2025 ஆம் ஆண்டிலும் கூட கறுப்பு ஜூலை ஏன் கவனத்தில் எடுக்க வேண்டியதாக இருக்கிறது?

கலாநிதி ஜெகான் பெரேரா

 தலைநகர் கொழும்பிலும் நாடு பூராவும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படவும் பல்லாயிரக்கக்கானவர்கள் இடம்பெயரவும் வழிவகுத்த வழிவகுத்த தமிழர் விரோத இனவன்செயலின் 42 வது வருடாந்தத்தை இவ்வாரம் குறித்து நிற்கிறது. யாழ்ப்பாணத்தில் 1983 ஜூலை 23 ஆம் திகதி இராணுவ ரோந்து அணி ஒன்றின் மீது விடுதலை புலிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 13 படைவீரர்கள் பலியான சம்பவமே கொழும்பில் முதலில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை மூளவைத்தது. அதைத் தொடர்ந்து வந்த ஒருவாரத்தைப் பற்றிய உண்மையை கண்டறிவது இன்னமும் கூட கஷ்டமானதாகவே இருக்கிறது. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து அரசாங்கமே முடங்கிப்போனபோது அந்த வாரத்தில் காடையர்களின் வன்முறையில் எத்தனை தமிழர்கள் இறந்தார்கள் என்பது தீர்வு காணப்படாத பிரச்சினைகளில் ஒன்றாகும்.

தங்களது தமிழ் அயலவர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ்க் குடும்பங்கள் பாதுகாப்பு கொடுத்ததன் விளைவாக பெருமளவு வன்செயல்கள் தவிர்க்கப்பட்டது. 1983 ஜூலையில் இழைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியது தொடர்பான கேள்வியும் தடுக்கக் கூடியதாக இருந்த போதிலும், அந்த வன்செயல் ஏன் தடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் 1990 களின் பிற்பகுதியில் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட செம்மணி புதைகுழிகள் தொடர்பான இன்றைய அக்கறைகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

சனத்தொகை மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்றதும் வழமையான சட்ட முறைமையினால் கையாளமுடியாமல் இருக்கின்றதுமான பாரிய குற்றச் செயல்களை கையாளுவதில் நெருக்கடியை நாடுகள் மத்தியில் இலங்கை ஒன்றும் தனித்துவமானது அல்ல. இதன் காரணத்தினால் தான் மோதல்களுக்கு பின்னரான சமூகங்கள் உண்மையை நிறுவவும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை மேம்படுத்தவும் நிறுவன ரீதியான பொறிமுறைகள் தேவை என்ற அடிப்படையிலும் அரசியல் வாழ்வு என்பது பின்னிப்பிணைந்த ஒன்று என்பதை அங்கீகரிக்கும் அடிப்படையிலும்  நிலைமாறுகால நீதி என்ற கோட்பாடு (Concept of Transitional Justice ) வகுக்கப்பட்டது.

உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து உறுதிப்படுத்துவதே  இந்த செயன்முறையின் முதலாவது படியாக இருக்கவேண்டும். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழிகளின் உண்மையைக் கையாளுவதில் சவால்களை எதிர்நோக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருப்பதைப் போன்றே 1983 கறுப்பு ஜூலை பற்றிய உண்மையையும் கண்டறிந்து நிறுவவேண்டியதும் அவசியமானதாகும். பொதுமக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் கண்முன்னால் பாரிய அட்டூழியங்கள் இடம்பெறுவதை இலங்கை அரசு தடுக்கத்தவறிய காரணங்களை அடையாளம் காணவேண்டியது முக்கியமானதாகும். அந்த அட்டூழியங்களினால்  பொதுவில் இலங்கைக்கும்  குறிப்பாக சிங்களச் சமூகத்துக்கும் பல வருடங்களாக களங்கத்தை ஏற்படுத்தியிருந்தன

