நிதிக்குற்றங்களை எதிர்கொள்ள பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி பாராட்டுக்குரியது; பொலிஸ் மா அதிபர்

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நவீன நிதிக்குற்றங்களை எதிர்கொள்ளவும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி பாராட்டுக்குரியது என பொலிஸ் மா அதிபர் ஐ.ஜி.பி. பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் கீழ் புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘தடயவியல் கணக்கியல் மற்றும் விசாரணைக்கான சிறப்பு பீடம்’ தொடக்க இடம்பெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) எம்.டி.பி. தயாரத்ன, பட்டயக் கணக்காளர்கள் நிறுவன தலைவர் திஷான் சுபசிங்க, உப தலைவர் அனோஜி டி சில்வா, தடயவியல் கணக்கியல் மற்றும் விசாரணைக் குழுவின் தலைவர் அஷான் ஜெயசேகர, மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான லக்மலி பிரியங்கிகா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ்  மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்ததாவது:

இலங்கை பொலிஸ் உள்ளிட்ட சட்ட அமுலாக்க முகாமைகளுக்கு, உயர் பயிற்சி பெற்ற தொழில்முறை கணக்காளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது. சிறப்பு மனித வளங்கள் மற்றும் நவீன விசாரணைத் திறன்களை உருவாக்குவதன் மூலம், நாட்டின் பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் பலப்படுத்துகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் நிதிக்குற்றங்கள், இணைய மோசடிகள், பணமோசடி மற்றும் சிக்கலான பெருநிறுவன  முறைகேடுகள் ஆகியவை எல்லைகளைக் கடந்து மிகவும் அதிநவீனமான முறையில் உலகமயமாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார மீட்சிப் பாதையில் நிதி உட்கட்டமைப்பைப் பாதுகாப்பது மிக முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், நிதி மோசடிகள் நாட்டின் வளங்களைச் சுருக்குவதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் தகர்க்கின்றன.

அத்துடன், சிக்கலான நிதிக்குற்றங்களை விசாரிக்க பாரம்பரிய முறைகள் இனிப் போதுமானதல்ல என்றும், விசாரணையின் ஆரம்பக் கட்டத்திலேயே தடயவியல் கணக்கியல் திறன்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் நிகழ்வில் உரையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர் டி.ஐ.ஜி தயாரத்ன கூறுகையில், கணக்காளர்களும் தணிக்கையாளர்களுமே நமது பொருளாதாரத்தின் உண்மையான முதல் காப்பாளர்கள்;. ஒரு சட்ட அமுலாக்க அதிகாரி கோப்புகளைப் பார்ப்பதற்கு முன்பே தணிக்கையாளர்கள் அந்தத் தரவுகளைச் பரிசோதித்துவிடுவதால், அவர்கள் பாரம்பரிய தணிக்கைகளுக்கு அப்பால் சென்று தடயவியல் மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
 நிறுவனத்தின் தலைவர் திஷான் சுபசிங்க தனது உரையில், மோசடிகள் இன்று தொழில்நுட்ப வலைப்பின்னல்கள் மற்றும் கிளவுட் அமைப்புகள் ஊடாக மிக வேகமாக நகர்வதாகத் தெரிவித்தார். நீதிமன்றங்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள் முன்பாகச் சமர்ப்பிக்கத்தக்க நம்பகமான சாட்சிகளை உருவாக்க திறன்மிக்க நிபுணர்களை உருவாக்குவதே இந்தப் பீடத்தின் நோக்கமாகும் என்றார்.
இதன் தொடக்கமாக வரும் அக்டோபர் மாதம் முதல் சான்றளிக்கப்பட்ட தொழில்முறை தடயவியல் ஆய்வாளர் மற்றும் நிதி வல்லுநர்களுக்கான டிஜிட்டல் தடயவியல் ஆகிய இரண்டு புதிய கல்விப் பீடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Comment