புதிய மொந்தையில் பழைய ‘கள்’: மாறும் அரசாங்கங்களும் மாறாத அரசின் சிந்தனையும்
- Editor
- October 28, 2026
- விவரணங்கள்
- விவரணங்கள்
- 0 Comments
2026 தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் சட்ட வரைவு: குடிமக்கள் சமூகத்தை வலுப்படுத்துகிறதா அல்லது கட்டுப்படுத்துகிறதா?

சட்டத்தரணி. ஐங்கரன் குகதாசன்
இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பரந்த குடிமக்கள் சமூகத்தின் மீது அரசின் அணுகுமுறை தொடர்பான விவாதம் புதியதல்ல. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், யுத்த காலத்திலிருந்தே சமூக அமைப்புகள் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, வெளிநாட்டு தலையீடு மற்றும் பயங்கரவாத மீளுருவாக்கம் போன்ற காரணங்களின் ஊடாகவே பெரும்பாலும் அணுகப்பட்டுள்ளன.
யுத்தம் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் கடந்த பின்னரும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, காணி உரிமைகள், நினைவுகூரல் உரிமை மற்றும் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் செயற்படும் பல அமைப்புகள் பல்வேறு கண்காணிப்பு மற்றும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் குழுக்கள், காணி மீளப்பெறுதலுக்காக செயற்படும் சமூக அமைப்புகள் மற்றும் நினைவுகூரல் உரிமை தொடர்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள், குடிமக்கள் சமூகத்தின் சுதந்திரமான செயற்பாடு ஏன் முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகின்றன.
எனவே, தன்னார்வ சமூக சேவை அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டம் தொடர்பான விவாதம் வெறும் நிர்வாக அல்லது நிதி முகாமைத்துவம் தொடர்பான ஒன்றல்ல. அது அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான உறவை எவ்வாறு வரையறுப்பது என்ற அடிப்படை சனநாயகக் கேள்வியுடன் தொடர்புடையது.
2022ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம், இலங்கையின் அரசியல் கலாசாரத்திலும் ஆட்சிமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது. குறிப்பாக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி மற்றும் குடிமக்கள் பங்கேற்பு ஆகியவற்றை முன்னிறுத்தி ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், குடிமக்கள் சமூகத்திற்கான இடம் விரிவடையும் என்ற நம்பிக்கை பலரிடமும் இருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையும் சனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், மக்களின் பங்கேற்பை அதிகரித்தல் மற்றும் அரசின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்களை வலியுறுத்தியது. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் சட்ட வரைவு, அந்த வாக்குறுதிகளுக்கும் அரசின் ஒழுங்குமுறை அணுகுமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
தன்னார்வ சமூக சேவை அமைப்புகளின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, நிதி பொறுப்புணர்வு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் சட்டக் கட்டமைப்பு அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அரச சார்பற்ற அமைப்புகள் பெறும் நிதி, அவற்றின் நிர்வாக நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். பணமோசடி, மோசடியான நிதிச் சேகரிப்பு அல்லது சட்டவிரோத நிதி பரிமாற்றங்களை தடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஆனால், சனநாயக சமூகத்தில் ஒழுங்குமுறை என்பது கட்டுப்பாட்டிற்கு இணையானதாக இருக்க முடியாது. ஒரு சட்டத்தின் நோக்கம் அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றின் சுயாதீன செயற்பாட்டை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது.
முக்கியமான கேள்வி இதுதான்: இந்த சட்டம் குடிமக்கள் அமைப்புகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உருவாக்கப்படுகிறதா, அல்லது அவற்றை அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக உருவாக்கப்படுகிறதா?
2026 சட்டமூலத்தின் முகவுரை, அனைத்து அரச சார்பற்ற அமைப்புகளையும் அவற்றின் செயற்பாடுகளை “மேலும் பயனுறுதியுடன் வசதிசெய்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்” என்ற நோக்கத்திற்காக “ஒரே அதிகாரத்தின் கீழ்” பதிவு செய்து மேற்பார்வையிடுவதை குறிப்பிடுகிறது.
இங்கு கவனிக்க வேண்டியது சொற்கள் மட்டுமல்ல; அவற்றின் பின்னால் உள்ள அரசியல் அணுகுமுறையாகும்.
ஒரு சனநாயக அரசாங்கம் குடிமக்கள் சமூக அமைப்புகளை பொதுவாக அரசின் பங்காளிகளாக பார்க்கும். அவை அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிக்கும் போது மட்டுமல்ல, தேவையானபோது அவற்றை விமர்சிக்கும் போதும் சனநாயகத்தின் ஒரு பகுதியாக செயல்படுகின்றன.
அரச சார்பற்ற அமைப்புகள் அரசாங்கத்தின் முகவர்கள் அல்ல. அவை அரசின் சேவைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் சுயாதீன சமூக அமைப்புகள். அரசாங்கத்தின் கொள்கைகள் தவறாக இருக்கலாம்; அவை விமர்சிக்கப்படலாம்; மாற்றப்படலாம். இதுவே சனநாயகத்தின் இயல்பு.
ஆனால் சட்டத்தின் மொழி குடிமக்கள் சமூகத்தை சுயாதீன சனநாயகப் பங்காளியாக பார்க்கிறதா அல்லது கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு துறையாக பார்க்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்த சட்டமூலத்தின் மிகவும் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்று, பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் நேரொத்ததாக இருக்க வேண்டும் என்ற அணுகுமுறையாகும்.
