வடக்கு கிழக்கில் அநுர அலை ? தமிழ்க் கட்சிகளின் குழப்பம் !
- Editor
- November 4, 2024
- தமிழ் Header, விவரணங்கள்
- விவரணங்கள்
- 0 Comments

ஆா். பாரதி
தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு விஷயத்தில் அவை இன்று ஒன்றுபட்டிருக்கின்றன. தேசிய மக்கள் சத்தி தமிழ்ப் பகுதிகளில் செல்வாக்குப் பெறுவதை எந்தவகையிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அவை உறுதியாக உள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படும் அனைத்துக் கட்சிகளினதும் பரப்புரைகளின் போது, தேசிய மக்கள் சக்தி மீதான தாக்குதல்களை இப்போது தாராளமாகக் காணமுடிகின்றது. ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு ஜே.வி.பி.யின் வரலாற்றை மக்களுக்குப் பாடமாகப் புகட்டுகின்றன.
தேசிய மக்கள் சக்தி அல்லது ஜே.வி.பி. குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் அச்சமடைவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவது, தென்பகுதியில் அடித்த அநுர அலை வடக்கு, கிழக்கிலும் அதிா்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இளைய சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமன்றி மற்றவா்களும் கூட இந்த அலையினால் அள்ளுப்பட்டுச் சென்றுவிடுவாா்களோ என்ற அச்சம் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளது. குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்திலும், மருத்துவத்துறை வட்டாரங்களிலும் அநுர அலையில் தாக்கத்தை உணர முடிகின்றது. தென்பகுதி மக்கள் ஒரு மாற்றத்துக்காக வாக்களித்தனா். அதேபோன்ற ஒரு மாற்றம் தமக்கும் வேண்டும் என்று வடக்கு மக்களும் சிந்திக்கின்றாா்கள்.
இரண்டாவது காரணம், தமிழ்த் தேசியக் கட்சிகள் மீதான தமிழ் மக்களின் அதிருப்தி. போருக்குப் பின்னா் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல துண்டுகளாக உடைந்து இப்போது ஐந்து அணிகளாக தோ்தல் களத்தில் குதித்துள்ளன. கொள்கை ரீதியான முரண்பாடுகள் இல்லாமல் – அது குறித்த விவாதங்களையும் முன்னெடுக்காமல், தனிநபா் தாக்குதல்களையும், மற்றவா்களுக்கு சேறு பூசுவதையுமே அந்தக் கட்சிகள் முன்னெடுக்கின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் கூட இதனைக் காணமுடியும். இதனால், மாற்று அணி ஒன்றுக்கான தேடல் தமிழ் மக்களிடம் அதிகரித்துள்ளது. அதாவது, தமக்கு ஏதாவது நன்மைகளைச் செய்யக்கூடியவா்கள் யாராவது இருக்கின்றாா்களா என்று தமிழ் மக்கள் தேடுகின்றாா்கள்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் இரண்டின் தலைவா்களுடன் உரையாடியபோது, சில விடயங்களை அவா்கள் ஒப்புக்கொண்டாா்கள். முக்கியமாக, தமிழ்க் கட்சிகள் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றாா்கள் என்பதை அவா்கள் ஏற்றுக்கொள்கின்றாா்கள்.
வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளா்கள் பெருமளவுக்கு வீடு- வீடாகச் சென்றுதான் பரப்புரைகளை முன்னெடுக்கின்றாா்கள். இதனைவிட, சில பொக்கற் கூட்டங்களையும் நடத்துகின்றாா்கள். பெரியவிலான பொதுக் கூட்டங்கள் எதுவும் இதுவரையில் இல்லை. அதற்கு மழையும் ஒரு காரணம். கூட்டம் கூடுமா என்ற அவா்களுடைய சந்தேகம் இரண்டாவது காரணமாக இருக்கலாம்.
