அரசியல் தளத்தில் இருக்க  வேண்டியது தார்மீக பொறுப்பு டக்ளஸ் தேவானந்தா செவ்வி

ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த மூத்த போராளிகளில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்படும் வரையில் அரசியல் தளத்தில் இருக்க வேண்டியது தவிர்க்க முடியாத எனது தார்மீகப் பொறுப்பாகும். ஆகவே எனது அரசியல் பயணம் தொடரும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி: மூன்று தசாப்தங்களாக தொடர்ச்சியான பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த உங்களுக்கு மக்கள் ஆணை கிடைக்காத கடந்த ஒருவருட காலப்பயணம் எப்படியிருக்கிறது?

பதில்: முதலாவதாக மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில், ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற எனது நிலைமாறாத கொள்கைக்கு மக்கள் சிறிது ஓய்வழித்திருக்கின்றார்கள். இதுவொரு தற்காலிகமானது தான்.

அவர்கள் அந்த ஓய்வினை ஏன் வழங்கியிருக்கின்றார்கள் என்பது தொடர்பில் நான் ஆழமாக ஆராய்கின்றேன். அதுபற்றிய கருத்துக்களை, அவதானிப்புக்களைப் பெற்றுக்கொள்கின்றேன். அவை எமது அடுத்தக்கட்டச் செயற்பாடுகளை வடிவமைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.

மக்களுடன் கடந்த காலங்களை விடவும் நெருக்கமான ஊடாடங்களை கொண்டிருக்கின்றேன். அத்தோடு எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குறுகிய நேரமாவது ஓய்வெடுத்துக்கொள்ளவும் முடிகிறது.

கேள்வி: உங்களுடைய பிரதிநிதித்துவ இழப்புக்கு அப்பால் வடக்கு,கிழக்கில் ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளுக்கும் வாக்குவங்கி வீழ்;ச்சி அடைந்திருக்கின்றது. ஆளும் தேசிய மக்கள் சக்தி எட்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கு என்ன காரணமெனக் கருதுகின்றீர்கள்?

பதில்: எமது தரப்பினைப் பொறுத்தவரையில் மக்கள் தொடர்ச்சியாக ஆணை வழங்கிவருகின்ற நிலையில் அவர்கள் மீது அளவுக்கதிகமாக கொண்டிருந்த நம்பிக்கைகள் எமது பிரசாரங்களில் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதுட்டுமன்றி தேர்தல்காலத்தில் எம்மீது இலக்குவைத்துச் செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட பிரசாரங்களும் தாக்கம் செலுத்தியிருக்கலாம்.

எவ்வாறாக இருந்தாலும், நாட்டில் காணப்பட்ட அரசியல் ஸ்திரமற்ற சூழலுக்குள் தான் தேர்தல் நடைபெற்றது. ஆகவே நாடளாவிய ரீதியில் வழக்கத்துக்குமாறாக மிகைப்படுத்தப்பட்ட பிரசாரங்களும் வாக்குறுதிகளும் அள்ளிவீசப்பட்டன. அவை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தின. அந்தத் தாக்கமே வடக்கு,கிழக்கிலும் ஏற்பட்டது. அதனால் தமிழ் கட்சிகள் அனைத்திற்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.

கேள்வி: அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஆண்டொன்று பூர்த்தியாகியுள்ள நிலையில் அவரது தலைமையிலான அரசாங்கம் பற்றி உங்களது பார்வை என்ன?

பதில்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்திலும், பிரசார மேடைகளிலும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள். அவற்றையெல்லாம் முதலாவது வருடத்திற்குள்ளேயே செய்துவிட முடியாது என்பதை அனுபரீதியாக நான் பார்த்த ஒருவர்.

இருப்பினும் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புகள் மிகவும் உச்சமாக இருக்கின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையினால் அண்மைய நாட்களில் மக்கள் அதிருப்தியை வெளியிட ஆரம்பித்திருக்கின்றார்கள்.

வடக்கு,கிழக்கிலும் சரி, தென்னிலங்கையிலும் சரி மக்களின் அதிருப்திகள் கணிசமான அளவில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது. ஆகவே அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை தமது கட்சி அரசியலுக்கு அப்பால் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிலிருந்து தவறுகின்றபோது அரசாங்கத்துக்கு எதிரான எதிர்மறையான நிலைமை தீவிரமைடந்து மக்கள் பொறுமையிழந்து போகின்ற சூழல்கள் ஏற்படும் ஆபத்துள்ளமையால் நிலைமைகளை கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி: புதிய ஆட்சியில் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் ஒரு உறைந்த நிலைக்குச் சென்றிருப்பதை உணர்கின்றீர்களா?

பதில்: எமது கட்சியைப் பொறுத்தவரையில் அவ்வாறில்லை. அண்மையில் மக்கள் சந்திப்பை நடத்தியிருக்கின்றோம். கிராம மட்டங்களில் உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்பார்கின்றோம்.

அதேபோன்று மக்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள தமிழ் கட்சிகள் எதிர்த்தரப்பில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் அரசாங்கத்துடன் மக்கள் சார்ந்த விடயங்களில் குணாம்சரீதியான அணுகுமுறைகளைப் பின்பற்றி பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பதற்கு முற்பட வேண்டும்.

அதேநேரம், தேசிய மக்கள் சக்தியில் வட,கிழக்கில் தெரிவாகியுள்ள எட்டு பிரதிநிதிகளுக்கும் பாரிய பொறுப்புள்ளது. மத்தியில் அவர்களின் கட்சியே ஆட்சியில் இருந்தாலும் அது தேசிய நிலையில் தனது நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கும். அந்த நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்கள் சார்ந்ததாக முற்று முழுதாக இருக்கும் என்று கருத முடியாது.

