நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் வெற்றி விரிவுபடுத்தப்பட வேண்டியது அவசியம்

இலங்கையின் நவீன வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் பாரதூரமான பொருளாதார வீழ்ச்சியை  வெற்றிகொள்வதற்கு அரசாங்கங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமாக முயற்சித்து வருகின்றன. தற்போதைய அரசாங்கம் மழுப்பலின்றி சர்வதேச நாணய நிதியத்துடன் பேசசுவார்த்தைகளை நடத்துவதன் மூலமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும் நீதிமனறங்கள்  சுயாதீனமாகச் செயற்படுவதற்கு அனுமதிப்பதன் மூலமும் அதன் மீது  சர்வதேச பங்காளிகளும்  பொதுமக்களும் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை  உருவாக்கியிருக்கிறது.

இந்த நம்பகத்தன்மை முன்னைய அரசாங்கங்கள் இதுகாலவரை பெறத்தவறிய ஒரு வாய்ப்பை இன்றைய அரசாங்கத்துக்கு வழங்குகிறது. இந்த நம்பிக்கையை போரின் மரபுக்கு முகங்கொடுப்பதற்கும் இன்னமும் பிளவுபட்டிருக்கும் நாட்டை குணப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தமுடியும்,  பயன்படுத்தவும் வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் புதிய உறவுமுறை இந்த நம்பகத்தன்மையின் தெளிவான அறிகுறியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச்சபை கடந்தவாரம் விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி திட்டத்தின் நான்காவது மீளாய்வை நிறைவுசெய்து இன்னொரு 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு விடுவிப்பதற்கு அதிகாரமளித்திருக்கிறது.

முன்னைய மீளாய்வுகளின்போது செலவின நிலுவைகள் குறித்து அறிவிக்கத் தவறியதை ஒத்துக்கொண்ட அரசாங்கம் அதன் தரவுகளின் நேர்மையை மேம்படுத்துவதற்கு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை விளக்கிக்கூறியதை அடுத்து அதே அமர்வில் நிறைவேற்றுக்குழு விட்டுக்கொடுப்பைச் செய்திருக்கிறது. அபராதத்தை விதிப்பதற்கு பதிலாக சர்வதேச நாணய நிதியம்  அரசாங்கம் எடுக்கவிருப்பதாக கூறிய திருத்த நடவடிக்கைகளையும் நிதித்துறை வெளிப்படைத்தன்மை மீதான ஆழமான பற்றுறுதியையும் ஏற்றுக்கொண்டு சலுகை காட்டியிருக்கிறது.

கடனுதவிகளை பெறும் நாடுகள் தவறான தகவல்களை வெளியிடும்போது சர்வதேச நாணய நிதியம்  உதவியை முடக்கிவிடும். 2001 ஆம் ஆண்டில் உக்ரெயினிலும் 2004 ஆம் ஆண்டில் டொமினிக்கன் குடியரசிலும் அவ்வாறு நடந்தது. ஆனால், இலங்கை விடயத்தில் இந்த தடவை அவ்வாறு சர்வதேச நாணய நிதியம்  நடந்துகொள்ளாததன் மூலம்  சீர்திருத்தம் மீதான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் அதற்கு இருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டியிருக்கிறது. வரி அதிகரிப்புகளும் மானியங்கள் வாபஸும் மக்களின் பொருளாதார இடர்பாடுகளை அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் அரசாங்கம் அத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கிறது.