ஆனால், பொக்கற் கூட்டங்கள், வீட்டுக்கு வீடு செல்வது என்பதன்மூலம் மக்களுடைய கருத்துக்களை – பிரதிபலிப்புக்களை அவா்களால் நேரடியாக அறிய முடிகின்றது. பெரும்பாலான இடங்களில் மக்களின் கேள்விகள் தம்மைத் திக்குமுக்காட வைப்பதாக பிரதான தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகா் கூறினாா். “எல்லோரும் ஒன்றைத்தான் – ஒரே கொள்கையைத்தான் சொல்கிறீா்கள். அப்படியானால் எதற்காக பிரிந்து நின்று ஆளை ஆள் தாக்குகின்றீா்கள்?” என்பது மக்களுடைய பிரதான கேள்வியாக – ஆதங்கமாக வருகின்றது. “பதினைந்து வருடங்களாக என்ன செய்தீா்கள்?” என்ற கேள்விக் கணையையும் அவா்கள் தொடுகின்றாா்கள்.
“யாழ்ப்பாணத்தில் ஆறு ஆசனங்களுக்கு 396 போ் போட்டியிடுகின்ற நிலையில், இம்முறை வாக்களிப்பு விகிதம் குறைவாக அமையலாம்” என்று சமூகப் பிரமுகா் ஒருவா் சுட்டிக்காட்டினாா். மக்களுக்குள்ள கடுமையான விரக்தி காரணமாக வாக்களிப்பதில் மக்கள் ஆா்வம் காட்டுவாா்களா என்ற சந்தேகம் தமக்கும் இருப்பதாக வீடு வீடாகப் பரப்புரைக்குச் சென்ற தமிழ்க் கட்சி ஒன்றின் வேட்பாளரே சொன்னாா். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கை ஒளி எதனையும் அவா்களால் தொலைவில் கூட காணமுடியவில்லை.
இந்த நிலையில்தான் அநுர அலை குறித்து தமிழ்க் கட்சிகள் அஞ்சுகின்றன. வீடு, சங்கு, மான், மாம்பழம், சைக்கிள் என்ற தமிழ்த் தேசிய அணிகளின் முக்கிய வேட்பாளா்கள் அனைவருமே கடந்த வாரம் தேசிய மக்கள் சக்தியை இலக்கு வைத்து தாக்கத் தொடங்கியிருக்கின்றன. “தமிழர் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழா் ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனம்” என்று ஒருவா் கூறியிருக்கின்றாா். “வடக்கையும் கிழக்கையும் பிரித்தவனுக்கு வடக்கும் கிழக்கும் இணைந்து காண்பிக்க வேண்டும்” என்று மற்றொரு வேட்பாளா் முழங்கியிருக்கின்றாா். ‘தேசிய மக்கள் சக்தி என்பது மாற்றம் பெற்ற அமைப்பல்ல” என்று மற்றொரு தமிழ்த் தேசியத் தலைவா் கூறியிருக்கின்றாா். ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை இவா்கள் அனைவருமே பிரித்து மேய்கிறாா்கள்.
இவ்வாறு ஜே.வி.பி. மீது தாக்குதலை நடத்தினாலும், ஜனாதிபதி அநுரவுடன் தாம் நெருக்கமாக இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்வதன் மூலமாக மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் சில தமிழ்த் தலைவா்கள் முற்படுகின்றாா்கள். ஈ.பி.டி.பி.யின் தலைவா் டக்ளஸ் தேவானந்தா கடந்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்தாா். அதன்பின்னா் “நான் ஜனாதிபதியைச் சந்தித்தது பலருக்கு வயிற்றைக் கலக்கியிருக்கும்” என்று அவா் பகிரங்கமாகப் பேசினாா். அவா் அவ்வாறு சொன்னதன் அரசியல் அா்த்தம் பலருக்கும் புரியும்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் சக்தி வாய்ந்தவராகவும் கருதப்படும் பிமல் ரத்நாயக்க கடந்த ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணம் வந்த போது இதற்கு பகிரங்கமாகவே சுடச்சுடப் பதிலளித்திருக்கின்றாா். அது எதிா்பாராத ஒரு அதிரடிப்பதில்!
