அரசியல் கட்சிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
பாராளுமன்றத் தேர்தலில் தூய்மையான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவதை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.,
01. சமூக நீதிக்கான தேசிய இயக்கமானது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தூய்மையான மற்றும் மரியாதைக்குரியவர்களாக இருப்பதை உறுதிய செய்யுமாறு அரசியல் கட்சிகளை வலியுறுத்துகிறது
02. ஒரு சிறந்த பாராளுமன்றத்தை நோக்கிய பயணத்தல் வேட்பாளர் நேர்மையையும் அதற்கான தரநிலைகளையும் அது முன்மொழிகிறது
03. சமூக நீதிக்கான தேசிய இயக்கமானது 2024 பாராளுமன்ற தேர்தலில் பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மைச் செயற்பாட்டுக்காக குரல்கொடுக்கிறது
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நேர்மறையான அரசியல் கலாசாரம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்நிலைமை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றது.
வன்முறைச் சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. வெற்றியாளர் அவரது வெற்றியை மனதார ஏற்றுக்கொண்டார், தோல்வியடைந்த வேட்பாளர் பொதுமக்களின் முடிவை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டார். இவ்விதமான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை மற்றும் தேசத்திற்கு பெருமை சேர்ப்பவை.
பாராளுமன்றத் தேர்தலை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த நேர்மறையான அரசியல் கலாசாரத்தைப் பேணுவதும், கட்டியெழுப்புவதும் மிக முக்கியமானது. பாராளுமன்றத்திற்கு கௌரவமான பிரதிநிதிகளை தெரிவு செய்வது அவசியமாகும். அனைத்து எம்.பி.க்களையும் குற்றம் சாட்டுவது நியாயமில்லை என்றாலும், குறிப்பிட்ட சில எம்.பி.க்களின் தவறான நடத்தையால் கடந்த பாராளுமன்றம் கடுமையாக விமர்சிக்கப்பட்டமை தெளிவாகிறது. இந்த நிலையை சீர்செய்ய நாம் அவசரமாக செயல்பட வேண்டும்.
அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு, எந்தவொரு வேட்பாளர் மீதும் கொலை, போதைப்பொருள் பாவனை அல்லது கற்பழிப்பு போன்ற கடுமையான குற்றச் சாட்டுகள் இல்லை என்பதை உறுதி செய்ய ஒவ்வொரு அரசியல் கட்சியும் உறுதியளிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் வருமான வரி செலுத்தினார்களா என்பதையும் தெரிவிக்க வேண்டும், இல்லையெனில் அதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும்.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் இலங்கையின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உட்பட வெளிநாட்டு இராஜதந்திரிகள் போன்ற உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழுவினால் நிறுவப்பட்ட தேவையைப் போன்று, தேவைப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் சுகாதார மதிப்பீட்டு அறிக்கை வழங்கப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகள் அத்தகைய உத்தரவாதங்களை வழங்குகின்றனவா என்பதை தெளிவுபடுத்த வேண்டும், இல்லையெனில் ஏன் என்பதை விளக்க வேண்டும்.
தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு பொதுமக்களுக்கு அனைத்து உண்மைகளும் இருப்பது முக்கியமாகும்.
எந்தவொரு குறுகிய நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், நாட்டின் சிறந்த எதிர்காலத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்த முன்மொழிவு நல்லெண்ணத்துடன் முன்வைக்கப்படுகிறது என்றுள்ளது.