அன்னிய செலாவணி கையிருப்பு உறுதி நிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. பணவீக்கம் குறைந்திருக்கிறது. உலகளாவிய வர்த்தகத்தில் நிலவும்  கொந்தளிப்பு புதிய ஆபத்துக்களை தோற்றுவிக்கின்ற போதிலும் இலங்கையின் பொருளாதாரம் மிதமான வளர்ச்சியைக் காட்டியிருக்கிறது. இருதரப்பு மற்றும் வர்த்தக கடனுதவியாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு நிறைவை நெருங்குகிறது. அதேவேளை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏறனபடுத்துகின்ற வகையில் தன்னியல்பான மின்சாரக் கட்டண விதிமுறை  நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

மக்களின் முன்னுரிமைகள்

கடந்த காலத்தில் இடம்பெற்ற பணவீக்கம் மற்றும் சம்பள அதிகரிப்பு  இன்மையின் விளைவாக  உண்மையான வருமானம் நெருக்கடிக்கு முன்னரான காலகட்டத்தில் இருந்த மட்டங்களை  விடவும் இன்னமும் குறைவானதாகவே இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக 2024 ஆகஸ்டில் தேசிய சமாதானப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வேட்பாளர் தெரிவில் மக்களின் முதல் முன்னுரிமை பொருளாதார அபிவிருத்தியாகவே இருந்ததை வெளிக்காட்டியது.

கலாநிதி மகேஷ்  சேனநாயக்கவும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வி கிறிஷ்ணி சில்வாவும் செய்த ஆய்வு இலங்கையின் அரசியல் பின்புலத்தில் வாக்காளர்களின் நடத்தைகளை தீர்மானித்த முக்கிய காரணிகள் தொடர்பில் பெறுமதியான உள்நோக்கை தருகிறது. தொடரும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியிலும், அரசாங்கத்தின் நேர்மையில் நம்பிக்கை வைப்பதற்கு வாக்காளர்கள் காத்திருக்கத் தயாராயிருந்தார்கள் என்று தோன்றியது.

பொருளாதார அக்கறைகள், தலைவர்கள் பற்றிய எண்ணம், பொது நிறுவனங்கள் மீதான  நம்பிக்கை மற்றும் சமூகப் பிரச்சினைகள் போன்ற காரணிகள் தேர்தல் தீர்மானங்களில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தின என்பதை தேசிய சமாதானப் பேரவையின் ஆய்வு ஆராய்ந்தது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி,  ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் நல்லாட்சியை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றைக் கையாளுவதற்கு தெளிவான  மூலோபாயங்களை முன்வைக்கும் வேட்பாளர்களை ஆதரிப்பதற்கே அதிகப் பெரும்பான்மையான வாக்காளர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள் என்பதை ஆய்வு வெளிக்காட்டியது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 93 சதவீதமானோர் பொருளாதார நெருக்கடியை தீர்த்துவைப்பதற்கான வேட்பாளரின் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டே தாங்கள் வாக்களிக்கப்போவதாக கூறினார்கள். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் உறுதிப்பாடு கொண்ட வேட்பாளருக்கே தாங்கள் முன்னுரிமை கொடுக்கப் போவதாக 83 சதவீதமானோர் கூறினர். உறுதியான கல்விப் பின்புலத்தைக் கொண்ட வேட்பாளர்களையே தாங்கள் விரும்புவதாக 86 சதவீதமானவர்கள் கூறினர். அரசியல் ஆதிக்க வம்சங்களுக்கு மேலாக தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கே இவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதை இது வெளிக்காட்டியது.

ஊழலைக் கையாள்வதிலும் நம்பிக்கை தங்கியிருக்கிறது. வேறு எதையும் விட தண்டனையின்மை நம்பிக்கையை விரைவாகவே அரித்துவிடுகிறது. பொரளாதாரக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னேற்றத்தை மிகவும் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. 

அண்மையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வொன்று விளையாட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்ததில் பொதுப்பணத்தை கையாடியமைக்காக இரு முன்னாள் அமைச்சர்களுக்கு இருபது, இருபத்தைந்து வருடங்கள் சிறைத்தண்டனையை விதித்தது. முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இந்த சம்பவம் எந்த பதவியில் இருந்தவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பமுடியாது என்பதையும் பொருளாதாரக் குற்றங்களுக்கு நீதிமன்றங்களில் பொறுப்புக் கூறவேண்டியிருக்கும் என்பதையும் வெளிக்காட்டியது.

