மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தி ஈராணிய மாலுமிகள் தொடர்பிலான அரசின் முடிவுக்கு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பாராட்டுக்கள்
- Editor
- March 6, 2026
- சமகாலம், தமிழ் Header
- சமகாலம்
- 0 Comments
இலங்கையை அண்மித்த கடலில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலில் காயமடைந்தவர்களை காப்பாற்றி, சிகிச்சை வழங்குவதற்கும், ஈரானுக்கு சொந்தமான மற்றுமொரு கப்பலில் இருந்த மாலுமிகள் உள்ளிட்ட அனைவரையும் இலங்கைக்கு அழைத்து தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கையை பெரிதும் பாராட்டும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம், இது தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு பாராட்டை தெரிவிக்கிறது.
ஒரு நாடாக மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்திய நாகரீகமான இராஜதந்திர நடவடிக்கையை நாம் வெளிப்படுத்தியுள்ளோம். அதேபோன்று சர்வதேச ரீதியாக ஏற்படும் எந்த ஒரு மோதலுக்கும் இலங்கை நிலப்பரப்பு, கடல் பரப்பு மற்றும் வான் பரப்பு ஆகியவற்றை எந்த ஒரு மோதல் தரப்பிற்கோ அரசுக்கோ வழங்கப் போவது இல்லை என்று அரசு மேற்கொண்டு இருக்கும் கொள்கை முடிவையும் நாம் பாராட்டுகிறோம். அணிசேரா கொள்கை முடிவை நீண்ட காலமாக பின்பற்றி இருக்கும் இலங்கை தற்போது மேற்கொண்டு இருக்கும் நிலைப்பாடு எமது வரலாற்றுக்கு அமைவாகவும் நாகரீக அரசியல் போக்குக்கும் ஏற்புடையதாகவும் உள்ளது.
உலகளாவிய ரீதியில் மனித குலத்துக்கு மாபெரும் அழுத்தம் ஏற்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இந்தியப் பெருங்கடலை சமாதான வளையமாக பேணுவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் பரிந்துரைகளுக்கு அமைய ஏனைய நாடுகளுடன் இணைந்து முன் வருவதின் தேவை தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் வலியுறுத்துகிறோம்
ஸ்ரீ லங்காபிமானி கரு ஜயசூரிய
