பொருளாதார வளர்ச்சிக்காக தேசிய ஐக்கியத்தைப் பயன்படுத்துதல்

கலாநிதி ஜெகான் பெரேரா

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் 2026 பட்ஜெட் பொதுவில் நன்றாக வரவேற்கப்பட்டிருக்கிறது  . பட்ஜெட்டை பாராட்டிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தின  தலைவர் கிரிஷான் பாலேந்திரா தனியார் துறையின் கருத்துக் கோணத்தில் பார்க்கும்போது அது உறுதிப்பாட்டை உறுதிப்பாட்டை தருகிறது என்று கூறினார். 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் எம்மால் காணக்கூடியதாக இருந்த ஒழுங்குமுறையையும் அடுத்து உயர்ந்த பணவீக்கத்தினாலும் செலாவணி வீதங்களின் வீழ்ச்சியினாலும் பல வருடங்களாக பாதிக்கப்பட்ட நாடுகள் சென்ற அதே பாதையில் கீழிறங்கிச் செல்வதை இலங்கை தவிர்த்திருக்கிறது என்றும் பாலேந்திரா குறிப்பிட்டார். இந்த பட்ஜெட் அந்த உறுதிப்பாட்டை தொடருகிறது.

எதிர்க்கட்சியின் தரப்பில்,  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா, அவரது கட்சி  அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால்  மக்களுக்கு ஏற்படக்கூடிய  பாதிப்புக்களையும் பொருளாதார வளர்ச்சியை சாதிப்பதற்கான ஒரு செயற்திட்டம் இல்லாதமையையும் கூர்ந்து ஆராய்கின்ற போதிலும் கூட,  சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதில் அரசாங்கம் விவேகத்துடன் நடந்து கொள்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்.

பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் முன்னர் எதிர்பார்க்கப்பட்டிராத முறையில் அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு மணிந்து நடந்து கொள்கிறது.  மார்க்சிய கோட்பாடுகளில் கட்சியின் வேர்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கிய பல ஆய்வாளர்கள் அதன் தலைவர்கள் பெருமளவுக்கு சர்வதேச சமூகத்துடன் மோதல் போக்கு ஒன்றையே கடைப்பிடிப்பார்கள் என்று நம்பினார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கிச் செயற்படும் அரசாங்கத்தின் போக்கு இரு அக்கறைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது.

முதலாவதாக, சனத்தொகையின் வறிய பிரிவினரின் பொருளாதார இடர்பாடுகள் எந்த வகையிலும் தணிக்கப்படவில்லை. பொருளாதார வளர்ச்சி அல்லது சமூகநீதியை விடவும் பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணுவதிலேயே பட்ஜெட்  கவனத்தைச் செலுத்தியிருக்கிறது போன்று தெரிகிறது. அர்த்தமுடைய வரி நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. மக்களுக்கு பயன்களை தருவதை விடவும் அரசாங்கத்துக்கு உச்சபட்ச வருவாயைக் கொண்டுவரக்கூடிய முறையில் வரிக்கொள்கைகள் வகுக்கப்படுகின்றன என்பது தெளிவானது. ஒரு போர்ச்சூழலில் அல்லது குழப்பகரமான சூழலில் உழைக்கும் மக்கள் அல்ல வர்த்தக சமூகமே பணத்தைச் சம்பாதிக்கிறது என்பதே பொதுவான அவதானிப்பாக இருக்கிறது. இந்த நிலைவரத்தை அரசாங்கம் திருத்தியமைக்க வேண்டியது அவசியமாகும்.

இரண்டாவதாக, குறுகியகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியையும் உற்பத்தியையும் எவ்வாறு ஊக்குவிப்பது என்மதற்கான தெளிவான வழிவரைபடம் ஒன்றை பட்ஜெட் முன்வைக்கவில்லை ; வீதிகள்,  நீர்விநியோகம்  மற்றும் மின்சாரம் மோன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதுடன் இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த முன்னைய யுகங்களின் மகாவலி ஆறு திசைதிருப்பல்  அல்லது 200  ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளன ஆகியவற்றுடன் ஒப்பிடக்கூடியதாக எந்தவொரு பாரிய அபிவிருத்தி திட்டத்துக்கான யோசனையும் முன்வைக்கப்படவில்லை.