தங்களது ஆணையை நிறைவேற்றுவதை தடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்யாமல் இருக்குமேயானால், ஊழல் பிரச்சினையை அரசாங்க நிறுவனங்களினால் கையாளக்கூடியதாக இருக்கும் என்பதை பொலிஸ் மற்றும் நீதித்துறையுடன் சேர்ந்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நிரூபித்திருக்கின்றது. பொருளாதாரம் சம்பந்தப்படாத குற்றச் செயல்களிலும் இதே கோட்பாடு பிரயோகிக்கப்படும்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்காக முன்னாள் கருணா குழுவின் உறுப்பினர் ஒருவர் அண்மையில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பொருளாதாரத்துடன் சம்பந்தப்படாத குற்றச் செயல்களை பொறுத்தவரையிலும் உறுதியாகச் செயற்படக்கூடியது சாத்தியம் என்பதை காட்டுகிறது. பொருளாதாரக் குற்றங்களைக் கையாளுவதிலும் அவற்றில் குற்றவாளியாகக் காணப்பட்டவர்களை சட்டத்துக்கும் நீதித்துறைக்கும் பொறுப்புக்கூற வைப்பதிலும் காணப்பட்டிருக்கும் வெற்றி மூன்று தசாப்தகால போரின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பான நீடித்த பிரச்சினையை கையாளுவதற்கான வழியைக் காட்டுகிறது.

சர்வதேச ஈடுபாடு

போர்க்குற்றங்கள் தொடர்பான பிரச்சினையை திருப்திகரமான முறையில் கையாளுவதற்கு அரசாங்கங்கள் தவறியமை போர்க்குற்றங்கள்  மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச ஈடுபாடு வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு வழிவகுத்திருக்கிறது. இதை அரசாங்கங்கள் எதிர்த்து வந்திருக்கின்றன. விசாரணையாளர்கள், வழக்குத்தொடுநர்கள் மற்றும் நீதிபதிகள்  என்ற வடிவில் நேரடியான சர்வதேச தலையீடு தேசிய இறைமைக்கு பாதிப்பாக அமையும் என்று அதற்கு அரசாங்கங்கள் காரணத்தைக் கூறின. இந்த காரணத்தைக் காட்டியே கடந்த காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் இந்த விவகாரத்தை இராஜதந்திர ரீதியாக கையாண்டார். சர்வதேச உதவி என்பது  உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஆதரவு வழங்குவதே என்று அவர் அறிவித்தார்.” நம்பகத்தன்மை கொண்டதும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கைக்குரியதுமான உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இலங்கை போராடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணத்தினால் தான் சர்வதேச மட்டத்திலான உதவியின் ஊடாக நீதிக்காக வெளியாரை இலங்கை எதிர்பார்க்கிறது. இறுதியில் இது இலங்கை அரசின் பொறுப்பேயாகும். இந்த செயன்முறை தேசிய ரீதியிலானதாக அமையவேண்டும். அதற்கு சர்வதேச வழிவகைகளின் ஊடாக ஆதரவையும் உதவியையும் வழங்க முடியும் ” என்று வொல்கர் டேர்க் கூறினார்.

ஆனால், உள்நாட்டில் அரசியல் எதிர்ப்பு கிளம்பக்கூடிய சாத்தியத்தின் விளைவாக போர்க்குற்றங்கள் விவகாரத்தை கையாளுவதில்  தயக்கம் தொடருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செம்மணி புதைகுழி பகுதிக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும் என்று மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உறுதியான  நிலைப்பாட்டை எடுத்த காரணத்தினாலேயே அந்த பகுதிக்கான  அவரின் விஜயம் சாத்தியமானது. உயர்ஸ்தானிகர் மனித புதைகுழி பகுதிக்கு அல்ல மயானத்தின் வாசலுக்கு வருவதற்கு  மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்க பிரதிநிதிகள் தெரிவித்த ஆட்சேபத்தை நீதிமன்றம் நிராகரித்தது. சுயாதீனமானதும் வெளிப்படையான கண்காணிப்புடன் கூடியதுமான செயன்முறை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசாங்கத்தின் மதிப்பை வலுப்படுத்தும்.