ஐரோப்பாவில் இதே போன்ற சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் ஸ்பெயின் மற்றும் சைப்பிரஸ் போன்ற நாடுகளில் ஐம்பதுக்கும் தொண்ணூறுக்கும் இடைப்பட்ட வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற அட்டூழியங்கள் பற்றிய நேரடி நினைவுகளை நடுத்தர வயதுக்கும் அதிகமானவர்களே கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் ஐம்பதுக்கும் குறைவான வயதுகளில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கறுப்பு ஜூலை பற்றிய நினைவு அல்லது அறிவு கிடையாது. அதன் விளைவாக, கறுப்பு ஜூலை பற்றிய உண்மையைக் கண்டறியவேண்டும் என்று  அரசியல் கோரிக்கை பெரிதாக இல்லை. ஆனால், இலங்கை ஐக்கியப்பட்ட ஒரு நாடாக முன்னேற்றம் காணவேண்டுமானால், அரசியல் இணக்கப்பாடுகளை விடவும் கூடுதலான அளவுக்கு நல்லிணக்கமே அவசியமாகிறது.

இனம், மதம்,  சாதி மற்றும் வர்க்கம் ஆகியவற்றுக்கு அப்பால் சகல சமூகங்களையும் பாதுகாத்து, மதித்து சமத்துவமானவர்களாக நடத்தக்கூடிய அரசு ஒன்றை தற்போதைய தலைமுறை கட்டியெழுப்புவதிலேயே அமைதியான — ஐக்கியமான எதிர்காலம் தங்கியிருக்கிறது. ” முறைமை மாற்றத்தை ” கொண்டுவருவதாக உறுதியளித்தமைக்காக மக்கள் அமோகமாக வாக்களித்து அதிகாரத்துக்கு கொண்டுவந்த தற்போதைய அரசாங்கத்துக்கு இது விடயத்தில், பிரத்தியேகமான கடப்பாடு இருக்கிறது. போட்டி அரசியல் கட்சிகளின் நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளை நிராகரித்த சகல சமூகங்களையும் சேர்ந்த வாக்காளர்களின் ஆதரவை இந்த அரசாங்கம் வென்றெடுத்தது.

முன்னோக்கிப் பார்த்தல்

உண்மையுடன் ஊடாடுவதற்கும் மீண்டும் அத்தகைய வன்செயல் இடம்பெறுவதற்கு அனுமதிப்பதில்லை என்ற கூட்டு உறுதிப்பாட்டைப் பலப்படுத்துவதற்குமான ஒரு தருணமாக கறுப்பு ஜூலையை நினைவுகூர வேண்டியது அவசியமாகும். இந்த பின்புலத்தில், அரசாங்கத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 1983 ஜூலை நிகழ்வுகளை  ஆராயவேண்டிய தேவை இருக்கிறது. ஆணைக்குழு தொடர்பான சட்டமூல வரைவு அந்த விடயங்களை கூறுகிறது.

” 1983 ஜூலை 24 ஆம் திகதி தொடக்கம் 2009 மே 18 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின்போது இடம்பெற்ற, அவற்றுடன்  தொடர்புபட்ட அல்லது அவற்றைத் தொடர்ந்து இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற  உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் அல்லது மனித உரிமை மீறல்களை ஆராய்வதை வீச்செல்லையாக ஆணைக்குழு கொண்டிருக்கும் ” என்று சட்டமூலத்தின் 12 வது பிரிவு கூறுகிறது.

