பணவீக்கம் அடுத்த வருடத்தின் இரண்டாம் காலாண்டின் பின்னர்வீழ்ச்சியடையும்; மத்திய வங்கி எதிர்வுகூறல்

நாட்டின் பணவீக்கம் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியிலும், அடுத்த ஆண்டின் முற்பகுதியிலும் சுமார் 8 சதவீதம் எனும் உயர்வான மட்டத்தில் காணப்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, 2027 இன் இரண்டாம் காலாண்டின் பின்னர் இது இலக்கிடப்பட்ட 5 சதவீத மட்டத்துக்கு வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபைக் கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை (29) நடைபெற்ற நிலையில், அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை (30) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

அதன்படி நாணயச்சபையானது ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 8.75 சதவீதம் எனும் அதன் தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி மத்திய கிழக்கு மோதல்களின் விளைவாக உருவாகியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் எல்-நினோ காலநிலையினால் பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்பன தொடர்பிலும் நாணயச்சபை அவதானம் செலுத்தியுள்ளது.

அதேவேளை இவ்வருடத்தின் முதலாவது அரையாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. மறுபுறம் கடந்த ஓகஸ்ட் மாதம் முதன்மைப் பணவீக்கம் 8 சதவீதமாக உயர்வடைந்தமை பொருளாதாரத்தின் ஏனைய துறைகளில் ஏற்பட்ட அதிர்வினைப் பிரதிபலித்தது.

அதற்கமைய இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 2027 இன் இரண்டாம் காலாண்டின் பின்னர் பணவீக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து 5 சதவீதம் எனும் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அத்தோடு உயர்ந்த பணவீக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைக் குறைப்பதற்கான நாணய மற்றும் நிதியியல் கொள்கைக் கருவிகளை அடிப்படையாகக்கொண்ட நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் எரிபொருள் மானியம் மற்றும் வாகன இறக்குமதிகளுக்கான கூடுதல் வரி என்பன பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியதாகவும், அந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்காவிடின் பணவீக்கம் தற்போதைய மட்டத்தை விட உயர்வடைந்திருக்கும் எனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

Leave A Comment