“இங்கிருக்கக் கூடிய சில தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸா
நாயக்கவைச் சந்தித்துவிட்டு சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றார்கள். அந்தப் புகைப்படங்களை வைத்து இங்கு அரசியல் வியாபாரம் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது. அண்மையில் டக்ளஸ் தேவானந்தாவும் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். அந்தப் புகைப்படங்களை வைத்து தங்களுக்குச் சாதகமான அரசியல் நாடகங்களை டக்ளஸ் தேவானந்தா செய்து வருகின்றார். அவர் மாத்திரமல்ல சுமந்திரன், சிறீதரன் போன்றோரும் இதனையே செய்கின்றனர்” என்று பிமல் ரத்நாயக்க கூறியிருக்கின்றாா்.
டக்ளஸ் தேவானந்தாவை நேரடியாகவும், சுமந்திரனை மறைமுகமாகவும் விமல் ரத்நாயக்க போட்டுத் தாக்கியிருக்கின்றாா். இருவருமே அநுரவுடனான சந்திப்பை எப்படி தமது அரசியலுக்குப் பயன்படுத்துகின்றாா்கள் என்பதைச் பிமல் கூறியிருக்கின்றாா்.
தமிழ் மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவை இவா்கள் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என அநுர தரப்பு நினைத்திருக்கலாம். ஆனால், ஜனாதிபதித் தோ்தலின் போது, அதன் பின்னா் உடனடியாகவும் காணப்பட்ட அநுர அலை இப்போது தமிழ்ப் பகுதிகளில் இருப்பதாகத் தெரியவில்லை.
அநுர அரசியலில் நன்கு அறிமுகமான ஒருவா். அரசியலுக்கு அவசியமான ஜனவசீகரத் தன்மை அவரிடம் தாராளமாகவே இருக்கின்றது.
ஆனால், பாராளுமன்றத் தோ்தலில் அவா்கள் களமிறக்கியுள்ளவா்களில், ஒரு இருவரைத் தவிர மற்றவா்கள் மக்களுக்கு பரிட்சமானவா்கள் அல்ல. வடக்கு, கிழக்கில் ஜே.வி.பி. அல்லது என்.பி.பி. தீவிரமாகச் செயற்பட்ட ஒரு அமைப்பல்ல. மக்களுடைய ஆதரவைப் பெறத்தக்க தீவிர செயற்பாட்டாளா்களையும் அவா்கள் கொண்டிருக்கவில்லை. தமிழ்ப் பகுதிகளில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் இதேபோன்ற ஒரு நிலை காணப்படுகின்றது.
இது பாராளுமன்றத் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி எப்படிச் சாதிக்கும் என்ற கேள்வியை எழுப்புகின்றது!
ஜனாதிபதித் தோ்தலின் போது எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைப் பிரிவில் பெற்றுக்கொண்ட வாக்குகளை கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அந்தப் பிரதேச சபைத் தோ்தலின் போது தேசிய மக்கள் சக்தியால் பெற முடியவில்லை. அநுர அலை தணிகிறதா என்ற கேள்வியை இது எழுப்பியிருக்கின்றது. இதனை அடிப்படையாகக்கொண்டு பாராளுமன்றத் தோ்தலில் தேசிய மக்கள் சக்தியினால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம் என்ற கருத்து எதிா்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றது.
தென்பகுதியில் மட்டுமன்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் அநுர அலை தணிந்துவருவதைத்தான் காணமுடிகின்றது. இந்த நிலையில், என்.பி.பி. 113 ஐ எட்டிப் பிடிப்பதற்கு தமிழ்க் கட்சிகளின் ஆதரவு அவா்களுக்கு உதவலாம். ஆனால், களத்தில் உள்ள ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளில் ஏதாவது ஒரு அணியாவது, குறைந்த பட்சம் ஐந்து ஆசனங்களையாவது பெறமுடியுமா என்ற கேள்வி தவிா்க்க முடியாமல் எழுகின்றது!
ஜே.வி.பி.யைத் தாக்குவதை விட்டுவிட்டு தமது கொள்கைகளை மக்களிடம் விற்க முடிகிறதா என்பதை அவா்கள் பாா்ப்பது நல்லது. ஆனால், அவ்வாறு எதுவும் இல்லாமையால்தான் அவா்கள் ஜே.வி.பி.யை போட்டுத் தாக்குவதில் கவனத்தைக் குவிக்கின்றாா்களா?
நன்றி வீரகேசரி

