முற்றுகைக்குள் யூ.எஸ். எயிட் நிறுவனமும் அரசாங்க சார்பற்ற தொண்டர் அமைப்புக்களும்
- Editor
- March 14, 2025
- தமிழ் Header, பத்திகள்
- பத்திகள்
- 0 Comments

கலாநிதி ஜெகான் பெரேரா
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின்( யூ.எஸ். எயிட் — United States Agency for Internatiinal Aid — USAID ) ஊடாக வழங்கப்படும் அமெரிக்க அரசாங்கத்தின் பல கோடி டொலர்கள் வெளிநாட்டு உதவித் திட்டம் இரவோடிரவாக இடைநிறுத்தப்பட்டமை அமெரிக்காவிலும் அந்த உதவி முக்கியமாக இருக்கின்ற உலகின் ஏனைய பாகங்களாலும் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்தது. யூ.எஸ். எயிட்டின் செயற்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டதால் அமெரிக்காவிலும் கூட உதவித் துறையில் முன்னறிவித்தல் இன்றி பெரும் எண்ணிக்கையானோர் தொழில்வாய்ப்புக்களை இழப்பதற்கு வழிவகுத்திருக்கிறது.
பட்டினி அல்லது போர்ச் சூழ்நிலைகளில் மக்களின் இடர்பாடுகளை தணிப்பது போன்று அமெரிக்க உதவி முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகிக்கின்ற உலகின் பாகங்களில் நிராதரவான பெரும் எண்ணிக்கையான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இலங்கையில் அமெரிக்க உதவி இடைநிறுத்தம் முற்றிலும் வேறுபட்ட காரணத்துக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது.
வெளிநாட்டு உதவி செயற்திட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்களை அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான முறையில் வெளிநாட்டு உதவி செயற்திட்டம் செயற்திறன் இல்லாமல் கையாளப்படுவதாகவும் அமெரிக்க நலன்களுக்கு உதவுவதாக இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதைப் பயன்படுத்தி இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் குறிப்பாக முன்னைய அரசாங்கங்களில் முன்னணிப் பாத்திரத்தை வகித்தவர்கள் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் அவ்வாறு கவனத்தை திருப்ப வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த முன்னாள் அரசாங்க தலைவர்கள் தங்களின் தவறான ஆட்சிமுறை மற்றும் ஊழல் முறைகேடுகள் காரணமாகவன்றி , யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் நிதியுதவியைப் பெறும் அரசாங்க சார்பற்ற தொண்டர் அமைப்புக்களின் சதிவேலைகளின் விளைவாகவே தாங்கள் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டதாக கூறுகிறார்கள்.
2022 ஆம் ஆண்டின் முன் மாதங்களில் அன்றைய அரசாங்கத்தை பதவியில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுத்து நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த இலட்சக்கணக்கான மககள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். பொதுமக்கள் எதிர்நோக்கிய முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக அறகலய ஆர்ப்பாட்டங்கள் தடுத்து நிறுத்த முடியாத ஒரு பேரியக்கமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசாங்கத்தில் இருந்தவர்கள் நாட்டின் செல்வத்தை களவாடிவிட்டார்கள் என்று நம்பினார்கள். எரிபொருள், உணவு வகைகள் மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய இறக்குமதிகளை செய்வதற்கு வெளிநாட்டுச் செலாவணி ( டொலர்கள் ) இல்லாத அளவுக்கு நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. எரிபொருட்களைப் பெறுவதற்கு நீண்ட வரிசைகளில் கால்கடுக்க காத்துநின்று களைத்துப்போய் பலர் இறந்தார்கள். வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் இல்லாத நிலையில் மேலும் பலர் இறந்தார்கள்.
அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் மீது விசாரணை
தற்போது விசாரணைகளுக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் அரசாங்க தலைவர்கள் சிலர் இலங்கைக்கு யூ.எஸ். எயிட் நிறுவனம் வழங்கிய நிதியுதவிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்திடம்( National NGOs Secretariat) அந்த பொறுப்பை ஒப்படைத்ததன் மூலம்
அந்த விசாரணைக் கோரிக்கைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதிலளித்திருக்கிறது.
