அம்பாறை மாவட்டம் பிறந்த கதை
- Editor
- December 31, 2024
- விவரணங்கள்
- விவரணங்கள்
- 0 Comments

சி. அ. யோதிலிங்கம்
சோல்பரி யாப்பின் கீழான முதலாவது தேர்தல் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர்; 20ஆம் திகதி வரை நீடித்தது. செப்டெம்பர் 22ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தன.
ஐக்கியதேசியக்கட்சி – 42 ஆசனங்கள், லங்காசமசமாயக்ட்சி – 10 ஆசனங்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி – 7 ஆசனங்கள், இலங்கை – இந்தியகாங்கிரஸ் – 06 ஆசனங்கள் போல்சேவிக் லெனிலிசக்கட்சி – 5 ஆசனங்கள் இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி – 3 ஆசனங்கள் இலங்கை தொழிற்கட்சி -1 ஆசனம், சுயேட்சைகள் 21 ஆசனங்கள் என்ற வகையில் கட்சிகளும் சுயேட்சைகளும் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டன. இன அடிப்படையில் சிங்களவர் – 68 இலங்கைத்தமிழர் – 13 மலையகத் தமிழர் -7 முஸ்லீம்கள் – 6 பறங்கியர் – 1 என்ற வகையில் ஆசனங்கள் கிடைத்தன.
1947 செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ஜீ.ஜீ.பொன்னம்பலம் குடியேற்ற நாட்டு மந்திரிக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். அத்தந்தியின் வாசகம் பின்வருமாறு அமைந்திருந்தது.’நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சியின் தமிழ் வேட்பாளர்களில் ஒருவராவது தெரிவு செய்யப்படாதிருததும் 1945ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையை (மந்திரி சபை அறிக்கை) ஆதரித்த பழைய அரசாங்க சபை தமிழ் அங்கத்தவர்களுள் ஒருவர் தவிர ஏனையோர் தோற்கடிக்கப்பட்டதிலிருந்தும் இலங்கை தமிழ் மக்கள் சோல்பரி அரசியல் திட்டத்தை நிராகரித்து விட்டார்கள் என்பது தெளிவு.

இலங்கையிலுள்ள சமூகங்கள் எல்லவற்றிற்கும் சம உரிமை அளிக்கும் சுதந்திர அரசியல் திட்டமொன்றை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கோருகின்றது. இலங்கை மக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் திட்டத்தை வகுப்பதற்கு அரசியல் நிர்ணயசபை ஒன்று வேண்டும். இப்போழுது இருப்பதைப் போன்ற சட்டசபை , மந்திரி சபையுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தகுந்த மாற்று முறை இல்லாதபடியால் நாங்கள் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கோருகின்றோம்.’
ஜீ.ஜீ.பொன்னம்பலம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் டி.எஸ்.சேனநாயக்கா மாற்று வியூகங்களை வகுத்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களை மந்திரிகளாக்கி தமிழர்கள் தன்னோடு நிற்கின்றார்கள் என்பதை காட்டுவதே அந்த வியூகம் இதன்படி வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சி.சுந்தரலிங்கம் வர்த்தக அமைச்சராகவும் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிற்றம்பலம் தபால் தந்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
டி.எஸ்.சேனநாயக்காவின் இந்த வியூகத்தினால் சுதந்திரத்தின் போதும் வலுவான எதிர்ப்பு அலையைக் காட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினால் முடியவில்லை இத்தனைக்கும் சிற்றம்பலம் தமிழ் காங்கிரசின் ஆதரவுடனேயே மன்னாரில் வெற்றி பெற்றார். சிற்றம்பலமும், சுந்தரலிங்கமும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். சுந்தரலிங்கத்தின் பூர்வீகம் உரும்பிராய் ஆகும்.
1947ஆம் ஆண்டு செம்டெம்பர் 23ஆம் திகதி மகாதேசாதிபதியாக இருந்த சேர் ஹென்றிமொன்க்மேசன் மூர்-டி.எஸ்.சேனநாயக்காவை மந்திரி சபையை அமைக்கும்படி வேண்டினார். செம்டெம்பர் 24ஆம் திகதி டி.எஸ்.சேனநாயக்கா கண்டி தலதாமாளிகைக்கு சென்று வழிபட்ட பின் மந்திரி சபை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அங்கிருந்தே நாட்டு மக்களுக்கு சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் உரையாற்றினார். அவரது உரை தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மந்திரி சபை அமைக்கும் விடயத்தில் பொன்னம்பலத்திற்கு பக்க பலமாக இருந்தவர் சேர் ஒலிவர் குணத்திலக. அவர் தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்தவரை சற்று தாராளமாக நடப்பதாக காட்டிக் கொள்ளும்படி டி.எஸ்.சேனநாயக்காவை வேண்டிக் கொண்டார்.
