அமெரிக்கத்தூதுவருடன் அமைச்சர் விஜித சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கு இடையிலான நேற்றைய சந்திப்பின்போது, இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தொடர்புகளை சீரான சமநிலையில் பேணுவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 44 சதவீத தீர்வை வரி தொடர்பில் அமெரிக்கத் தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 07-04-2025அன்று கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தகத்தொடர்புகளை சீரான முறையில் சமநிலையில் பேணுவது குறித்து ஆக்கபூர்வமாகக் கலந்துரையாடியதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இவ்விடயத்தில் அமெரிக்காவுடன் பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையிலான செயன்முறையைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்து தான் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘நியாயமானதும், சீரானதுமான வர்த்தகத்தொடர்புகளைப் பேணுவதானது பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும், இருநாடுகளினதும் கைத்தொழில் துறைகளை வலுப்படுத்துவதற்கும் பங்களிப்புச்செய்யும்’ என்றும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Comment