வன்முறைமற்றும்துன்புறுத்தல்சமவாயத்தைஏற்றுக்கொண்டதுஇலங்கை

2019 ஆம் ஆண்டு 190 ஆம் இலக்க வன்முறை மற்றும் துன்புறுத்தல் சமவாயத்தை ஏற்றுக்கொள்வதற்கான ஆவணம் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தசநாயக்கவினால் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப்.ஹுங்போவிடம் கடந்த புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்கு கருத்துரைத்த நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தசநாயக்க, ‘வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பது தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190 ஆம் இலக்க சமவாயத்தை இலங்கை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ எனத் தெரிவித்தார்.

‘பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் உள்ளடங்கலாக வன்முறையற்ற வேலைச்சூழலுக்கான சகலரதும் உரிமைக்கு மதிப்பளிப்பதற்கும், அதனை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் அரப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. இச்சமவாயத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் சகிப்புத்தன்மையற்ற சூழலை உருவாக்குவதற்கான எமது கடப்பாட்டை மீளுறுதிப்படுத்துகிறோம். அத்தோடு இந்த சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறு எமது தற்போதைய தொழிலாளர் சட்டங்களில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து அங்கு கருத்து வெளியிட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர், ‘இந்த சமவாயத்தை ஏற்றுக்கொண்டமையானது வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத எதிர்காலத்தை நோக்கிய ஒரு தீர்க்கமான நகர்வாகும்’ எனப் பாராட்டு வெளியிட்டார்.

மேலும் இது பாதுகாப்பானதும், ஆரோக்கியமானதுமான வேலைச்சூழலை உறுதிசெய்யும் என்றும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

Leave A Comment