சி.சுந்தரலிங்கத்தையும், சி.சிற்றம்பலத்தையும் மந்திரி சபையில் சேர்ப்பதற்கு முன்னர் தந்தை செல்வாவிற்கே வலை வீசப்பட்டது. சோல்பரி அரசியல் திட்டத்தை எதிர்த்த பிரதிநிதியே யாப்பை அமுல்படுத்த உதவுகின்றார் என்பதைக் காட்டுவதற்காகவும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை பலவீனப்படுத்துவதற்காகவுமே இந்த வலை வீசப்பட்டது.
டி.எஸ்.சேனநாயக்கவின் நெருங்கிய நண்பரான டி.ஏ.பி.விNஐரத்ன மூலம் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. டி.ஏ.பி.விNஐரத்ன இது தொடர்பாக தந்தை செல்வாவுக்கு கடிதம் அனுப்பி மந்திரி சபையில் சேருமாறு வேண்டினார். தந்தை செல்வா அந்த வலையில் விழவி;ல்லை. உடனடியாகவே அதனை நிராகரித்தார். இவர் நிராகரிக்கும் முடிவை எடுப்பதற்கு கு.வன்னியசிங்கமும், டாக்டர் ஈ.எம்.வி.விநாகநாதனும் பக்க பலமாக நின்றனர். தந்தை செல்வாவின் நிராகரிப்புக்கு பின்னரே சிற்றம்பலமும் சுந்தரலிங்கமும் மந்திரி சபையில் சேர்க்கப்படனர்.
டி.எஸ். சேனநாயக்கவின் மந்திரி சபை பின்வருமாறு அமைந்திருந்தது.
1.டி.எஸ். சேனநாயக்கா – பிரதமர் , பாதுகாப்பு, வெளிநாட்டு விவகார அமைச்சர்
2. எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க – சுகாதார அமைச்சர்
3. சேர் ஜோன்.கொத்தலாவல – போக்குவரத்து அமைச்சர்
4. சேர் ஒலிவர் குணத்திலக – வெளிநாட்டு, கிராம அபிவிருத்தி அமைச்சர்
5. ஜி.ஆர். ஜெயவர்த்தன – நிதி அமைச்சர்
6. ஜோர்ஜ்.ஈ.டி.சில்வா – கைத்தொழில், மீன்பிடி அமைச்சர்.
7. சி.சுந்தரலிங்கம் – வர்த்தக அமைச்சர்
8. டி.பி.ஜயா –தொழில், சமூக சேவை அமைச்சர்
9. ஏ.ஈ.நுகவல – கல்வி அமைச்சர்
10. ஏ.ரத்நாயக்க – உணவு , கூட்டுறவு அமைச்சர்
11. டட்லி சேனநாயக்க – விவசாய அமைச்சர்
12. சி.சிற்றம்பலம் – தபால்தந்தி அமைச்சர்
13. ஆர்.எஸ்.எஸ்.குணவர்த்தன – இலாக இல்லாத அமைச்சர்
மலையக மக்களிலிருந்து 7பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட போதும் எவரும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை.
டி.எஸ். சேனநாயக்கா ஒரு பக்கத்தில் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கிய போது ஜீ.ஜீ.பொன்னம்பலமும் இடது சாரிக்கட்சிகளும் இன்னோர் பக்கத்தில் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான கூட்டம் எச்.சிறீநிசங்கா என்ற பிரபல சட்டத்தரணியின் ஜமுனா வீட்டில் இடம்பெற்றது. ‘இது ஜமுனா மாநாடு’ என அழைக்கப்பட்டது. லங்கா சமசமாஜக்கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, போல் சேவிக்லெனினிசக்கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை – இந்தியர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு சில சுயேட்சை உறுப்பினர்களும் இதில் பங்குபற்றினர்.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மகாதேசாதிபதியின் சிம்மாசன பிரசங்கத்தை தோற்கடித்து மாற்று அரசாங்கம் ஒன்றை அமைப்பதே இக்கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. இந்த மாற்று அரசாங்கத்தை பொதுக் கொள்கைக்திட்டத்தின் கீழ் அமைக்க வேண்டும் என லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவர் டாக்டர் எம்.எம்.பெரேரா குறிப்பிட்டார்.