2021 ஆம் ஆண்டில் இடம்பெற்றதைப் போன்ற சர்வதேச கடன் நெருக்கடி மற்றும் வங்குரோத்துநிலை மீண்டும் ஏற்படாதிருப்பதை தவிர்ப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கிறது என்று தெராகிறது. அத்தகைய ஒரு நெருக்கடியான நிலைவரம் மீண்டும் வருவதை எந்தவொரு இலங்கையரும் விரும்பவில்லை. என்றாலும் ஒரு ஆபத்து இருக்கிறது.

பொருளாதார இடர்பாடுகள் தற்போதைய மட்டத்திலேயே தொடருமாக இருந்தால்,  மக்கள் மத்தியில் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரிக்கக்கூடும  என்பதுடன் முன்னைய அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து விரட்டியதைப் போன்ற மக்கள் போராட்ட இயக்கங்கள் தோன்றலாம். வெறுமனே பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணுவதற்கான திடடங்களை மாத்திரமல்ல, உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கான திடடங்களையும் வகுப்பதன் மூலமாக பொருளாதார மீட்சி செயற்திட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு அரசாங்கம் நகரவேண்டிய தேவை இருக்கிறது.

சமமான அளவு  முன்னுரிமை

அபிவிருத்தி முயற்சிகளின் பின்னால் நாட்டின் பல்லின, பலமத சனத்தொகையை ஐக்கியப்படுத்துவது வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அவசியமான முன்தேவைகளில் ஒன்றாகும். எந்தவிதமான பாகுபாடுமின்றி சமத்துவமான பிரசைகளாக தாங்கள் நடத்தப்படுவார்கள் என்று சமுதாயத்தின் சகல பிரிவினர் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தியதன் மூலம் மெச்சத்தக்க தொடக்கத்தை அரசாங்கம் செய்திருக்கிறது. கடந்த காலத்தில் போரும் போரும் அதன் விளைவான அரசியல் உறுதிப்பாடின்மையும் வெளிநாட்டு முதலீடடாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு பெரும் தடையாக இருந்தது.

போர் முடிவுக்கு வந்து 16 வருடங்களுக்கும் அதிகமான காலம்  கடந்துவிட்ட போதிலும் கூட, ஆசியாவின் ஏனைய பாகங்களில் காணக்கூடியதாக இருப்பதைப் போன்று பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள் இன்னமும் இலங்கைக்கு வந்துசேரவில்லை. உயர்மட்டங்களிலான ஊழலும் உயர்மட்ட அதிகாரிகளின் தாமதப்போக்கும் வெளிநாட்டுக் கம்பனிகள் இலங்கையில் முதலிடுவதற்கு தயக்கம் காட்டுவதற்கான பல காரணங்களில் முக்கியமானவையாகும். ஊழலை அரசாங்கம் முன்னுதாரணமான ஒரு முறையில் கையாளுகின்ற அதேவேளை,  உயர்மட்ட அதிகாரிகளின் தாமதப்போக்கு துரதிர்ஷ்டவசமாக மேலும் மோசமடைந்திருக்கிறது போன்று தெரிகிறது.

வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்கு படுமோசமாக தவறியதைப்  போன்றே போரின் காயங்களை குணப்படுத்துவதும் தவறவிடப்பட்டிருக்கிறது.  ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் இதை வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கிறது. அதனால் அரசாங்கம் 2009 ஆம் ஆண்டில் போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் நாடு கையாளுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் விடயத்தில் குறிப்பாக, 2015 ஆம் ஆண்டின் 30/1, அதை தொடர்ந்து வந்த 34/1, 40/1, 46/1, 51/1 தீர்மானங்களை கையாளுவதில் அதே மட்டத்திலான  கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ஆனால், துரதிராஷ்டவசமாக அரசாஙாகம் மனித உரிமைகள் பேரவையின் விதப்புரைகளை விடவும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டியதே முக்கியமானது என்று நம்புகிறது. இதன் மூலமாக  நல்லிணக்கக் கடப்பாடுகளை விடவும் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் மூலமான விளைவுகளே முன்னுரிமைக்குரியவை என்ற செய்தியே கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க சாத்தியமான அளவுக்கு விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்தும் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. 1987 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் ஒரு அங்கமாக, இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் அவர்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுப்பதற்கு வசதியாக மாகாண சபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