அரச நிறுவனமான இந்த அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் செயலகம் தான் அதில் பதிவு செய்யப்பட்ட அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு எங்கிருந்து நிதியுதவிகள் கிடைக்கின்றன, எவ்வளவு நிதியுதவி கிடைக்கிறது, அந்த நிதியைப் பயன்படுத்தி மக்களின் மேம்பாட்டுக்காக அவை எத்தகைய திட்டங்களை முன்னெடுக்கின்றன என்ற விபரங்களைை திரட்டும் பணிக்கு பொறுப்பாக இருக்கிறது. இலங்கையில் யூ.எஸ். எயிட் நிதியுதவி தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆராயப்போவதாகவும் அதற்காக தனது அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்க சார்ர்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்திடமிருந்து அறிக்கை ஒனறைக் கேட்டிருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியிருக்கிறார்.
யூ.எஸ். எயிட் உட்பட இலங்கையில் செயற்படும் பெரும்பாலான உதவி வழங்கும் நிறுவனங்கள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு நிதியைப் பகிரும்போது கடுங்கண்டிப்பான செயன்முறைகளை பின்பற்றுகின்றன. வழமையாக, உதவி வழங்கும் நிறுவனங்கள் அவற்றுக்கு அக்கறையுள்ள துறைகளை விசேடப்படுத்தி யோசனைகளை சமர்ப்பிக்குமாறு அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களைக் கோருகின்றன. நிதியுதவியைப் பயன்படுத்தி செய்யப் போகின்றவற்றைப் பற்றியும் அவற்றினால் ஏற்படக்கூடிய தாக்ங்கள் பற்றியும் கணிசமான விபரங்களை சமர்ப்பித்து அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் நிதியைப் பெறுவதற்கு போட்டிபோட வேண்டியிருக்கிறது. நன்கொடை கிடைக்கப்பெற்றதும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அவை முன்னெடுக்கின்ற பணிகள் குறித்து கிரமமாக அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வழங்கப்படுகின்ற நிதியுதவி தொடர்பில் கிரமமாக வருடாந்தம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு தடவையேனும் கணக்காய்வு நிறுவனங்கள் மூலமாக, ( சர்வதேச புகழ்பெற்ற கணக்காய்வு நிறுவனங்கள் விரும்பத்தக்கது) கணக்காய்வு செய்யப்படவேண்டும் என்று இந்த உதவி வழங்கும் நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. தாங்கள் ஆதரவளிக்கின்ற செயற்திட்டங்களின் தாக்கங்களை மதிப்பீடு செய்வதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் சுயாதீனமான வெளி கண்காணிப்பாளர்களையும் அனுப்பக்கூடும்.
பொதுமக்களைக் கவராத ஆனால், அதேேளை சகல பிரிவினரையும் அரவணைக்கும் நீதியான சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு அவசியமான கஷ்டமான செயற்திட்டங்களை பெரும்பாலும் முன்னெடுப்பதே அரசாங்க சா்பற்ற தொண்டர் நிறுவனங்களின் பணிகளின் பெறுமதியாகும். ஆங்கில தத்துவஞானி ஜோன் றஸ்கினின் எழுத்துக்கள் தந்த ஊக்கத்தினாலேயே. இந்தியாவில் மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். சமுதாயம் ஒன்று அதன் கடைசி உறுப்பினரின் நலன்களையும் உறுதிசெய்வதில் அக்கறை காட்டுவதாக இருந்தால் மாத்திரமே அது நல்ல சமுதாயமாக இருக்கும் என்று 1860 ஆம் ஆண்டில் றஸ்கின் எழுதினார்.
சிறுவர்கள் பராமரிப்பு, சுகாதாரம், அபிவிருத்தி அல்லது சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் என்று எந்த துறையாக இருநாதாலும் சமூகத்தின் பாதுகாப்பில் இருந்து எந்த ஒருவரையும் ஒதுக்காமல் சகலரையும் அரவணைப்பற்காக பாடுபடுவதே ( இதில் அரசாங்கம் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது) அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பலவற்றின இலட்சியமாகும்.