அதில் உடன்பாடு காணப்பட்டது. தொடர்ந்து பொது வேலைத்திட்டத்தை உருவாக்குவதில் தான் முரண்பாடு ஏற்பட்டது. சுயேட்சைகளின் ஒத்துழைப்பும் பெரியதாக இருக்கவில்லை. இறுதியில் ஜமுனா பேசு;சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. ஜமுனா மாநாடு வெற்றி பெற்றிருந்தால் இலங்கையின் வரலாறே வேறு விதமாக அமைந்திருக்கும் என்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநாட்டில் கலந்து கொண்ட பீற்றர் கெனமன் பின்னர் ஒரு தடவை தனது கட்டுரையில் எழுதியிருந்தார்.
சோல்பரி யாப்பை பொறுத்த வரை ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில் சுதந்திரத்தின் போது ஜீ.ஜீ.பொன்னம்பலம் எதிர்ப்பை காட்ட முற்பட்டார். தமிழர்கள் மந்திரி சபையில் சேர்க்கப்பட்டதால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.
பாராளுமன்றத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்தமையும் மந்திரி சபையில் சிறுபான்மையோர் சேர்க்கப்பட்டமையும், சோல்பரி யாப்பின் காணப்பட்ட சிறுபான்மையோர் காப்பீடுகளும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு திருப்தி கரமாக இருந்தன இந்த திருப்தியின் அடிப்படையிலேயே 1948 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ம் திகதி சுதந்திரம் வழங்கப்பட்டது. சுதந்திரம் பிறந்த கதை இது தான்.
சுதந்திரமும் ஆட்சி அதிகாரமும் கிடைத்த பின் டி.எஸ்.சேனநாயக்கா அரசாங்கம் தனது கோர முகத்தைக் காட்ட முற்பட்டது. அது ஒரே நேரத்தில் இரண்டு செயல்திட்டங்களை முன்னெடுத்தது. ஒரு பக்கத்தில் அரச அதிகார கட்டமைப்பை சிங்கள மயமாக்க முற்பட்டது. மறு பக்கத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிக்க முற்பட்டது தேசிய இன அழிப்பு என்பது ஒரே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் மலையக மக்களுக்கு எதிராகவும் ஏவி விடப்பட்டது.
தமிழ் மக்களுக்கு எதிராக குடியேற்றங்களும் , மலையக மக்களுக்கு எதிராக பிரஜாவுரிமைச்சட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. குடியேற்றங்களுக்கு தேர்தெடுக்கப்பட்ட மாகாணம் கிழக்கு மாகாணம். இங்கு சிங்களவர் குடியேறும் வரை தமிழர்கள் தமது நிலம் பறிக்கப்படுகின்றது என்பதை உணரவில்லை. குடியேற்றத்திட்டத்தை உருவாக்குவதில் தமிழ் அதிகாரிகளின் பங்கும் பாரியதாக இருந்தது.
1948ஆம் ஆண்டு சுதந்திரத்தைத் தொடர்ந்து பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க தனது நிரந்தர செயலாளர் சேர் கந்தையா வைத்தியநாதன் நீர்ப்பாசன பணிப்பாளர் ரி.அழகரத்தினம், நில அளவைப்பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ்.புறோக்கியர் என்போரை ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். கிழக்கு மாகாணத்தின் தெற்குப்பகுதியில் உள்ள பட்டிப்பளை ஆற்றினை பாரிய நீர்ப்பாச திட்டமாக்க போவதாக அறிவித்தார். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி அழகரத்தினத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பட்டிப்பளை ஆறு பதுளை மாவட்டத்திலுள்ள மடுல்சீமாமலைத்தொடரில் ஊற்றெடுத்து 56 மைல்கள் பாய்ந்தோடி வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. இதன் கரையில் பிரதான தமிழ் கிராமமமான பட்டிப்பளை இருந்தது. சிறந்த விவசாய பூமி மன்னராட்சி காலத்திலிருந்தே சிறந்த விவசாய பிரதேசமாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இதனை வளர்க்கும் முகமாக இறக்காமம், கொண்ட வெட்டுவான் , அம்பாறை குளங்களை புனரமைத்து கொடுத்தனர்.