2017 ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டிய நேரம் வந்தபோது அன்றைய அரசாங்கம் தேர்தல் சட்டத்தை திருத்தும் செயற்பாட்டை ஆரம்பித்ததன் மூலமாக அந்த தேர்தல்களை இடைநடுவில் குழப்பியடித்தது. மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டிய தேவை இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் ஒரு பகுதியாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தொர்ந்தும் பெறுவதற்கு நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளின் பகுதியாகவும் அமைகிறது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கத்தினால் தேர்தல் சட்டத்தை திருத்தும் செயன்முறையை துரிதப்படுத்த முடியும்.

பொருளாதார வளர்ச்சி இடம்பெறுவதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை பின்பற்றி நடப்பதைப் போன்று அதே வழியில் நல்லிணக்கச் செயன்முறைக்கும் சமமான அளவு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியமாகும். பொருளாதாரச் செயற்திட்டத்தை கண்டிப்பான முறையில் பின்பற்றி சர்வதேச நிறுவனங்களின் நல்லெண்ணத்தை பெற்றதைப் போன்று அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை திட்டமிட்ட முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக சர்வதேச மனித உரிமைகள் சமுதாயத்தினதும் சர்வதேச முதலீட்டாளர்களின் நல்லெண்ணத்தையும் பெற்று சிறுபான்மைச் சமூகங்களுக்கு நம்பிக்கையுணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பொருளாதார அபிவிருத்தி மாத்திரம் இன, மத சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு போதுமானது என்று அரசாங்கம் நம்புமானால் அது பாரதூரமான தவறைச் செய்ததாகவே முடியும். இனநெருக்கடியின் குணங்குறிகளை அல்ல, மூலவேர்க் காரணிகளை கையாளுவதில் அரசாங்கம் அக்கறையாக இருக்கிறது என்று சிறுபானமைச் சமூகங்ளை உணரவைக்க வேணடியதும் அவசியமாகும்.

வெளிநாட்டு முதலீடு

 அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் (ஸ்ரீலங்கா பறோமீட்டர் போன்றவை) இன, மத சிறுபான்மை இனத்தவர்கள் மத்தியில் குறிப்பாக போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்பவர்கள் மத்தியில் நம்பிக்கையுணர்வின  மட்டங்கள் தாழ்ந்த நிலையில் இருப்பதை காட்டுகின்றன.  நாட்டின் ஏனைய பாகங்களில் வாழ்கின்றவர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையுணர்வை விடவும் வடக்கு, கிழக்கில் உள்ளவர்களின் நம்பிக்கையணர்வு கடுமையாக குறைவானதாகவே உள்ளது. இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு முன்வரக்கூடியவர்கள் மத்தியில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேராந்தவர்களும் இருக்கிறார்கள். தங்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பு இருக்கும் என்றும் இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்றும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் கணிசமான அளவில் முதலீடுகளைச் செய்வதற்கு முன்வருவார்கள்.

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியான ஐக்கிய தேசிய கட்சியின் ஐக்கிய இராச்சியக் கிளையின் முன்னாள் தலைவரான றொஜர் சிறீவாசன் கடந்தவாரம் சமூகத் தலைவர்கள் குழு ஒன்றின் மத்தியில் உரையாற்றியபோது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் வருடாந்த பொருளாதார விளைவின் அளவு (Output) 5000 அமெரிக்க டொலர்களுக்கும் அதன் இரு மடங்கிற்கும் இடைப்பட்டதாக இருப்பதாகவும் நிலைபேறான சமாதானத்துக்கும் அமைதிக்குமான பாதை நம்பகத்தன்மையானதாக  இருக்குமேயானால் அவர்கள் அதில் ஒரு பகுதியை இலங்கையில் முதலீடு செய்யக்கூடும் என்றும் கூறினார். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தவர்கள் இலங்கையில் பெரியளவில் முதலீடுகளைச் செய்யத் தொடங்குவார்களேயானால், நாடு அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்றும் அதனால் முதலீடுகளைச் செய்வது பெறுமதியானது என்றும் ஏனைய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பலம்வாய்ந்த சமிக்ஞையைக் காட்டுவதாக இருக்கும்.

