மக்கள் மீது மேலதிக வரிச்சுமை  எதுவும் சுமத்தப்படவில்லை; நிதிப்பிரதி அமைச்சர் அனில் ஜயந்த

அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்குப் புதிய அல்லது மேலதிக வரிச் சுமையைச் சுமத்தவில்லை. கடந்த காலத்தில் காணப்பட்ட வரி முறையின் குறைபாடுகளைச் சீர்திருத்தி, திறமையான வரி வசூலிப்பு முறையையே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கமொன்று இயங்குவதற்கு கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படைச் சேவைகளை வழங்க வருமானம் அவசியமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் எந்தவொரு மேலதிக வரியையும் புதிதாகத் திணிக்கவில்லை.

முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற முறையற்ற வரி அமைப்பைச் சீரமைத்து, வரி வசூலிப்பின் செயல்திறனை மேம்படுத்தியதன் மூலமே 2025ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விடக் கூடுதலான வரி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

மதுபானம், சிகரெட் மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு ஆண்டுதோறும் உட்சுழற்சிக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் வரி சீர்திருத்தம் தொடர்பில் சிலர் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர்.

முந்தைய அரசாங்கம் இதனை 114 சதவீதம் வரை உயர்த்தியிருந்த உண்மையை மறைத்துவிட்டு, தற்போதைய அரசாங்கம் மீது வீண் பழி சுமத்துகின்றனர். அதேவேளை, 2026இல் ஏற்பட்ட பேரிடர் நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தச் சரிசெய்தல்களைத் தவிர்க்கவும் நாம் நடவடிக்கை எடுத்தோம்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு வெளியேறுவதைத் தற்காலிகமாகத் தடுத்து, நாட்டின் டொலர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே தனிநபர் வாகன இறக்குமதி மீது தற்காலிக மேலதிக வரிகள் விதிக்கப்பட்டனவே தவிர, வரியைச் சேகரிப்பது இதன் பிரதான நோக்கம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Comment