அழகரத்தினம் குழுவினர் சம்மாந்துறை சென்று அங்கிருந்து மாட்டு வண்டி மூலம் பட்டிப்பளை ஆற்றின் மேல்பகுதியில் உள்ள அம்பாறை இங்கினியாகலை ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பட்டிப்பளை ஆற்றை இங்கினியா கலையில் மறித்து நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கி நீர்ப்பாசன திட்டத்தை ஆரம்பிக்கலாம் என சிபார்சு செய்தனர்.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக எல்லோயா அபிவிருத்தி சட்டம் உருவாக்கப்பட்டது இதன் மூலம் பட்டிப்பளை ஆறு கல் ஓயாவாக மாற்றப்பட்டது. தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர் சூட்டும் முயற்சி இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டது. கல்லோயா அபிவிருத்தி வேலைகளை 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ம் திகதி இங்கினியாகலையில் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ஆரம்பித்து வைத்தார். பட்டிப்பளை ஆற்றை இங்கினியாகலையில் மறித்து அணை ஒன்றை கட்டி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது டி.எஸ்.சேனநாயக்க அதனை ஆரம்பித்து வைத்ததால் இதற்கு சேனநாயக்க சமுத்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
கல்லோயாத்திட்டம் 12;0000; ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு திட்டத்திலும் 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 ஏக்கர் வயல் நிலங்களும் 2 ஏக்கர் மேட்டுநிலங்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்;கும் குடியிருக்க வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது 40 குடியேற்ற கிராமங்களில் 34 கிராமங்கள் சிங்களவர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டன. 6 கிராமங்கள் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டன.
கல்லோயாத்திட்டத்தின் முதலாவது கட்டமாக 20000 சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 6 கிராமங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் குடியேற்றப்பட்டனர். 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம் பெற்ற கலவரத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கல்லோயாத்திட்டத்திலிருந்து விரட்டப்பட்டனர்.
மீண்டும் குடியேறிய மக்கள் 1958இவ் நடைபெற்ற கலவரத்தில் விரட்டப்பட்டனர். மீண்டும் திரும்பிய ஒரு சிலரும் 1990 இல் விரட்டப்பட்டனா.; இறுதியில் கல்லோயாத்திட்டம் தனித்து சிங்களவர்களுக்கான திட்டமாகவே மாறியது
தமிழ் மக்களுக்கும், முஸ்லீம்களுக்குமென ஒதுக்கப்பபட்ட 1200 ஏக்கர் நிலங்களும் சிங்களவர்களே பயிர்ச்செய்கையை மேற்கொள்கின்றனர். இதைவிட பொத்துவில் லகுகலவில் வாழ்ந்த 343 தமிழ் குடும்பஙகளும் சிங்கவர்களினால் விரட்டப்படனர். இவர்கள் காரைதீவு , விநாயகபுரம், ஆலயடி வேம்பு போன்ற இடங்களில் அதிகளவாக வாழ்கின்றனர்.
1959ஆம் ஆண்டு தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன் போது முதன் முதலாக சிங்கள மக்களுக்கென அம்பாறை தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இத் தொகுதியில் இருந்து முதன் முதலாக 1960ம் ஆண்டு சிங்களவர் ஒருவர் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்டார்.
1961இற்கு முன்னர் இப்பிரதேசம் மட்டக்களப்பு தெற்கு என்றே அழைக்கப்பட்டது 1961இல் அம்பாறை என்ற தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. குடியேற்றப்பிரதேசமான அம்பாறை இதன் தலைநகராக்கப்பட்டது. 1980 களில் இதன் பெயர் திகாமடுல்ல என மாற்றப்பட்டது. இதே காலப்பகுதியில் சிங்கள மக்களின் வீதாசாரத்தை மாவட்டத்தில் கூட்டுவதற்காக மொனறாகலை மாவட்டத்துடன் இணைத்திருந்து மகா ஓயா, பதியத்தலாவ பிரதேச செயலாளர் பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
அடுத்தவாரம் பிராஜவுரிமைச்சட்ட சட்ட உருவாக்கத்தின் போது நடந்தவை பற்றி பார்ப்போம். (தகவல் ஆதாரங்கள் ‘தந்தை செல்வா ரி.சபாரத்தினம், தமிழர் கட்சி வெள்ளிவிழா மலர்’