நல்லிணக்கத்துடன் கூடிய பொருளாதார மீட்சியில் அரசாங்கம் பற்றுறுதியை வெளிக்காட்டுமேயானால், அது ஒரு மேம்பட்ட பெரும்பாக பொருளாதார ( Macroeconomic indicators )  குறிகாட்டிகளாக மாத்திரமல்ல, அழமான சமூக ஒன்றிணைவு, முதலீட்டுக்கான பரந்த தளம் மற்றும் மீண்டெழும்  பொருளாதாரம் ஆகியவற்றுக்குமான  குறிகாட்டிகளாகவும் அமையும். உற்பத்தியில் முதலீடு செய்வதைப் போன்று சமூகங்களுக்கு இடையிலான ஐக்கியத்தில் முதலீடு செய்வதன் மூலம் சகல சமூகங்களினதும் பிராந்தியங்களினதும் உட்கிடையான ஆற்றல்களைப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு பயன்தரக்கூடிய பொருளாதார வளர்ச்சி என்பது  வெறுமனே வருவாய்ச்  சீர்ப்படுத்தலில்  இருந்து  (Fiscal adjustment ) அல்ல, சகல குடிமக்களும் தேசிய முன்னேற்றத்தில் பங்காளிகள் என்பதை உறுதிப்படுத்தக்கூடியதாக பயன்கள் அவர்களையும் சென்றடைவதில் இருந்தே தோன்றுவதாகும். பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவது மாத்திரம் போதாது, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒவ்வொரு குடிமகனும் தேசிய பெருமுயற்சியின் தவிர்க்கமுடியாத அங்கமாக தன்னை உணருவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் நோக்குகையில், பட்ஜெட்டும் அரசாங்கத்தின் கொள்கையும் பொருளாதார பரிமாணத்தையும் சமூக — அரசியல் பரிமாணங்களையும் பிரதிபலிக்க வேண்டியது அவசியமாகும். செயற்திட்டங்கள் நிகர உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மாத்திரம் அல்ல, மோதலின் விளைவான காயங்களை குணப்படுத்துவதை, சிறுபான்மைச் சமூகங்களுக்கு அதிகாரமளித்து வலுப்படுத்துவதை, அதிகாரப்பகிர்வுக்கும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் நிறுவனங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.  அப்போது மாத்திரமே பொருளாதார நிலையுறுத்திப்படுத்தலுக்கு அப்பால் நிலைபேறான வளர்ச்சி யுகத்திற்குள் இலங்கை நகரக்கூடியதாக இருக்கும்.

அந்த யுகத்தில் சகல சமூகங்களினதும் முழுமையான சக்தி பயன்படுத்தப்படுவதாகவும் அபிவிருத்தியின் பயன்கள் உண்மையில் சகலரினாலும் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் இருக்கும். வளர்ச்சி என்பது நேர்மறையான வருவாய் இருப்பு நிலையில் (Positive fiscal balances) இருந்து அல்ல, நம்பிக்கைப் பற்றாக்குறையை வெற்றிகொள்வதிலும் எல்லோருக்கும் பொதுவானது என்ற ஒரு  உணர்வைக்  கட்டியெழுப்புவதிலும் ஒதுக்கிவைக்கப்பட்டதாக பல தசாப்தங்களாக உணர்ந்து கவலைப்படுபவர்களுக்கு தீர்மானங்களை மேற்கொள்ளும் அதாகாரங்களை வழங்குவதிலுமே இருந்தே வருகிறது. பெரும்பாக பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு கொடுப்பதைப் போன்று நல்லிணக்கத்துக்கும் அதே மைய இடத்தை வழங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி உண்மையாகவே முன்னெடுக்கப்படுவதற்கான அத்திபாரத்தை அரசாங்கத்தினால் அமைக்கக்கூடியதாக இருக்கும்.

Leave A Comment