ஒரு சனநாயக சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் என்பது அரசாங்கத்தின் கருத்துக்களை ஆதரிக்கும் உரிமை மட்டும் அல்ல. அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதற்கும், மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கும், அதிகாரத்தை பொறுப்புக்கூறச் செய்வதற்குமான உரிமையும் ஆகும்.
ஒரு அரசாங்கத்தின் கொள்கை அரசியலமைப்புக்கு மேலானது அல்ல. அரசாங்கங்கள் தேர்தல்களின் மூலம் மாறுகின்றன. அவற்றின் கொள்கைகள் பொதுவிவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டவை.
உதாரணமாக, எதிர்காலத்தில் ஒரு அரசாங்கம் காணி கையகப்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாதுகாப்புச் சட்டங்கள் அல்லது மனித உரிமைகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கொள்கைகளை முன்னெடுத்தால், அதனை எதிர்க்கும் அமைப்புகள் அரசாங்கக் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை என்ற காரணத்தால் கட்டுப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கின் அனுபவம் இதற்கு முக்கியமானது. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள், காணி உரிமைகளுக்காக போராடும் குழுக்கள், நினைவுகூரல் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் மற்றும் பொறுப்புக்கூறலை கோரும் மனித உரிமை அமைப்புகள் பல சந்தர்ப்பங்களில் அரசின் நிலைப்பாடுகளுடன் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளன. ஆனால் அவை சனநாயகத்திற்கு எதிரானவை அல்ல. மாறாக, அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் சனநாயகத்தின் முக்கியமான பகுதிகளாகும்.
இந்த சட்டமூலத்தின் கீழ் “அரச சார்பற்ற அமைப்பு” என்ற வரைவிலக்கம் மிகவும் பரந்ததாக உள்ளது. பெரிய சர்வதேச நிறுவனங்களுடன் சிறிய சமூக அடிப்படையிலான குழுக்கள், உள்ளூர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ முயற்சிகளும் இதில் உள்ளடக்கப்படுகின்றன.
இங்குள்ள பிரச்சினை ஒழுங்குமுறை அல்ல; ஒரே அணுகுமுறையை அனைவருக்கும் பயன்படுத்துவதாகும். பல கிராம மட்ட அமைப்புகள் வடக்கு மற்றும் கிழக்கில் முறையான நிறுவன வடிவமைப்பு இல்லாமல் சமூக தேவைகளுக்காக இயங்குகின்றன. வெள்ள நிவாரணம் வழங்கும் குழுக்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் அமைப்புகள், பெண்கள் சுயஉதவி குழுக்கள், சமூக நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் போன்றவை சமூக ஒற்றுமையின் வெளிப்பாடுகளாகும்.
ஒரு பெரிய சர்வதேச நிறுவனம் பல கோடி ரூபாய் நிதியை நிர்வகிப்பதும், ஒரு கிராமத்தில் மாணவர்களுக்கு உதவி வழங்கும் சிறிய குழுவும் ஒரே நிர்வாகச் சுமையின் கீழ் கொண்டுவரப்படுவது நடைமுறை ரீதியாகவும் நியாய ரீதியாகவும் கேள்விகளை எழுப்புகிறது.
இந்த விவாதம் அரச சார்பற்ற அமைப்புகள் எந்தவித கண்காணிப்பும் இன்றி இயங்க வேண்டும் என்பதல்ல. பொதுமக்களின் நம்பிக்கையை பெறும் எந்த அமைப்பும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். ஆனால் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் சட்டம் மற்றும் சுயாதீன செயற்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டம் இரண்டும் வேறுபட்டவை.
பதிவு செய்யத் தவறுவதற்காக அதிகமான அபராதங்கள் விதிப்பது, நிர்வாக குறைபாடுகளை தண்டனை அடிப்படையில் அணுகுவது அல்லது பரந்த அதிகாரங்களை ஒரே நிர்வாக அமைப்பிற்கு வழங்குவது சிறிய சமூக அமைப்புகளை செயலிழக்கச் செய்யும் அபாயத்தை கொண்டுள்ளது.
இந்த சட்டமூலம் அரச சார்பற்ற அமைப்புகள் பற்றிய விவாதம் மட்டுமல்ல. இது இலங்கையின் சனநாயகத்தின் தரம் பற்றிய விவாதமாகும்.
ஒரு அரசாங்கத்தின் சனநாயகத் தன்மை, அதனை ஆதரிக்கும் குரல்களுக்கு அது வழங்கும் இடத்தினால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, தன்னை விமர்சிக்கும், கேள்விக்குட்படுத்தும் மற்றும் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் குரல்களுக்கு அது வழங்கும் இடத்தினால் தீர்மானிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போதைய சட்ட வரைவு, குடிமக்கள் சமூகத்தை சுயாதீன சனநாயகப் பங்காளியாக பார்க்கும் அணுகுமுறையை விட, பதிவு செய்யப்பட வேண்டியதும், கண்காணிக்கப்பட வேண்டியதுமான ஒரு துறையாக பார்க்கும் பழைய அரசியல் சிந்தனை தொடர்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
அரசாங்கங்கள் மாறுவது சனநாயகத்தின் ஒரு பகுதி. ஆனால் அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான உறவை வரையறுக்கும் சிந்தனை மாறுவதுதான் உண்மையான அரசியல் மாற்றம்.
புதிய அரசாங்கங்கள் வரலாம். புதிய அரசியல் மொழிகளும் உருவாகலாம். ஆனால் குடிமக்கள் சமூகத்தை சந்தேகத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் பழைய அரச மனநிலை தொடர்ந்தால், மாறுவது ஆட்சியாளர்கள் மட்டுமே; அரசின் சிந்தனை அல்ல.

