எமது கடல்வளங்களை கொள்ளையடிக்கும் நபர்களுக்கு எதிராக அவர் செயற்பட வேண்டும். அதற்காக அவரிடத்தில் தகவல்களை தரவுகளை பகிர்வதற்கு எதிர்பார்கின்றோம். விரைவில் அவரைச் சந்திப்பதற்கு எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: தமிழக முதல்வர் விஜயைப்பொறுத்தவரையில் கச்சதீவை மீளப்பெறுவது தான் இருநாட்டு மீனவர் விவகாரத்துக்கான தீர்வாக இருக்கும் என்று ஏலவே வெளிப்படுத்தியுள்ளார் அல்லவா?

பதில்: சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே கச்சதீவு இலங்கையிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழக முதலமைச்சர் விஜயாலோ, தமிழக அரசாங்கத்தாலோ அல்லது இந்திய மத்திய அரசாங்கத்தாலே யாராலோ அதனை மாற்றியமைக்க முடியாது. அவ்வாறு மாற்றியமைப்பதாக இருந்தால் இலங்கை அடிணிந்து, தலைகுனிந்து செல்லும் போக்கு இருக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கச்சதீவு விவகாரத்தையே கச்சைகட்டி ஓடுகின்றன. இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தைகளை நடத்தலாமே தவிரவும் கச்சதீவை மீளப்பெறுவதோ அல்லது கைப்பற்றுவதோ தமிழக முதலமைச்சருக்கு வெறும் பகற்கனவாகவே இருக்கும்.

கேள்வி: இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் விரைவில் அரசாங்கத்துக்கு எமது தேவை வரும் என்று வெளிப்படுத்தியுள்ள கருத்துகளின் பின்னணியை அறிவீர்களா?

பதில்: தேசிய மக்கள் சக்தியுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று கூறுகின்றார். தலைவைத்துப்படுக்கமாட்டோம் என்றும் கூறுகின்றார். ஆனால் மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுரவின் அருகில் நிற்கிறார், உரையாடுகின்றார். அதன் அர்த்தம் என்ன? எம்மைப்பொறுத்தவரையில் ஒருவிடயத்தினை உறுதியாகக்கூற முடியும். எமக்கு எவரினது உதவியும் தேவைப்படாது. எமக்கு 159பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களை அசைத்துக்கூடப்பார்க்க முடியாது. கட்சி தவுகின்றவர்களை தடுப்பதற்கான சட்டம் கொண்டுவருது சுமந்தரன் போன்ற எதிர்க்கட்சிகளைப் பாதுகாப்பதற்காகவே தான். அவர்கள் தான் கட்சி தாவுவதற்காக பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். மேலும் சுமந்திரனின் உதவி எமக்குத்தேவையில்லை. கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல் காலத்தில் அசிகங்கமான இனவாத அரசியலை அவர் முன்னெடுத்திருந்தார். ஆகவே அவருடன் எமக்கு ஒட்டுறவுவில்லை என்பதை தனிப்பட்ட முறையிலும் கூறுகின்றேன்.

Leave A Comment