தமிழ்த்தேசியக்கட்சிகளுக்குஇடையில்  சமஷ்டிஅம்சங்கள்உள்ளடங்கியஅரசியலமைப்புவரைவைத்தயாரிக்கஉடன்பாடு

சமஷ்டி முறையிலான அரசியலமைப்புக்கான சமூக ஒப்பந்தமொன்றை தமிழ், சிங்கள மக்களுக்கு இடையில் மேற்கொள்வதற்கான வரைபைத் தயாரித்தல், அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய சமஷ்டி அம்சங்களுடனான விரிவான அரசியலமைப்பு வரைவைத் தயாரித்தல் மற்றும் தமிழர் இனப்பிரச்சனைக்கான தீர்வு மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு உருவாக்கம் சார்ந்த தனித்தும், கட்சி அடிப்படையிலும் செயற்படுவதில்லை என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அறிவித்துள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை (2) கொழும்பில் நடைபெற்றது.

அச்சந்திப்பின்போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஒருங்கிணைப்பாளர்களான க.ச.இரத்தினவேல், வி.புவிதரன், பேராசிரியர் அ.சர்வேஸ்வரன், சுகந்தி இராஜகுலேந்திரா, வ.ச.நிறைஞ்சன், ஞா.கா.ரனித்தா, ம.யூட் டினேஷ் ஆகியோர் கூட்டிணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் 02.03.2026 அன்று கொழும்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பான கலந்துரையாடலின்போது 3 விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

முதலாவதாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்டும் நோக்கில் தமிழ் மக்களின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய சமஷ்டி முறையிலான அரசியலமைப்பொன்றே அவசியமானது என்ற பொதுத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, அவ்வாறான சமஷ்டி முறையிலான அரசியலமைப்புக்கான சமூக ஒப்பந்தமொன்றை தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் மேற்கொள்வதற்கான வரைபு ஒன்றைத் தயாரிக்கவேண்டும் என்பதாகும்.

இரண்டாவதாக அரசியலமைப்பினுள் உள்ளடக்கப்படவேண்டிய சமஷ்டிக்கான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய விரிவான அரசியலமைப்பு வரைவு ஒன்றைத் தயாரித்தலாகும்.

மூன்றாவதாக இச்சந்திப்பில் பங்குபற்றிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சிப் பிரதிநிதிகளும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேற்குறித்த உடன்பட்ட விடயங்களில் தொடர்ந்து ஒன்றாகச் செயற்படுவது எனவும், இந்த சந்திப்பு இடம்பெற்ற 02.03.2026 ஆம் திகதியிலிருந்து தமிழரின் இனப்பிரச்சினைக்கான விடயங்கள் தொடர்பாகவும், இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த எந்தவொரு கலந்துரையாடலிலும் தனித்தும், கட்சி அடிப்படையிலும் செயற்படுவதில்லை எனவும் உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த இணக்கப்பாடுகளுக்கு அமைவாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான அரசியலமைப்பு தொடர்பான செயற்பாடுகள் பல கட்டங்கள் ஊடாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Comment