நம்பிக்கையை வென்றெடுத்தல்

சான்றுகளைப் பேணிக்காப்பதையும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஆய்வுகூட ஆராய்ச்சியையும் கண்காணிப்பதற்கு சுயாதீனமான அவதானிகளை அனுமதித்தால் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிநிற்கும் உத்தரவாதத்தை வழங்கக்கூடியதாக இருக்கும். அத்தகைய வெளிப்படைத் தன்மைக்கான வகைமாதிரி ஏற்கெனவே அரசாங்கத்திடம் இருக்கிறது. அரசாங்கம் அதன் நிதிக் கொள்கை விரிவான வெளி மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதிய அலுவலர்கள் திறைசேரியின் ஒவ்வொரு பிரிவினதும் புத்தகங்களை பரிசோதனை செய்கிறார்கள், தகவல்களை சரிபார்க்கிறார்கள், இலக்குகள் தவறவிடப்படும்போது அவற்றை சரிசெய்துகொள்ளுமாறு வலியுறுத்துகிறார்கள். இத்தகைய மேற்பார்வை நாட்டை பலவீனப்படுத்தவில்லை, மாறாக நாட்டுக்கு உதவுகிறது என்று பொதுமக்கள் இப்போது நம்புகிறார்கள். முதலீடுகளைக் கவருவதற்கும் சகலருக்கும் சட்டங்கள் பிரயோகிக்கப்படுவதை வரியிறுப்பாளருக்கு உத்தரவாதப்படுத்துவதற்குமான நம்பிக்கை முத்திரையாக இது கருதப்படுகிறது.

காணாமல் போனோர் பற்றிய உண்மை உறுதிப்படுத்தப்படாத வரை போரின் ‘ ஆவியை ‘ இலங்கையினால் அடங்கவைக்க முடியாது. ஆங்கில,  சிங்கள ஊடகங்களினால்  பெருமளவுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், வடக்கு, கிழக்கில் செம்மணி மனித புகைகுழி விவகாரம் வேதனைமிகு நினைவுகளை மீட்கிறது என்பதுடன் அன்றாட கலந்துரையாடல்களில் முக்கிய தொனிப் பொருளாகவும் இருக்கிறது. நியாயப்படுத்தக்கூடிய அக்கறைகளையும் கடந்த காலத்தில்  சான்றுகளை பாதுகாப்பதற்கு தவறியமையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சான்றுகளைப் பேணிக்காப்பதற்கு சர்வதேச பங்கேற்பு குறித்து பரிசீலிக்க முடியும். மேலும்,  சான்றுகள் சேகரிக்கப்படுவதையும் சர்வதேச அனுபவத்தின் அடிப்படையில் விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்யப்படுவதையும் உறுதிப்படுத்த சர்வதேச நிபுணர்களைக் கொண்டுவர முடியும்.

மக்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதில் இருக்கும் பற்றுறுதி தொடர்பில் அவர்களின் நம்பிக்கையையும் சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையையும் வென்றெடுத்ததைப் போன்று அரசாங்கம் போரில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க முடியும். சர்வதேச ரீதியில் மதிக்கப்படுவதும் நம்பகத்தன்மை கொண்டதுமான தேசிய அடிப்படையிலான பொறுப்புக்கூறல் செயன்முறை ஒன்றை அரசாங்கத்தினால் வகுக்கமுடியும். அதன் மூலமாக, மோதல்களுக்கும் பிளவுகளுக்கும் உள்ளாகியிருக்கும் இன்றைய உலகிற்கு தேசிய நல்லிணக்கத்துக்கான ஒரு சிறந்த உதாரணமாக  இலங்கை விளங்க முடியும்.

Leave A Comment