செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் போட்டியில் இலங்கை மாறுபட்ட பாதை; மோதிலால் டி சில்வா
- Editor
- October 1, 2026
- பொருளாதாரம்
- பொருளாதாரம்
- 0 Comments
பல பில்லியன் டொலர்கள் மற்றும் எண்ணற்ற தரவு மையங்கள் மூலம் அளவிடப்படும் செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய போட்டித்தன்மையானது ஒரு ஆயுத ரீதியான போட்டியைப் போல் தீவிரமடைந்துவரும் தற்போதைய சூழ்நிலையில், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதையை இலங்கை தேர்ந்தெடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா டெலிகொம் குழுமத்தின் தலைவர் கலாநிதி மோதிலால் டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு குறித்துக் கருத்துரைத்துள்ள அவர், ‘செயற்கை நுண்ணறிவின் அடுத்த அத்தியாயம் என்பது பெருநிறுவனங்களுக்கு மாத்திரம் சொந்தமானதாக இருக்காது. மாறாக அது சமகால உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய செயற்திறன்மிக்க, திறமையான மற்றும் பணி குறிக்கப்பட்ட கட்டமைப்புக்களாலேயே வழிநடாத்தப்படும்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று தற்போது செயற்கை நுண்ணறிவு என்பது வெறுமனே ஒரு தொழில்நுட்ப முன்னேற்றமாக நோக்கப்படாமல், ஆளுகைக்கான சவாலாக நோக்கப்படும் ஒரு காலகட்டத்துக்குள் உலகம் நுழைவதாகவும் மோதிலால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
‘சுயாதீனமாகச் செயற்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டாளர் ஒருவர் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தினால், அதற்கான பொறுப்பாளி யார்? செயற்கை நுண்ணறிவானது பாரபட்சங்களை மேலும் ஊக்குவிக்காமல் இருப்பதை எவ்வாறு உறுதிசெய்வது? புதிய கண்டுபிடிப்புக்களை மேம்படுத்தும் அதேவேளை, பொதுமக்களின் தரவுகளை பாதுகாப்பது எப்படி?’ என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இவை வெறுமனே கல்வி சார்ந்த கேள்விகள் அல்ல என்றும், மாறாக இவை ஆளுகை சார்ந்த அத்தியாவசியத் தேவைகள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தமட்டில் எதிர்காலம் என்பது பாரிய கட்டமைப்புக்களைச் சார்ந்தது அல்ல. மாறாக அறிவுபூர்வமாக வடிவமைக்கப்பட்ட செயற்திறன்மிக்க கட்டமைப்புக்களைச் சார்ந்ததேயாகும். இலங்கையைப் பொறுத்தமட்டில் இதுவொரு வாய்ப்பாகும். எனவே நாம் உலகளாவிய ரீதியில் பாரிய செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புக்களை உருவாக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, இந்நாட்டு மக்கள், மொழிகள் மற்றும் யதார்த்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தீர்வுகளை அடைவதில் கவனம் செலுத்தவேண்டும்’ என்றும் மோதிலால் டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

