முன்னணிமீன்பிடித்துறைமுகமாக இருந்தமயிலிட்டியின்நிலைஎன்ன?

“இலங்கை முழுவதற்கும் தேவையான கடல் உணவுப் பொருட்களில் பெரும்பகுதியை வழங்கக்கூடியதாக மயிலிட்டி போா்க் காலத்துக்கு முன்னர் இருந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து ஒன்றரை தசாப்தம் கடந்துள்ள நிலையிலும் அந்த நிலையை மீளக் கொண்டு வரமுடியவில்லை”

ஆா்.பாரதி

போர்க் காலத்தில் வட பகுதியில் அதிகளவில் நெருக்கடிகளை எதிர்கொண்ட துறை எது என்றால், அது மீன்பிடித் துறைதான். போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்திருக்கும் நிலையிலும், அதனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஆக்கபூா்வமான செயற்பாடுகள் எதுவும் இல்லை. அதிலும் குறிப்பாக, இலங்கையிலுள்ள மீன்பிடி துறைமுகங்களில் முதன்மையானதாக திகழ்ந்த மயிலிட்டி துறைமுகத்தின் இன்றைய நிலை பரிதாபமாக இருக்கின்றது. 

வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை பாா்வையிடுவதற்காக கடந்த வாரம் நேரில் சென்ற போது ஆச்சரியங்களே காத்திருந்தன. துறைமுகத்தின் பெரும்பாலான பகுதிகள் பயன்படுத்த முடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. அதனை அபிவிருத்தி செய்வதற்காக என்று ஆரம்பிக்கப்பட்ட பணி முற்றுப்பெறவில்லை. இவை அனைத்துக்கும் மேலாக, இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்த போது கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான இந்திய மீன்பிடிப் படகுகள் இந்தத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. 

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமூகப் பிரதிநிதிகள், கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள், நெக்டா, நாரா நிறுவனப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், யாழ். பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமரும் கலந்துகொண்டார்.

மயிலிட்டித் துறைமுகத்தின் தற்போதைய நிலை தெடா்பாகவும் இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. இங்கு 137 இந்தியப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் அந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்துவதில் உள்ள நெருக்கடி தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.  வளம் நிறைந்த இந்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவா்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டு, மீனவா்கள் இதனை தமது தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

வலிகாமம் வடக்கின் ஏனைய பகுதிகளைப் போலத்தான் மயிலிட்டி பகுதியும் பெருமளவுக்கு வெறிச்சோடிய நிலையில்தான் காணப்படுகின்றது. இதனை நேரில் சென்ற போது அவதானிக்க முடிந்தது. பலாலி விமான நிலையம், விமனப்படைத் தளம், காங்கேசன்துறை கடற்படை முகாம் என்பன ஆகியன இதனருகில் அமைந்துள்ளதால் இக்கிராமம் 1990 ஆம் ஆண்டு முதல் அதி உச்ச பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. அதனைவிட, கடல் வலையச் சட்டம் காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்வதும் தடுக்கப்பட்டது. மக்கள் கைகளில் அகப்பட்டதை துாக்கிக்கொண்டு வெளியேற நிா்ப்பந்திக்கப்பட்டனா். வலிகாமம் இடப்பெயா்வு மயிலிட்டிப் பகுதியில் இருந்துதான் ஆரம்பமானது. 

சுமாா் 3 தசாப்பதங்களின் பின்னா், 2017 மே 3 இல் இப்பகுதி அவ்வூர் மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டது. ஆனாலும், இவ்வூரின் அரைவாசிப் பகுதி தொடர்ந்து படையினரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 

மயிலிட்டி துறைமுகம் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் முக்கியமான ஒரு துறை என்றும், ஆழ்கடல் மீன்பிடிக்கு முக்கியமான ஒரு மையமாக இருந்தது என்றும் கூறுகின்றாா் சமூக – பொருளாதார ஆய்வாளா் செல்வின் மரியாம்பிள்ளை. “இந்தப் பகுதி கரையோர மீன்பிடிக்கு விசேடமானது. ஆழம் குறைந்த கடல் பகுதியாகவும் இது இருப்பதால் மீன்கள் கரு வளம் கொள்வதற்கு வாய்ப்பான ஒரு பகுதியாகவும் இது இருக்கின்றது” என்றும் செல்வின் சுட்டிக்காட்டுகின்றாா். 