ஆகவே, குறித்த எட்டு பிரதிநிதிகளும் தமிழ் மக்களின் விடயங்களை அந்த நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று செயற்பட்டு கையாள வேண்டிய பாரிய பொறுப்பு அந்தப் பொறுப்பிலிருந்து அவர்கள் விலகி நிற்கவே முடியாது.

கேள்வி: அரசியல் களத்தில் உங்களுடைய அடுத்தகட்டச் செயற்பாடு என்ன?

பதில்: தற்போதைய சூழலில் மாகாண சபைத் தேர்தலை முகங்கொடுப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதேவேளை, தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வினைக் காணாது விட்டால் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன்.

ஏனென்றால் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்காக ஆயுதத்தை கையிலெடுத்த தலைவர்களில் நானுமொரு மூத்த போராளி என்ற அடிப்படையில் எனக்கு தார்மீகப் பொறுப்புள்ளது. அந்தப் பொறுப்பிலிருந்து என்னால் விலகி நிற்க முடியாது. எனவே எனது அரசியல் பயணம் தொடரும்.

வயது மூப்பு, உடல்நிலைமை என்பதற்கு அப்பால் எனது மக்கள் சேவைக்கான அரசியல்பணி இயலுமானவரையில் முன்னெடுக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனது கட்சியும் அதேபாதையில் பயணிக்கும்.

கேள்வி: ஆனால் நீங்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் சர்சைகள் காணப்படுகின்றனவே?

பதில்: இந்த விடயம் தற்போது நீதிமன்றில் விசாரணையில் உள்ளமையால் அதுபற்றி எனக்கு கருத்து வெளியிட முடியாது. ஆனால் உங்களுக்கு ஒரு விடயத்தினைக் கூறுகின்றேன். கடந்த காலங்களில் என்மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சேறடிப்புக்கள் செய்யப்பட்டன.

ஈற்றில் அவையொன்றுமே நிரூபிக்கப்படவில்லை. அவை அனைத்துமே அரசியல் காழ்ப்புணர்ச்சியில் வெளிப்படத்தப்பட்டவை. ஆகவே இந்த விடயத்திலும் ‘நீதி வெல்லும்’ என்ற நம்பிக்கையே உள்ளது.

கேள்வி: உங்களுக்கு படைத்தரப்பிடமிருந்து ஆயுங்கள் வழங்கப்பட்டமையை ஏற்க்கொள்கின்றீர்களா?

பதில்: ஆம், நானும் எனது தோழர்களும் ஜனநாயக நீரோட்டத்துக்குள் பிரவேசித்தபிறகு எமக்கான பாதுகாப்பை அரசாங்கமே வழங்கியது. அதற்கு மேலதிகமாக விடுதலைப்புலிகள் இயக்கம் எம்மை இலக்கு வைத்திருந்த நிலையில் எமது பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆயுதங்களுடன் இருந்த எமது தோழர்கள் கூட சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களிடமிருந்த ஆயுதங்கள் காணாமல்போயிருந்தன. 25வருடங்களுக்குப் பின்னர் அந்த ஆயுதங்களை மையப்படுத்தி விசாரணைகள் செய்யப்படுகிறது. தென்னிலங்கையில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி கிளர்ச்சிய செய்தவர்களே தற்போதைய ஆட்சியாளர்கள். அந்த அடிப்படையில் அவர்களுக்கு சூழ்நிலை மாறுபாடு நன்றாகவே புரியும் என்று கருதுகின்றேன்.

கேள்வி: மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமென்று கருதுகின்றீர்களா?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் நாட்டில் மாகாண சபைகளின் செயற்பாடுகள் என்பது மக்கள் பிரதிநிதித்துவத்துடன் நடைபெற வேண்டும். துரதிஷ்டவசமாக தேர்தல் நடத்தப்படாதிருக்கின்றது. அது தாமதமின்றி நடத்தப்பட வேண்டும்.  அவ்வாறு நடத்தப்பட்டால் நாம் போட்டியிடுவோம். உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மை பெற்ற தரப்பினருக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் போன்றல்லாது, மக்களின் ஆணைக்கு அமைய வடக்கு மாகாண சபையில் ஆட்சியைத் தீர்மானிக்ககூடிய சக்தியாக வருவோமாக இருந்தால் ஆட்சியில் பங்கேற்பதை மையப்படுத்தி தீர்மானங்களை எடுப்போம்.

கேள்வி: தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை பற்றி பேசப்படுகின்ற நிலையில் அதற்கான அழைப்புக்கள் ஏதும் தங்களுக்கு கிடைத்ததா?

பதில்: தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென்பதை கொள்கை அளவில் நான் ஏற்றுக்கொண்டிருந்தாலும் அது தேர்தலை மையப்படுத்தியதாக இருக்கக்கூடாது. மாறாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய கொள்கை அளவிலும், பொதுவான பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவும் இருக்க வேண்டும்.

முன்பு கூறுவது போன்று மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் என்ற கொள்கை தான் தமிழ் மக்களின் கணிசமான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும். இந்தப் புரிதல் தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு ஏற்பட்டுள்ளன என்று கருதுகின்றேன். அதனால் தான் மாகாண சபைத் தேர்தல் பற்றி அக்கட்சிகள் அதிக சிரத்தினை எடுத்துள்ளன.

Leave A Comment