முதலீட்டிற்கானவாய்ப்புக்கள் வடபகுதியில்எப்படிஉள்ளது ?

ஆா்.பாரதி

வடக்கின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த தகவல் ஒன்று முக்கியமானது. யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் வடக்கின் பொருளாதாரம் தொடா்பாக அமைச்சர் விஜித ஹேரத்தை புதன்கிழமை சந்தித்துப் பேசிய போதே அதற்குச் சாதகமான பல விடயங்களை அமைச்சர் தெரிவித்திருந்தார். 


வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாகவே யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் அமைச்சர்  விஜித ஹேரத்துடன் பேசியிருக்கிறார்கள். 


இதன் போது வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டு உள்ளதாகவும், விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  மேலும் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். 


அதே போன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாது இருக்கும் தமிழர்கள் தங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பான ஆர்வத்தை பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு இந்த சந்திப்பின் போது தெரியப்படுத்தி இருந்தார். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் இது தொடர்பில் பேசியிருந்தார்.

புலம் பெயா்ந்த தமிழா்கள் பலா் இலங்கை வந்து வடக்கில் முதலீடுகளை முன்னெடுப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், தற்போது நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டால், இவா்கள் இலங்கை வந்து முதலீடுகளை மேற்கொள்வாா்கள் என்றும், நாட்டின் பொருளாதாரத்துக்கு அது மிகவும் அவசியமானது என்றும் தெரிவித்திருந்தாா். 


வடக்கில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் நிறைய உள்ளன. திட்டமிட்ட முறையிலான புறக்கணிப்புக்கள் இல்லை என்றால், நாட்டின் பொருளாதாரத்துக்கு வடபகுதி அதிகளவு பங்களிப்பை வழங்கும். இது தொடா்பில் ஏற்கனவே பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில், இவ்விடயத்தில் அரசாங்கம் பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினால், புலம்பெயா்ந்த தமிழ் முதலீட்டாளா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். 


இது தொடா்பில் ஏற்கனவே முக்கியமான சில நகா்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வடக்கில் முதலீட்டு வலயத்திற்கு என அடையாளப்படுத்தப்பட்ட காணிகள், கடந்த வாரம் (03/01/2025) உத்தியோகபூர்வமாக காணி அளவீட்டுத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படவுள்ளது என்று இலங்கை முதலீட்டுச் சபையின் சிரேஷ்ட பதில் பணிப்பாளா் ஜெயமானன் இராசநாயகம் தெரிவித்திருக்கின்றாா்.  அதாவது, முதலீட்டு வலையங்கள் சில திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டிருக்கின்றது. இது முக்கியமான ஒரு நகா்வு.


அதன்படி, காங்கேசன்துறையில்  350 ஏக்கர்கள், பரந்தனில்  227 ஏக்கர்கள், மாங்குளத்தில் 600 ஏக்கர் காணி  அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் ஜெயமானன் இராசநாயகம் தெரிவித்திருக்கின்றாா். இந்த மூன்று பகுதிகளுமே கைத்தொழில் மயமாக்கல் மற்றும் முதலீடுகளைப் பொறுத்தவரையில் முக்கியமான இடங்கள். ஏற்கனவே இந்தப் பகுதிகளில் முக்கிய தொழிற்சாலைகள் இருந்திருக்கின்றன. ஆனால், போரின் போது அவை அழிவடைந்திருக்கின்றன. இன்று வரையில் அவற்றை மீளக்கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 


அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் எவ்வாறான தொழிற்பேட்டைகளை அமைக்க முடியும் என்பதையிட்டும் சில கருத்துக்களை ஜெயமானன் இராசநாயகம் தெரிவித்திருக்கின்றாா். 