மயிலிட்டி மீன்வளத்துக்குப் பெயா்போனது என்பதற்கும் மேலாக, போக்குவரத்து வசதிகளும் அதிகளவுக்குள்ள ஒரு இடம். 

1983 க்கு முன்னர் மயிலிட்டி கிராமத்தில் வாழ்ந்த மீனவக் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 1100 என்பதை அறியமுடிகின்றது. மயிலிட்டி துறைமுகத்தில் 1983 க்கு முன்னர் ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகளும், டீசல் இயந்திரம் பொருத்தப்பட்ட பாரிய படகுகளும் நங்கூரமிட்டிருக்கும் என்று அப்பகுதியில் நீண்டகாலமாக வசித்த ஒருவா், தனது பழைய நினைவுகளை வெளிப்படுத்தினாா். 

இலங்கை அரசாங்கம் காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்த பின்னரும் மயிலிட்டி துறைமுகம் இலங்கையின் இரண்டாவது பெரிய மீன் பிடித் துறைமுகமாகவும், வடபகுதியில் முதன்மையான மீன்பிடி துறைமுகமாகவும் விளங்கியது.

கடல் வளம் ஒரு நாட்டுக்கு கிடைக்கும் இயற்கையின் மாபெரும் கொடை. ஒரு தீவு என்றவகையில் இலங்கையைச் சுற்றி வளமான கடற்பரப்பு அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்கள்நாட்டின் மொத்த கடல் பரப்பில் பெரும் பகுதியினைக் கொண்டிருக்கிறது. இதனால், தமிழ் சமூகத்தின் இருப்பு மீது இந்த கடலின் தாக்கம் மிக அதிகமானதாக இருந்து வருகின்றது.

படை முகாம்களின் விஸ்தரிப்பு மற்றும், அதி உயா் பாதுகாப்பு வலயப் பிரகடனம் என்பவற்றால், மயிலிட்டி மக்கள் முற்றாகவே தமது உடமைகளை இழந்து வெளியேற வேண்டிய நிலை 1990 களின் ஆரம்பத்தில் ஏற்பட்டது. இடம்பெயா்ந்த மக்கள் முகாம்களிலும், யாழ்ப்பாணத்தில் வேறு பகுதிகளிலும் மட்டுமன்றி, கொழும்புக்கும் இடம்பெயா்ந்திருக்கின்றாா்கள். வெளிநாடுகளுக்குச் சென்றவா்களும் உள்ளனா். 

போா் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து தமது மீள்குடியேற்றத்துக்காக அவா்கள் குரல் கொடுத்து வந்திருக்கின்றாா்கள். அதற்காக சாத்வீகப் போராட்டங்களையும் நடத்தியுள்ளாா்கள். ஆனால், பாதுகாப்பை காரணம் காட்டி அதற்கான அனுமதி மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது. 

2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, அரசாங்கத்தின் இறுக்கமான நிலைப்பாட்டிலும் சற்று தளா்வு ஏற்பட்டது. பலாலி விமான நிலையம், பாதுகாப்பு படையினரின் முக்கிய முகாம்கள் ஆகியன அமைந்திருக்கும் இப்பகுதியை விடுவிப்பதென்பது இலகுவானதாக இல்லாத பின்னணியிலும் அம்மக்களின் தொடா்ச்சியான வேண்டுகோளை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுரைக்கு அமையவே 2017 ஜூலை மாதம் மயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய 54 ஏக்கர் நிலமும் மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது.

