அமெரிக்கத்தீர்வைவிதிப்பினால்வெளிநாட்டுத்துறைபாதிக்கப்படலாம்; மத்தியவங்கி
- Editor
- April 9, 2025
- பொருளாதாரம்
- பொருளாதாரம்
- 0 Comments
மாற்றமடைந்துவரும் பூகோள அரசியல் நிலைவரங்கள், குறிப்பாக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டிருக்கும் தீர்வை விதிப்பு மற்றும் அதன் தாக்கங்கள் வெளிநாட்டுத்துறையிலும், பொருளாதார நிலைவரத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். எனவே அதற்கு ஏற்றவாறான பொருத்தமான கொள்கைகளை வகுப்பதுடன், வெளிநாட்டுக்கையிருப்பு மற்றும் வரிவருமானம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச்சட்டத்தின் 80 ஆம் பிரிவின்கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை நேற்று திங்கட்கிழமை (7) இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. அம்மீளாய்வு அறிக்கையில் கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
நாட்டின் பொருளாதாரம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அதிலிருந்து கடந்த ஆண்டு படிப்படியாக உறுதியுடன் மீட்சியடைந்தது. அம்மீட்சியை நோக்கிய பாதை கடினமானதாக இருந்தபோதிலும், படுகடன் நெருக்கடியிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் மீட்சி துரிதமானதாகவிருந்தது. அதேவேளை நெருக்கடியை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புக்கள் தற்போது சாதகமான பெறுபேறுகளைக் காண்பிக்கத் தொடங்கியுள்ளன. அத்தோடு வெகுவிரைவில் நிறைவடையும் நிலையிலுள்ள வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையிலிருந்து நாடு மீட்சியடைந்தமை என்பன முதலீட்டாளர்களினதும், ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினரும் நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளன.
அடுத்ததாக பொருளாதார வளர்ச்சியினைப் பொறுத்தமட்டில், 2024 இல் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் சிறப்பான செயலாற்றம் பதிவானது. பணவீக்கம் படிப்படியாகக் குறைவடைந்து, 2024 செப்டெம்பர் மாதம் முதல் பணச்சுருக்கநிலை பதிவானது. தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கையானது உள்நாட்டு பொருளாதாரத்தின் துரித மீட்சிக்குப் பங்களிப்புச்செய்ததுடன், அதனூடாக கொவிட் – 19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்த உற்பத்தி மீண்டும் உயர்வடைந்தது. இக்காலப்பகுதியில் வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி குறிப்பிடத்தக்களவால் உயர்வடைந்ததுடன், வெளிநாட்டுக்கையிருப்பு மிகையொன்று பதிவானது.
அதேபோன்று மத்திய வங்கியின் கொள்கைகளின் ஊடாக உள்நாட்டு விலை உறுதிப்பாட்டையும், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. மத்திய வங்கியுடனான கலந்தாலோசனைக்கு அமைய இறக்குமதிகள் மற்றும் மூலதனப்பாய்ச்சல்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அரசாங்கத்தினால் படிப்படியாக நீக்கப்பட்டன. பொருளாதார மீட்சிக்கு சமாந்தரமாக கடன் மீள்செலுத்துகை ஆற்றலைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு அவசியமான வரிவருமானத்திரட்டலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களின் ஊடாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
இருப்பினும் மாற்றமடைந்துவரும் பூகோள அரசியல் நிலைவரங்கள், குறிப்பாக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டிருக்கும் தீர்வை விதிப்பு மற்றும் அதன் தாக்கங்கள் வெளிநாட்டுத்துறையிலும், பொருளாதார நிலைவரத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். எனவே அதற்கு ஏற்றவாறான பொருத்தமான கொள்கைகளை வகுப்பதுடன், வெளிநாட்டுக்கையிருப்பு மற்றும் வரிவருமானம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது கட்டாயமாகும் என அம்மீளாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