உண்மையிலேயே, கறுப்பு ஜூலை உண்மையைத் தேடும் உத்தியோகபூர்வ செயன்முறையில் இருந்து விலக்கி வைக்கப்படக்கூடாது. நீதி மற்றும் சமத்துவமான குடியுரிமையின் அடிப்படையிலான நாடொன்றை இளைய தலைமுறையினர் பொறுப்பேற்க வேண்டுமாக இருந்தால், கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதையும் ஏன் நடந்தது என்பதையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இலங்கை கடந்த காலத்தை வெற்றிகொண்டு சகல சமூகங்களையும் அரவணைக்கின்ற ஐக்கியப்பட்ட ஒரு நாடாக வரவேண்டுமாக இருந்தால், அது கடந்த காலத்தை ஆராய்வதை விடவும் கூடுதலான காரியங்களையும் செய்தாக வேண்டும். மோதலுக்கும் பாகுபாட்டுக்கும் அடிப்படையாக இருக்கும் காரணிகளுக்கு தீர்வுகாணக்கூடிய அரசியல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது நல்லிணக்கத்துக்கு அவசியமாகிறது. இனம், மதம், சாதி மற்றும் வர்க்கம் எல்லாவற்றுக்கும் அப்பால் சகல சமூகங்களையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சிமுறைமை ஒன்றை கட்டியெழுப்புவதிலேயே அயைதியான எதிர்காலம் தங்கியிருக்கிறது.

கடந்த பத்து மாதங்களாக  முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  புதிய அரசாங்கம் வீணான பொதுச் செலவினங்களைக் குறைத்திருப்பதுடன் அரசியல் தலைவர்களின் சிறப்புரிமைப் பகடுகளையும் கட்டுப்படுத்தியிருக்கிறது. அரச நிறுவனங்கள் பூராவும் செலவினங்களை கடுமையாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. ஊழலைச் சகித்துக்கொண்ட அரசியல் கலாசாரம் மாறிவருகின்றது. நாம் முன்னென்றுமே கண்டிராத வகையில் முனானாள் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக வழக்குத் தொடுநர்களாலும் நீதிமன்றங்களினாலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால், முறைமை மாற்றத்தை கொண்டுவருவதாக வாக்குறுதியளித்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம் அது விடயத்தில் முக்கியமாக நிறைவேற்ற வேண்டிய ஒரு பணியை இன்னமும் செய்யவில்லை.  தேசிய தீர்மானங்களை மேற்கொள்வதில் பல்லின, பல மத பங்கேற்புக்கு வகைசெய்யக்கூடிய அதிகாரப்பரவலாக்கமே அதுவாகும். சுதந்திரத்துக்கு முன்னரான  காலப்பகுதியில் இருந்தே பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில்  அத்தகைய பங்கேற்புக்கான கோரிக்கை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடம் இருந்து வந்தது.

பெரும்பான்மைச் சமூகத்துக்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் இடையில் ஒப்புரவான முறையில் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு தவறியதே மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கும் கறுப்பு ஜூலை போன்ற பாரிய வன்குறைகளுக்கும் வழிவகுத்த இனமுரண்நிலையின் மூலக்காரணியாகும். தமிழ் அரசியல் தலைவர்களின் சமாதான முறையிலான முயற்சிகள் அலட்சியம் செய்யப்பட்டதன் விளைவே விடுதலை புலிகளினதும்  பரந்தளவில் தமிழ்த் தீவிரவாத இயக்கத்தினதும்  ஆயுதப் போராட்டமாகும். அந்த போராட்டத்தின் இலக்கு பெரும்பான்மைச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்தியமயப்பட்ட அரச கட்டமைப்பு சிறுபான்மைச் சமூகங்கள் மீது செலுத்தும் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவே இருந்தது.

மாகாண சபைகள்

சமூகங்களுக்கு இடையில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவையை நிறைவேற்றுவதற்காகவே 1987 ஆம் ஆண்டில் மாகாணசபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. அரசாங்கத்தின் இரண்டாவது அடுக்கு இயங்காமல் இருக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும். மாகாணங்கள் நடைமுறையில்  ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நிருவாகத்தின் கீழ் இருந்து வருகின்றன.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் மாகாணசபை தேர்தல்கள் இவ்வருட இறுதிக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமானால், இந்த தேர்தல்கை தடுக்கின்ற முட்டுக்கட்டைகளை அகற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைகளில் பங்கேற்கக்கூடியதாக இன,மத சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு  அதிகாரமளிக்க வேணடியது அவசியமானதாகும்.