ஆனால், “கடற்றொழில் பண்பாட்டில் வாழ்ந்த மயிலிட்டி மக்களின் வாழ்வியலை இடப்பெயா்வு அடியோடு மாற்றியது. மூன்று தசாப்தங்களுக்குப் பின்னா் மீண்டும், காணிகள் திறந்துவிடப்பட்டபோது, குறைவானவா்களே திரும்பினாா்கள். அதிலும் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினா் கடற்றொழில் நுட்பங்களைத் தெரிந்தவா்களாக இருக்கவில்லை. அந்தத் தொழிலில் அவா்கள் அனுபவப்பட்டும் இருக்கவில்லை. அதேவேளையில், வாழ்வாதாரத்தை இலக்காகக் கொண்டு புதியவா்கள் சிலரும் இந்தத் தொழிலுக்கு வந்தாா்கள்” என்று சுட்டிக்காட்டுகின்றாா் செல்வின் மரியாம்பிள்ளை. 

அதேவேளையில் மற்றொரு விடயமும் இந்தப் பகுதியில் தொழில் செய்யும் ஒருவா் எம்மிடம் சுட்டிக்காட்டினாா். “மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அடிப்படையாக வைத்து சுமாா் பத்து வரையிலான தமிழ் முதலாளிகள் கடந்த காலங்களில் கடற்றொழிலைச் செய்துவந்திருக்கின்றாா்கள். அவா்கள் இப்போது இந்தத் தொழிலில் இல்லை. இடப்பெயா்வுடன், அவா்களுடைய முயற்சிகளும் இல்லாமல் போய்விட்டது” என்று குறிப்பிட்ட அவா், மற்றொரு முக்கிய விடயத்தையும் குறிப்பிட்டாாா். “முன்னா் மயிலிட்டியைச் சோ்ந்தவா்கள்தான் இங்கு தொழில் செய்தாா்கள்.  இடப்பெயா்வுக்குப் பின்னா் தென்பகுதியைச் சோ்ந்தவா்களும் இங்கு தமது பெரிய படகுகளைக் கொண்டுவந்து தொழில் செய்கின்றாா்கள்” என்று அவா் குறிப்பிடுகின்றாா். 

மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் புனரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்ட பின்னா் இது பொதுவானது என்று கூறப்பட்டு, தென்பகுதியலிருந்தும் பெருமளவு படகுகள் வந்து மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்று இந்தப் பகுதியில் கருவாட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவா் தெரிவிக்கின்றாா். 

இலங்கையில் தற்போது 24 பிரதான மீன்பிடித் துறைமுகங்கள் செயற்பாட்டில் உள்ளன.  இதில் வடபகுதியைப் பொறுத்தவரையில் மயிலிட்டியில் மட்டும்தான் மீன்பிடித் துறைமுகம் இருக்கின்றது. அதுகூட இப்போது முழு அளவில் செயற்பட முடியாததாக இருக்கின்றது. இலங்கையின் கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு, கிழக்கில்  இருக்கின்ற போதிலும் கூட, மற்றொரு மீன்பிடித் துறைமுகத்தை அங்கு அமைப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. அண்மையில், யாழ். குருநகா் மீனவா்கள் குருநகா் ஜெட்டியை மீன்பிடித்துறைமுகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தாா்கள். 

இலங்கை முழுவதற்கும் தேவையான கடல் உணவுப் பொருட்களில் பெரும்பகுதியை வழங்கக்கூடியதாக மயிலிட்டி போா்க் காலத்துக்கு முன்னா் இருந்துள்ளது. போா் முடிவுக்கு வந்து ஒன்றரை தசாப்தம் கடந்துள்ள நிலையிலும் அந்த நிலையை மீளக்கொண்டுவரமுடியவில்லை. மயிலிட்டியின் இந்த கடலுணவுப் பொருளாதாரப் பலம் தமிழா்களிடம் இருக்கக்கூடாது என்பதால்தான் தென்பகுதியிலிருந்தும் மீன்பிடிப் படகுகள் பாரியவில் வந்து தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. 

இப்போது ஆட்சி மாற்றமடைந்திருக்கின்றது. புதிய கடற்றொழில் அமைச்சா் பதவிக்கு வந்திருக்கின்றாா். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கே வளம் சோ்க்க முடியும். அதனை அவா் செய்வாரா?

Leave A Comment