பாதுகாப்பு பிரதியமைச்சரை பதவிநீக்கம் செய்யும் பிரேரணை கையளிப்பு

அருண ஜயசேகரவை பாதுகாப்பு பிரதி அமைச்சராக வைத்துக் கொண்டு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது பாராளுமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கை பலவீனமடைய செய்யும்.ஆகவே அவரை பதவி நீக்க வேண்டும் என்ற யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளித்துள்ளனர்.


பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் 12-08-2025அன்று சபாநாயகரை சந்தித்து நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தனர்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 32 பேர் கைச்சாத்திட்டுள்ளனர்.


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்ககோவையின் 3 ஆம் பிரிவு, 6ஆம் அத்தியாயத்தில் ‘ பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அவர் மீதான மக்கள் நம்பிக்கைக்கு அமைவாக செயற்பட வேண்டும்.அத்துடன் எந்நிலையிலும் பொது வளங்கள் பாவித்தல் உட்பட அவரது நடத்தை நேர்மையானதாக இருத்தல் வேண்டும்’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவையில் 9 ஆவது அத்தியாயத்தில் விதிமுறைகளில் ‘மனசாட்சிக்கு அமைவாக செயற்படல்,மக்களின் நம்பிக்கை மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் நடந்துக்கொள்ளல்,வகிக்கும் பொறுப்பு மற்றும் கடமைகளில் தொடர்பில் பொறுப்புக்கூறல்’ அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்ற உறு;ப்பினர்களின் ஒழுக்க நெறிமுறைகளை மீறியுள்ளமை தெளிவாக வெளிப்படுகிறது.அதேபோல் அரசியலமைப்பின் 28 ஆம் உப பிரிவுக்கமைய அடிப்படை பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு பிரதி அமைச்சர் தவறியுள்ளார் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மீது 15 குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது அருண ஜயசேகர கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக பதவி வகித்துள்ளார் என்பது பிரதான குற்றச்சாட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.



அருண ஜயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சராக பதவி வகிக்கின்ற நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது விசாரணைகள் மீதான நம்பிக்கையை மலினப்படுத்துவதாக அமையும்.


அருண ஜயசேகரவை பாதுகாப்பு பிரதி அமைச்சராக வைத்துக் கொண்டு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது பாராளுமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கை பலவீனமடைய செய்யும்.ஆகவே அவரை பதவி நீக்க வேண்டும் என்ற யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

Leave A Comment