போர்க்காலம் ஒன்றில் மனிதாபிமானத் தலைமைத்துவம்

கலாநிதி ஜெகான் பெரேரா

ஈரானிய கடற்படைக் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டினா மூழ்கடிக்கப்பட்டதை தொடர்ந்து தோன்றிய நிலைவரத்தைக் கையாளுவதில் அரசாங்கம் கடைப்பிடித்த மனிதாபிமான அணுகுமுறை முற்றிலும் சரியானதே என்று நாட்டில் மிகவும் அரிதான கருத்தொருமிப்பு காணப்படுகிறது. இந்த ஆதரவு கட்சி வேறுபாடுகள் கடந்தும் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளிடமிருந்தும் பரந்தளவில்  வந்திருக்கிறது. இலங்கை மனிதாபிமானக் கோட்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டிருக்கிறது என்ற நிலைப்பாட்டை சமூக ஊடகங்களில் வெளியான கருத்துக்கள், அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் பிரதான ஊடகங்களில் வெளியான கருத்தாடல்களில் பெருகளவில் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் பொது விவாதங்கள் பெரும்பாலும் கடுமையாக பிளவுபட்டிருக்கின்ற ஒரு காலகட்டத்தில் , ஈரானிய கப்பல் விவகாரத்தில் இணக்கப்பாட்டு உணர்வு காணப்படுவது கவனிக்கத்தக்கது. அத்துடன் அது ஆபத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு உதவும் சமுதாயம் ஒன்றின் பண்பாண்மையையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது.கடந்த வருடம் டிசம்பரில் டித்வா சூறாவளியினால் பாதிக்கப்படவர்களுக்கு உதவுவதில் இன வேறுபாடுகள் மற்றும் பின்புலங்களுக்கு அப்பால் மக்கள் அணிதிரண்டு நின்றதிலும் இதே போன்ற தோற்றப்பாட்டைக் காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலைவரத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகள் வியக்கத்தக்க வேகத்தில் கட்டவிழ்ந்தன. சூரிய உதயத்துக்கு முன்னர் அதிகாலை வேளையில் டினா கப்பல் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தது. அந்த கப்பல்  இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற மூன்று ஈரானியக் கடற்படைக் கப்பல்களில் ஒன்றாகும். அந்த  பயிற்சியில் இலங்கை உட்பட எழுபதுக்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றிருந்தன. இந்த வகையான கடற்படைப் பயிற்சிகள் துறைசார் நிபுணத்துவங்கள் பரிமாறப்படுவதை வளச்ப்பதையும் கடற்படைகளுக்கு இடையில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டவையாகும்.

கடற்படைப் பயிற்சி முடிவடைந்தபோது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூண்டிருக்கவில்லை. அந்த பயிற்சியில் பங்கேற்ற மூன்று ஈரானியக் கப்பல்களும் இந்தியத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு நாடுதிரும்பும் அவற்றின் பயணத்தில் சர்வதேச கடற்பரப்பிற்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தன. இத்தகைய கடற்படைப் பயிற்சிகள் தொடர்பிலான விதிமுறைகளின் கீழ்  தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் படைக்கலங்களை  பயிற்சியில் பங்கேற்கும் கப்பல்கள்  கொண்டிருக்காமல் இருக்கலாம்.

 அதனால், பிராந்திய நிலைலரம் முற்றுமுழுதாக மாறியதும் கப்பல்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குள்ளாகிவிட்டன.

இந்த ஈரானியக் கப்பல் தாக்குதல்களுக்கு பயன்படுத்தக்கூடிய படைக்கலங்களைக் கொண்டிருந்தாக அமெரிக்க கடற்படையின் இந்தோ–

 பசுபிக் கட்டளையகம் கூறுகிறது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் திடீரென வெடித்தமையால் ஆபத்திற்குள் பிரவேசப்பதாக இந்த கப்பல்களுக்கு ஈரான்  எச்சரிக்கை அறிவிப்பை விடுத்திருக்கும்.  பாதுகாப்புக்காக இலங்கை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு  வேண்டுகோள் விடுத்ததாகவும் ஆனால், இலங்கை அரசாங்கம் பதிலளிப்பதற்கு முன்னதாக டினா கப்பல் அமெரிக்க நீர்மூழ்கியின்  ஏவுகணை ஒன்றின்  தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது.