வட மாகாணத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயங்களில்,

மாங்குளம் முதலீட்டு வலயத்தில், வட மாகாணத்தின் பாரம்பரிய பொருளாதார நடவடிக்கைகளான விவசாயம்,  கால்நடை, மீன்பிடித் துறைகளிலிருந்து   கிடைக்கப்பெறுகின்றனவற்றை மூலப் பொருளாகப் பயன்படுத்தி பெறுமதி கூட்டல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடுய கைத்தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்படலாம். வன்னி பெரு நிலப்பரப்பின் மையத்தில் அது அமைந்திருப்பதால், அங்கிருந்து கிடைக்கக்கூடிய மூலப் பொருட்களை அடிப்பயைாகக் கொண்ட உற்பத்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 


பரந்தன் முதலீட்டு வலயத்தில் ஆனையிறவு உப்பளத்திலிருந்து கிடைக்கக்கூடியதான உப்பை மூலப்பொருளாகக் கொண்ட இரசாயனம் சார் கைத்தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்படலாம். இங்கு ஏற்கனவே, உப்பளமும், இரசாயணத் தொழிற்சாலை ஒன்றும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருந்தன. போா் காரணமாக அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டாலும், போா் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையிலும், அதனை மீளுருவாக்கம் செய்வதையிட்டு அரசாங்கங்கள் எந்த நகா்வையும் மேற்கொண்டிருக்கவில்லை. இந்த நிலையில், தற்போது முன்னெடுக்கப்படும் நகா்வு முக்கியமானது. 

மூன்றாவது, காங்கேசன்துறை முதலீட்டு வலயம். இங்கு ஏற்றுமதி நோக்கிலான பாரிய கைத்தொழில்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கைத்தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்படலாம் என்றும் ஜெயமானன் இராசநாயகம் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளாா். ஆர்வமுள்ளவர்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்கள் முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் அவா் குறிப்பிடுகின்றாா். 


காங்கேசன்துறை போரினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக இருக்கின்ற போதிலும், அதன் அமைவிடம், அங்குள்ள வளங்கள் மற்றும் நிலப்பரப்பு என்வற்றால் முதலீடுகளுக்கான முக்கியமான பெறுமதிவாய்ந்த ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு இயங்கிக்கொண்டிருந்த சீமெந்துத் தொழிற்நாலையை மையப்படுத்தியதான ஒரு பொருளாதாரம் போருக்கு முன்னைய காலங்களில் அங்கு வளா்ச்சியடைந்திருந்தது. சுமாா் இரண்டாயிரம் போ் வரையில் அங்கு பணியாற்றியிருக்கின்றாா்கள். சனத்தொகை அடா்த்தி கூடிய ஒரு பகுதியாகவும் காங்கேசன்துறை விளங்கியது. 


இங்குள்ள சீமெந்துத் தொழிற்சாலையில் காணப்பட்ட பெரும்பாலான இயந்திரங்கள் இப்போது பழுதடைந்துள்ளன. அல்லது அழிவடைந்துள்ளன. மேலும் பல திருட்டுப்போயுள்ளன. மீண்டும் செயற்படக்கூடிய நிலையில் அது இல்லை. அதேவேளையில், இந்தத் தொழிற்சாலைக்காக சுண்ணக்கல் அகழ்வது பாரிய சுற்றாடல் பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளா்கள் கருத்துத் தெரிவிக்கின்றாா்கள். அதனால் இதற்கான மாற்றுத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட வேண்டிய தேவையும் உள்ளது. 


இது தொடா்பில் பொருளாதார ஆலோசகா் செல்வின் மரியாம்பிள்ளையிடம் கேட்டபோது, “சுற்றுச் சூழலுக்கும், இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இதனைச் செயற்படுத்த முடியும்” என்று குறிப்பிடுகின்றாா். “மூலப் பொருட்களான சுண்ணக்கல் போன்றவற்றை வெளியிலிருந்து கொண்டுவந்து, காங்கேசன்துறையில் வைத்து அவற்றை அரைத்து பொதியிட்டு அனுப்பும்  பணியைச் செய்வதற்குப் பொருத்தமான இடமாக காங்கேசன்துறை இருக்கின்றது” என்றும் செல்வின் சுட்டிக்காட்டுகின்றாா். 


காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையிலிருந்து மிகவும் அருகிலேயே துறைமுகமும் அமைந்திருப்பதால், மூலப் பொருட்களைக் கொண்டுவந்து இறக்குவற்கும், முடிவுப் பொருட்களை அனுப்பிவைப்பதற்கும் அது மிகவும் வசதியான இடம். அதனைவிட, காங்கேசன்துறையிலிருந்துதான் ரயில் சேவையும் ஆரம்பமாகின்றது. அதனையும் தாரளமாகப் பயன்படுத்தி நாட்டின் எந்தப் பகுதிக்கும் பொருட்களை அனுப்பிவைக்க முடியும். இதற்கு வசதியாக துறைமுகப் பகுதியில் களஞ்சியசாலை ஒன்றை அமைத்து அதிலிருந்து சீமெந்தை அனுப்பிவைக்க முடியும் என்றும் செல்வின் தெரிவிக்கின்றாா்.


திருமலையில் உள்ள ரோக்கியோ சீமெந்துத் தொழிற்சாலை இவ்வாறுதான் செயற்படுகின்றது என்பதையும் செல்வின் சுட்டிக்காட்டுகின்றாா். சுண்ணக்கற்கள் உட்பட முக்கியமான மூலப் பொருட்கள் வெளியேயிருந்து கொண்டுவரப்பட்டு, திருமலை துறைமுகத்தில் பாரிய களஞ்சியம் ஒன்று அமைக்கப்பட்டு அங்கிருந்துதான் சீமெந்து வெளியே அனுப்பப்படுகிறது என்றும் அவா் கூறுகின்றாா்.


கடந்த காலங்களில் காங்கேசன்துறையில் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. சில தனியாா் துறையினா் இவ்விடயத்தில் ஆா்வங்காட்டியிருந்தாா்கள். இதற்கான ஆவணங்கள் கொழும்பில் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருப்பதாகவும் செல்வின் சுட்டிக்காட்டுகின்றாா். இதற்கு சுற்றுச்சூழல் தொடா்பில் சில காரணங்கள் சொல்லப்பட்டு அந்த முயற்சிகளுக்கு கடந்த காலங்களில் முட்டுக்கட்டை போடப்பட்டது. 


காங்கேசன்துறையில் தனியார் துறை மூலமாக சீமெந்தை அரைத்துப் பொதியிடும் செயற்பாட்டைச் செய்யும் போது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று குறிப்பிடும் செல்வின், இவ்வாறு சூழல் மாசடைவதற்கான காரணிகள் இருந்தாலும், அவற்றை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறு காரணம் சொல்லப்படுமாக இருந்தால், அது வடபகுதியின் கைத்தொழில் மயமாக்கலை முடக்குவதற்கான ஒரு முயற்சியாக மட்டுமே இருக்க முடியும் என்றும் அவா் குறிப்பிடுகின்றாா். 


தேசிய பொருளாதாரம் என்று பாா்க்கும் போது, வடபகுதியை கைத்தொழில் பயமாக்குவதன் மூலமாக பாரிய பலன்களைப் பெறமுடியும். நாட்டின் பொருளாதாரத்துக்கு அது அதிக வரப்பிரசாதமாகவும் அமையும். அமைச்சா் விஜத ஹேரத் தெரிவித்த தகவல்கள் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. அதனை அரசாங்கம் முன்னெடுப்பதற்கான அழுத்தங்களைத் தமிழா் தரப்பும் வழங்க வேண்டும். 


இதனைவிட, சிறு கைத்தொழில்களுக்கான வாய்ப்புக்களும் வடபகுதியில் பெருமளவுக்குக் காணப்படுகின்றது. ஏற்கனவே அவ்வாறான கைத்தொழில்கள் பெருமளவுக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், அவை எதிா்கொள்ளக்கூடிய நெருக்கடிகளும் பல உள்ளன. அவை தொடா்பாக மற்றொரு வாரம் விரிவாகப் பாா்ப்போம்.

Leave A Comment