முதலாவது தேசிய உணவுப் பாதுகாப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது இலங்கை



இலங்கை அதன் முதலாவது தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் தேசிய உணவுக் கட்டுப்பாட்டு முறையை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

உணவுப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் இடர் சார்ந்த அணுகுமுறையின் ஊடாக பொதுச்சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், உணவு முறைகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் இந்தக் கொள்கை விரிவானதொரு கட்டமைப்பை வழங்குகிறது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தலைமைத்துவத்தின்கீழ் உணவுக் கட்டுப்பாட்டு நிர்வாகப்பிரிவின் ஊடாகத் தயாரிக்கப்பட்டுள்ள இக்கொள்கையானது உற்பத்தி முதல் நுகர்வு வரையிலான முழு உணவுச்சங்கிலியிலும் உணவுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துகிறது. அத்துடன் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் தரமான உணவு கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதற்கான தேசிய ரீதியிலான தொலைநோக்கையும் இது முன்வைக்கிறது.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் சட்டக் கட்டமைப்பு ஏற்கனவே நடைமுறையில் உள்ள போதிலும், பல்வேறு நிறுவனங்களுக்கும் துறைகளுக்கும் இடையிலான உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழிநடத்தவும் ஒருங்கிணைக்கவும் ஏற்றவாறான ஒரு ஒட்டுமொத்த தேசிய கொள்கை இதற்கு முன்னர் நாட்டில் இருக்கவில்லை. நிர்வாகத்தை வலுப்படுத்துதல், கண்காணிப்பு அமைப்புக்களை மேம்படுத்துதல், இடர் மதிப்பீடு மற்றும் தொடர்பாடலை சீரமைத்தல், ஆய்வுகூடத் திறன்களை விரிவுபடுத்துதல், உணவுப் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் உற்பத்தியாளர்கள், உணவு வர்த்தகர்கள், நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான மூலோபாய வழிகாட்டலை வழங்குவதன் மூலம் அந்த இடைவெளியை இப்புதிய கொள்கை நிரப்புகிறது.

தற்போது மாறிவரும் உணவு உற்பத்தி முறைகள், விரிவடைந்துவரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச உணவு வர்த்தகம், நுகர்வோரின் மாறிவரும் விருப்பத்தேர்வுகள் மற்றும் மேலும் சிக்கலாகிவரும் உணவு விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றால் தோற்றம்பெற்றிருக்கும் புதிய உணவுப் பாதுகாப்பு சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும் இக்கொள்கை முயல்கிறது. அத்துடன் தேசிய, மாகாண மற்றும் உள்ளுர் மட்டங்களிலுள்ள பங்குதாரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் அதேவேளை, உணவுப் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை மற்றும் இடர் சார்ந்த அணுகுமுறையை இது ஊக்குவிக்கிறது.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு முறையை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்ட முக்கிய மைல்கல்லாக இக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க வரவேற்பு வெளியிட்டுள்ளார்.

இதுபற்றிக் கருத்துரைத்துள்ள அவர், ‘தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையானது பொதுச்சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், எமது உணவு முறைகள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்குமான இலங்கையின் முயற்சிகளில் முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள், அறிவியல் ரீதியான இடர் முகாமைத்துவம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான வலுவான ஒருங்கிணைப்பு என்பவ்றறை ஊக்குவிக்கும் தெளிவான தேசிய கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம் நாட்டின் விவசாய மற்றும் உணவுத் துறையில் போட்டித்தன்மையை அதிகரிக்கும் அதேவேளை, ஒவ்வொரு பிரஜைக்கும் பாதுகாப்பான உணவை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை நாம் அமைத்து வருகிறோம். இந்தத் தேசிய கொள்கையை உருவாக்குவதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன வழங்கிய தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்பினை நாம் பெரிதும் பாராட்டுகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Comment