சர்வதேச சட்டம்

இலங்கையின் கடற்பரப்புக்கு சற்று வெளியே டினா கப்பல் மூழ்கடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இந்த நேரத்தில் இலங்கை எத்தகைய தீர்மானத்தை எடுத்திருந்தாலும், அது விளைவுகளைக் கொண்டிருக்கப்போகிறது. மத்திய கிழக்கின் தற்போதைய போர் எதைப்பற்றியும் யோசிக்காமல் நடத்தப்படுகிறது. அதில் பதினைந்துக்கும் அதிகமான நாடுகள் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இப்போது இலங்கையின் கடல் எல்லைக்கு நெருக்கமாக டினா மூழ்கடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் எமது நாட்டின் கரையோரத்துக்கு போர் நெருங்கிவந்துவிட்டதை எனபதைக் காட்டுகிறது.

போர்க்காலங்களில் சகல தரப்பிலும் உணர்ச்சிகள் பெருகிக் காணப்படும். எதிரிகளினதும் நண்பர்களினதும் எண்ணங்கள் திரிபுபடுத்தப்படலாம். போரில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தங்கள் பக்கத்தில் நிற்காதவர்களை தங்களுக்கு எதிரானவர்கள் என்று நினைத்து நிலைப்பாடுகளை எடுப்பதை நோக்கி தள்ளப்படுவர். அத்தகைய எண்ணம் நடுநிலைக்கோ அல்லது மனிதாபிமான தன்விருப்புக்கோ இடந்தராது.

அத்தகைய சூழ்நிலைகளில் மோதல்களில் நேரடியாகச் சம்பந்தப்படாத நாடுகள் இடையில் அகப்படுவதை தவிர்ப்பதற்காக வெளியில் இருக்கவே விரும்பும். தற்போதைய நெருக்கடியை இலங்கை கையாளுகின்ற விதம் மனிதாபிமானக் கோட்பாடுகள், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சர்வதேச ஊடகங்களுக்கு அறிவித்திருக்கிறார்.

1982 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடல் சட்டம் தொடர்பான சாசனம் ( The Convention of the Law of the Sea – UNCLOS) கடல்சார்  நடவடிக்கைகளை  நெறிப்படுத்தும் சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதுடன் கடலில் ஆபத்துக்கு உள்ளாவோருக்கு உதவி வழங்குவதற்கு அரசுகளை கடமைப்படுத்துகிறது. கடலில் ஆபத்தை எதிர்நோக்குபவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதையோ அல்லது எத்தகைய சூழ்நிலை அந்த ஆபத்தைத் தோற்றுவித்தது என்பதையோ பொருட்படுத்தாமல் அவர்களுக்கு நாடுகள் உதவ வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது.அதனால், உதவிக்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பையடுத்து இலங்கை எடுத்த நடவடிக்கை மனிதாபிமானத்தையும் சர்வதேச சட்டத்துக்கு மதிப்பளிப்பதையும் பிரதிபலிக்கிறது.

தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பலில் இருந்து உதவிகோரி அழைப்பு கிடைக்கப்பெற்ற ஒரு குறுகிய நேரத்திற்குள் மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் அதன் கடற்படையை அனுப்பியது. நீர்மூழ்கியின் தாக்குதலில் உயர்தப்பி, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த  முப்பதுக்கும் அதிகமான ஈரானியக் கடற்படையினரை இலங்கைக் கடற்படை மீட்டுக் காப்பாற்றியது. அந்த மீட்பு நடவடிக்கையில் இலங்கை கப்பல் மூழ்கடிக்கப்பட்டபோது பலியான எண்பதுக்கும் அதிகமானவர்களின் சடலங்கைளயும் கரைக்குக் கொண்டு வந்தது. மனிதாபிமானச் சவாலின் அளவு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.