மாகாணசபை முறை என்பது பன்முகப்படுத்தப்பட்ட நிருவாகத்தைப் பற்றியது மாத்திரமல்ல. அது தீர்மானங்களை மேற்கொள்வதற்கான மெய்யான  அதிகாரம் மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் இருக்கக்கூடியதாக அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட்ட ஆட்சிமுறை பற்றியதாகும். அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்கள் மட்டுமீறிய முறையில் மத்திய மயப்படுத்தப்பட்டிருப்பது ஆழமான ஏற்றத் தாழ்வுகளையும் நீடித்த சமத்துவமின்மையையும் தோற்றுவித்திருக்கிறது. அதன் விளைவாக, பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதாக  சிறுபான்மைச் சமூகங்கள் ஏற்பட்ட உணர்வே உள்நாட்டுப் போரை மூளவைத்தது.

ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கும்போது பன்முகப்படுத்தப்பட்ட ஆட்சிமுறையின் ஊடாக அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது பல்கலாசார சமூகங்களில் வழக்கமான அல்லது பொதுவான நடைமுறையாக இருக்கிறது. பெரிய பரப்பளவையும் பெருவாரியான இனங்களையும் கொண்ட இந்தியாவும் மிகவும் சிறிய பரப்பளவை கொண்டதாக இருக்கின்ற சுவிட்சர்லாந்தும் பல்வகைமையை ஙையாளுவதையும் உள்ளூர் சுயாட்சியை உறுதிசெய்வதிலும் பயனுறுதியுடைய முறையில் செயற்படுகின்ற சமஷ்டி அல்லது அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்பட் கட்டமைப்புக்களை கொண்டிருக்கின்றன

இலங்கையில் சுதந்திரத்துக்கு பினானரான மத்தியமய ஆட்சிமுறை அரசியல் பிரதிநிதித்துவத்திலும் பொருளாதார அபிவிருத்தியிலும் நிலையான ஏற்றத்தாழ்வை தோற்றுவித்திருக்கிறது. தலைநகர் என்ற வகையில் கொழும்பு துரிதமாக அபிவிருத்தி அடைந்திருக்கின்ற அதேவேளை, பல மாகாணங்கள் பொருளாதார ரீதியில் ஒரங்கட்டப்பட்டவையாகவும் அரசியல் ரீதியில் தேசிய கொள்கை வகுக்கும் செயன்முறைகளில்  தொடர்பற்றவையாகவும் இருக்கின்றன. மத்தியமய தீர்மானங்கள்  குறிப்பாக, விவசாயம், கல்வி, மற்றும் பொது உட்கட்டமைப்பு துறைகளில் உள்ளூர் யதார்த்தங்களை பெரும்பாலும் பிரதிபலிக்கத் தவறிவிட்டன.

மாகாணசபை முறையை மீண்டும் செயற்படவைத்து அதற்கு நிதி மற்றும் நிருவாக சுயாட்சியை வழங்கினால் மக்களை ஆட்சிமுறைக்கு நெருக்கமாக கொண்டு வரமுடியும். இலங்கை அதன் குடிமக்களிடம் இருந்து முறைமை மாற்றத்துக்கான கோரிக்கையையும் அரசியல் வாழ்வில் பயனுறுதியுடைய முறையில் பங்கேற்புக்கான கோரிக்கையை சிறுபான்மைச் சமூகங்களிடம் இருந்தும் தொடர்ச்சியாக எதிர்நோக்கும் நிலையில், பன்முகப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை இன்று மிகவும் அவசியமாகிறது. கறுப்பு ஜூலை போன்ற துன்பியல் நிகழ்வுகளில் முடிவடைந்த இனத்துவ துருவமயமாதல் மற்றும் பிரிவினைவாதத்துக்கு எதிரான மிகவும் பயனுறுதியுடைய பாதுகாப்பாக இது அமையும்.

Leave A Comment