இலங்கைஇந்தியஜனாதிபதிகளிடையேமுக்கியசந்திப்பு
இலங்கையின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நெருங்கிய மற்றும் நம்பகமான பங்காளி என்ற வகையில் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய ஜனாதிபதி திரொளபதி முர்மு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் உறுதியளித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு டெல்லி சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்திருந்தார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் ராஷ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராப்போசன உபசாரத்திலும் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போதே இந்திய ஜனாதிபதி இவ்வாறு உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில், நெருங்கிய மற்றும் நம்பகமான பங்காளி என்ற வகையில், இலங்கையின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை இந்த சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ‘இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் ராஷ்டிரபதி பவனில் ஆக்கபூர்வமான சந்திப்பு நடைபெற்றது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினோம். அன்பான விருந்தோம்பல் மற்றும் இரவு விருந்துக்கு நன்றி.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