இலங்கையிடம் இப்போது எண்பதுக்கும் அதிகமான ஈரானியர்களின் சடலங்கைளை வைத்திருக்கிறது. மேலதிகமாக, இரு நூறுக்கும் அதிகமான கடற்படையினருடன் வந்த ஐ.ஆர்.ஐ.எஸ். புஷெஹ்ர் என்ற இரண்டாவது ஈரானிய கடற்படைக் கப்பலும் இலங்கையின் பாதுகாப்பில் இருக்கிறது. அதனால் அரசாங்கம் உயிர் தப்பியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும்  அதேவேளை, இறந்து போன ஈரானிய கடற்படையினரின் சடலங்களைை கண்ணியமான முறையில் கையாளுவதற்குமான  பொறுப்பைக் கொண்டிருக்கிறது.

அரசியல் கடப்பாடு காரணமாக இல்லாமல் மனிதாபிமானக் கோட்பாடுகளின் அடிப்படையில் உதவி

செய்வதற்கு இலங்கை எடுத்த தீர்மானம்,  சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கின் முக்கியத்துவத்தை சகல நாடுகளுக்கும் உணர்த்துவதாக இருக்கிறது.  குறிப்பாக, பெரிய நாடுகளுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வல்லமை இல்லாத இலங்கையைப் போன்ற சிறிய நாடுகள் சர்வதேச சட்டத்தில் தங்கியிருக்க வேண்டியது முக்கியமானதாகும். இணங்கிக் கொள்ளப்பட்ட நியமங்களின் கட்டமைப்பு ஒன்றிற்குள் சகல அரசுகளுமே செயற்படுவதை உறுதி செய்வதன் மூலமாக சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பையாவது வழங்குகிறது.

அத்தகைய நியமங்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை இலங்கை வகித்திருக்கிறது. இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள் பொதூச்சபை 1971 ஆம் ஆண்டில் நிறைவேற்றியது. இதற்கான யோசனை இலங்கையிடமிருந்தே வந்தது. பெரிய வல்லரசுகளின் போட்டாபோட்டி மற்றும் இராணுவமயமாக்கலில் இருந்து இந்து சமுத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை வாதிட்டது.

தார்மீகக் கலங்கரை விளக்கம்

துரதிர்ஷ்டவசமாக, சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கு இயங்குவதாக இல்லை என்பதையே தற்போதைய உலக சூழ்நில் உணர்த்துகிறது. இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் சர்வதேச நடத்தைகளை ஓழுங்கமைப்பதற்காக உருவாக்கப்பட்ட நியமங்களும் நிறுவனங்களும் அலட்சியம் செய்யப்படும் போக்கு அதிகரித்து வருகிறது என்பதையே உலகின் வெவ்வேறு பாகங்களில் இடம்பெறுகின்ற மோதல்கள் காட்டுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் சர்வதேச சட்டம் மீதான பற்றுறுதியை வெளிக்காட்டுவது சிறியநாடுகளைப் பொறுத்தவரை, மேலும் கூடுதலான அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக வந்து விட்டது என்பதுடன் பெரிய நாடுகள் பெருமளவுக்கு எல்லோருக்கும் பொதுவான சிந்தனையையும் மனிதாபிமான அணுகுமுறையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அவசியம்.

அதனால், இத்தகைய பரந்த பின்புலத்திலேயே  ஈரானிய கடற்படையினர் விடயத்தில் இலங்கையின் மனிதாபிமான அணுகுமுறையை நோக்க வேண்டும். ஆபத்தில் இருந்தவர்களை மீட்பதற்கு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்ததன் மூலமாக இலங்கை அதன் செயற்பாடுகள் சர்வதேச வழிகாட்டலின் அடிப்படையிலானவை. என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது ; சமாதானப் பண்புகள், மனிதநேயப் பண்புகள், ஒத்துழைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் ஒரு நாடாக இலங்கை அதன் புகழை மேம்படுத்தியிருக்கிறது.ஈரானிய கடற்படையினரை நாடுதிருப்பியனுப்ப வேண்டாம் என்று இலங்கையை அமெரிக்க அரசாங்கம் வலியுறுதியதாக முன்னதாக வந்த அறிவிப்பு பிறகு மாற்றியமைக்கப்பட்டது இலங்கைக்கு பெரும் ஆறதலாக அமைகிறது. இலங்கை எடுத்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலானது என்பதை அமெரிக்கா பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

