தங்கப் பிணையுறுதி மற்றும் மோட்டார் வாகன கடன் வசதிகளுக்கான உச்ச வரம்பு இறுக்கம்; இலங்கை மத்திய வங்கி
- Editor
- May 26, 2026
- பொருளாதாரம்
- பொருளாதாரம்
- 0 Comments
உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்சம் 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பு 10 சதவீதத்தினால் இறுக்கமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இம்மாதம் 25-05-2026அன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கொடுகடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பை அறிமுகப்படுத்துவதற்கும், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கொடுகடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்புகளைக் கடினமாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் அதிகாரத்தின்கீழ் முன்மதியுடைய கடன் வழங்கல் நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், நிதி நிறுவனங்களின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், முறைமை ரீதியிலான பாதிப்புக்கள் ஏற்படும் சாத்தியப்பாட்டினைக் குறைப்பதற்குமே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானங்களை மேற்கொள்ளும்போது தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்டு வழங்கப்பட்ட கடன்வசதிகள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான நிதியிடல் தொடர்பான கடன் வசதிகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள குறிப்பிட்டத்தக்க அதிகரிப்பும், இத்தகைய போக்குகள் தற்போதைய வடிவத்திலேயே தொடரும் பட்சத்தில் நிதியியல் முறைமையின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்களும் கருத்திற்கொள்ளப்பட்டன.
மாற்றமடைந்துவரும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளால் உருவாகியிருக்கும் நிச்சயமற்ற தன்மைகளுடன் அண்மைய செலாவணி வீத ஏற்றத்தாழ்வுகளும் தங்கம் உள்ளிட்ட சொத்து விலைகளில் தளம்பல்களைத் தோற்றுவித்துள்ளன.
வாகன இறக்குமதிகளுக்கான மேலதிகக் கட்டணத்தில் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பும், செலாவணி வீத மாற்றங்களும் வாகன விலைகளின் தற்காலிக அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் பிணையுறுதிகளின் மதிப்பீடுகளைப் பாதிக்கும் என்பதுடன், கொடுகடன் மதிப்பீடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். தொடர்ந்து அதிகரித்துவரும் கடன் விரிவாக்கம் நிதியியல் முறைமையில் மிதமிஞ்சிய இடர்நேர்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாட்டைத் தடுக்கவேண்டிய கட்டாயத்தைத் தோற்றுவித்துள்ளது.
அதன்படி உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற, நடைமுறைக்குவரும் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ புதுப்பிக்கப்படக்கூடிய கடன்வசதிகள் உள்ளடங்கலாக, தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்சம் 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பு 10 சதவீதத்தினால் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.

