எரிபொருள் கொடுப்பனவு கணக்கீட்டில் புதிய நடைமுடை; நிதி அமைச்சு அறிவிப்பு

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகள், இனிவரும் காலங்களில் மார்ச் 1 ஆம் திகதியன்று நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பலத்த வலுசக்தி நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், அரசாங்கத்தின் செலவீனங்களை முகாமை செய்வதற்காக எடுக்கப்பட்ட பரந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே அமைச்சரவையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் அளவுகளுடன் தொடர்புடைய ஏனைய கொடுப்பனவுகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்பதோடு, அவையும் இதே அடிப்படை விலையைப் பயன்படுத்தியே மீண்டும் கணக்கிடப்பட வேண்டும்.

அனைத்து திணைக்களங்களும் நிறுவனங்களும் தற்போதுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் எனவும், திருத்தப்பட்ட விதிகளின் கீழ் எரிபொருள் ஒதுக்கீடுகளும் கொடுப்பனவுகளும் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி நிலவும் இக்காலகட்டத்தில், அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், நிதி எல்லைகளைச் சமநிலைப்படுத்துவதையே இந்த மாற்றங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

—

Leave A Comment