உள்நாட்டு மோதலின் விளைவான இலங்கையின்  சொந்த அனுபவங்கள்  பொதுமக்களின் உணர்வுகளையும் முக்கியமான வழிகளில் வடிவமைத்திருக்கிறது. சுமார் மூன்று தசாப்த காலமாக நீடித்த உள்நாட்டுப் போரினால் இலங்கை அவலப்பட்டது.  அந்த காலப்பகுதியில் மோதலில் ஈடுபட்ட தரப்பினருக்கு சிகிச்சை அளிப்பது, குடிமக்களைப் பாதுகாப்பது, ஆட்கள் காணாமல்போவது மற்றும் பொறுப்புக் கூறலுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முக்கியமானவையாக இருந்தன. அதன் விளைவாக,. போர்க் குற்றங்கள், காயமடைந்தவர்கள் அல்லது சண்டைகளில் ஊனமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் மோதல்களில் காணாமல் போனவர்களின் கதி ஆகியவற்றைக் கையாளும் சர்வதேச சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இலங்கை இன்று பரிச்சயமானதாகி விட்டது.

 மனிதாபிமான மற்றும போருக்கு பின்னரான பிரச்சினைகளில் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் வடிவில் சர்வதேச பிரசன்னம் தொடர்ந்தும் இலங்கையில் இருக்கிறது. மனிதாபிமானம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது காண்பிக்கும் கோட்பாட்டு ரீதியான பற்றுறுதியை அரசாங்கம் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் உட்பட இலங்கையின் சொந்த உள்நாட்டுப்போரின் விளைவான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் பிரயோகிக்க வேண்டும்.

மனிதாபிமானக் கோட்பாடுகளை உறுதிப்படுத்தி ஈரானிய கடற்படையினர் மற்றும்  அவர்களது கப்பல் தொடர்பில் செயற்பட்டதன் மூலமாக சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான தார்மீகக் கலங்கரை விளக்கமாக இலங்கை வந்திருக்கிறது. புவிசார் அரசியல் பகைமைகள்  தீவிரமடைந்து மனிதாபிமான நியமங்கள் அடிக்கடி அலட்சியம் செய்யப்படுகின்ற ஒரு நேரத்தில், இலங்கை முன்னெடுத்ததைப் போன்ற நடவடிக்கைள் அடையாளபூர்வ முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன.

உள்நாட்டிலும் அதேபோன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் செயற்படக்கூடிய ஆற்றல் இருக்குமானால்

வெளிநாட்டு விவகாரத்தில் எடுத்த தார்மீக நிலைப்பாட்டின் நம்பகத்தன்மை மேலும் மேம்படும். பொறுப்புக்கூறல், நீதி, இழப்பீடு மற்றும் நல்லிணக்கம் உட்பட உள்நாட்டுப்போரின் விளைவாகத் தோன்றிய தீர்வுகாணப்படாத பிரச்சினைகளுடன் இலங்கை தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு அதன் சொந்த குடிமக்கள் தொடர்பில் மாத்திரமல்ல, எல்லா இடங்களிலும் துன்பத்துக்குள்ளாகும் மனிதகுலம் தொடர்பிலும் கடமை ஒன்று இருக்கிறது. உள்நாட்டில் சொந்தப் பிரச்சினைகளுக்கு மானசீகமாக  தீர்வுகளைக் காண்பது சர்வதேச சமூகத்தில் இலங்கையின் தார்மீக மதிப்பை வலுப்படுத்தும் என்பதுடன் புதிய சிறந்த ஒரு உலகத்துக்கான சக்தியாக மாறுவதற்கும் உதவும்.

Leave A Comment