சுயநலன்
யூ.எஸ். எயிட் வழங்கிய நிதியுதவிகளையும் அவற்றைப் பெற்ற அமைப்புக்களையும் விசாரணை செய்யவேண்டும் என்று இப்போது கோருகின்றவர்கள் அத்தகைய நிதியுதவிகளை யூ.எஸ். எயிட் வழங்கியபோது அரசாங்கத்தில் இருந்தவர்களே. அப்போது அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் தேசிய செயலகம் இயங்கிக் கொண்டிருந்தது. அது அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் அதன் பணியைச் செய்து கொண்டிருந்தது.
வழங்கப்படுகின்ற நிதியுதவிகள் பக்கச்சார்பான அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான கடுமை வாய்ந்த கொள்கைகளை யூ.எஸ். எயிட் போன்ற நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன. அதன் காரணத்தினால்தான் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அவற்றின் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும்போது அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் சேர்ந்தவர்களை அழைப்பதை உறுதி செய்துகொள்கின்றன. தங்களது பணிகள் அரசியல் ரீதியில் குறுகிய நோக்குடன் பக்கச்சார்பானவையாக நோக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்யப்படுகிறது.
தற்போதைய நிலைவரம் இலங்கையிலும் உகளாவிய ரீதியிலும் அரசாங்க சார்பற்ற தொணடர் நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கடிமிக்கதாக இருக்கிறது. இதுகாலவரையில் நிதியுதவிகளைச் செய்த சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்களில் யூ.எஸ். எயிட் தான் மிகவும் பெரியதாக விளங்கி வந்திருக்கிறது. அதனால், யூ.எஸ். எயிட்டின் நிதியுதவி திடீரென்று இடைநிறுத்தப்படுவதன் விளைவாக பல அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் அவற்றின் பணிகளை நிறுத்தவும் வேண்டியிருக்கிறது. சில அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மூடப்பட்டும் விட்டன.
சர்வதேச உலக ஒழுங்கு பெருமளவுக்கு வெளிப்படையாக சுயநலனை அடிப்படையாக, அதாவது உலகளாவிய நலன்களுக்கு மேலாக தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதாகவும் பொதுவில் மக்களின் நலன்களுக்கு மேலாக சமுதாயத்தின் செல்வச் செழிப்புடைய பிரிவினரின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதாகவும் மாறிவருகின்றது போன்று தோன்றுகிறது.
இது மனித குலத்துக்கோ அல்லது மனித நாகரிகத்துக்கோ ஆரோக்கியமான நிலைவரம் அல்ல. மற்றவர்களின் அதாவது அயலவர்களினதும் உயிர்வாழும் சகல பிறவிகளினதும் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றே உலகின் மதங்களைப் படைத்தவர்கள் போதித்தார்கள்.
சர்வதேச முறைமையில் சர்வஜன உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தாராளாத சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தியபோது 1968 ஆம் ஆண்டில் கூர்ப்பியல் விஞ்ஞானியான காறெட் ஹார்டின் ” துன்பியல் ” The teagedy of the Cimmons ” என்று ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதினார். அளவுக்கு அதிகமான சனத்தொகையின் பாதக விளைவுகளை விளக்கிக் கூறுவதற்கு உதாரணமாக அவர் ஆடுகளின் மேய்ச்சல் தரையை அவர் உதாரணமாக பயன்படுத்தினார்.
தனிநபர்கள் தங்களது சுயநலத்துக்காக செயற்பட்டு, ( மேய்ச்சல்தரை அல்லது மீன்வளம் போன்ற ) பொதுவான வளங்களை மிகையாகச் சுரண்டும்போது அவை வெறுமையாகி சகலருக்கும் பாதகமான முறையில் நீண்டகாலத்தில் இறுதியில் அழிந்துபோகின்றன. பொதுவான வளங்களை ஒழுங்கு கட்டுப்பாடின்றி பயன்படுத்தும் சுதந்திரம் இறுதியால் அவை ஒருவருக்குமே கிட்டாமல் பாழ்பட்டுப் போய்விடக்கூடிய நிலைமை உருவாகலாம். உலகம்்இன்று அந்த திசையிலேயே சென்று கொண்டிருக்கிறது போன்று தெரிகிறது. இத்தகைய சூழ்நிலையில், சகலரினதும் நல்வாழ்வுக்காக பாடுபடுகிறவர்களின் பணிகளை மலினப் படுத்துவது அல்ல, வலுப்படுத்துவதே அவசியமாகும்.

