இலங்கை துணைத் தூதர் தென்னிந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

இலங்கையில் உருவாகிவரும் இணையற்ற வர்த்தக வாய்ப்புக்கள் குறித்து ஆராயுமாறும், ஆலோசனை நடத்துமாறும் தென்னிந்திய தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூவர் கலாநிதி கணேசனாதன் கேதீஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.

‘இலங்கை புவியியல் ரீதியில் ஒரு முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. இந்நாடு இன்று பொருளாதார ரீதியில் வேகமாக முன்னேறிவருகிறது. இந்நாட்டின் அரசாங்கம் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. எனவே தமது உலகளாவிய தடம் மற்றும் உற்பத்தித்திறன்களை விரிவுபடுத்த விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை சிறந்த இடமாக அமையும்’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, ‘இலங்கை வெறுமனே ஒரு தீவு மாத்திரமல்ல. மாறாக அது பாலத்தைப் போல திசைகளை இணைக்கும் நாடாகும். கிழக்கு மேற்காகப் பயணிக்கும் கப்பல்கள் செல்லும் பாதையில் அமையந்துள்ள தேசமாகும். இதன்மூலம் முதலீட்டாளர்கள் தெற்காசியா, தென்கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பரந்த நுகர்வோர் சந்தைகளை ஆராயமுடியும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ‘இலங்கையில் தொழில்களை ஆரம்பிப்பதற்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா அல்லது புதுச்சேரியை சேர்ந்த தொலைநோக்குப்பார்வை கொண்ட தொழில்முனைவோருக்கு கணிசமாகக் குறைக்கப்பட்ட தளவாடச்செலவுகள், வர்த்தகத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் மிகுந்த கல்வி அறிவு உடைய திறமையான பணியாளர்கள் போன்ற சாதகமான சூழ்நிலைகளாலும் இந்த நாடு அவர்களுக்கான பிரதான தேர்வாக அமையும்’ எனவும் கணேசனாதன் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். 

Leave A Comment