ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து சந்தோஷ் ஜா கரிசனை
இலங்கைத் தமிழரசு;ககட்சிக்கும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கரிசனை வெளியிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று14-11-2025 அன்று கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இதில் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் பிரிவின் முதன்நிலை செயலாளர் டொக்டர் ராம்பாபு செல்லப்பாவும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த இளம் அரசியல் தலைவர்களின் யாழ்.விஜயம் சம்பந்தமாக இந்திய உயர்ஸ்தானிகர் முதலில் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
அச்சமயத்தில், சுமந்திரன், குறித்த இளைய அரசியல் தலைவர்கள் வடக்கின் அபிவிருத்தியில் அவர்கள் அதிகமான ஈடுபாட்டை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டதோடு விசேடமாக காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமானநிலைய விஸ்தரிப்பு மற்றும் கலைகலாசார விடயங்களில் அவர்கள் வெளிப்படுத்திய சாதகமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதனையடுத்து மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நேர ஒதுக்கீட்டைக் கேட்டுள்ள நிலையில் அதற்கு ஜனாதிபதி சாதகமான பதில் கிடைத்துள்ளமையை உயர்ஸ்தானிகரிடத்தில் சுமந்திரன் தெரிவித்தார்.
அச்சமயத்தில், குறித்த சந்திப்பு தொடர்பில் உயர்ஸ்தானிகர் தனது கரிசனையை வெளிப்படுத்தியதோடு, பேச்சுவர்த்தைகள் ஆரம்பிப்பதன் ஊடாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

