யுத்தத்தைஒருபோதும்அங்கீகரிக்கமுடியாது; அரசாங்கம்
- Editor
- March 5, 2026
- சமகாலம், தமிழ் Header
- சமகாலம்
- 0 Comments
யார் போரைத் தொடங்கினாலும் அதன் இறுதிப் பலி அப்பாவி மக்களே. மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள யுத்த நிலைமை உலகப் பொருளாதாரத்தையும் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ள அரசாங்கம், குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்துடன் நேரடியாகப் பிணைந்துள்ள இப்பிராந்தியத்தின் அமைதிக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ப்பதற்றம் குறித்த விசேட ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
யுத்தம் யாரால் ஆரம்பிக்கப்பட்டாலும், யார் அதைத் தொடர்ந்தாலும் இறுதியில் அப்பாவி மக்களின் உயிரே காவு கொள்ளப்படும். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டிலும் யுத்தத்தை அங்கீகரிக்க முடியாது. இலங்கை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உலக அமைதிக்காகவே பிரார்த்திக்கின்றோம். ஏற்பட்டுள்ள இந்த யுத்த நிலைமை உலகின் அமைதிக்கும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், உலக பொருளாதாரத்துக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
எனவே அரசாங்கம் என்ற ரீதியில் எமது கோரிக்கையும், தலையீடுகளும் யுத்தத்தை நிறைவு செய்து உலகின் அமைதியை ஸ்திரப்படுத்த வேண்டும் என்தற்கானதாகவே இருக்கும். மத்திய கிழக்கு பிராந்தியம் என்பது உலக பொருளாதாரத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகின் மிக அதிக வான்வெளி போக்குவரத்துக்கள், விநியோக சேவைகள் இடம்பெறுகின்ற குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தில் நேரடியாக பின்னிப்பிணைந்துள்ள ஒரு பிராந்தியமாகும்.
ஒருபுறம் பிராந்தியத்தின் அமைதிக்காக தலையிடும் அதேவேளை, மறுபுறம் குறித்த பிராந்தியத்தில் தொழில் புரியும் சுமார் 10 இலட்சம் இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதேபோன்று இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

