இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கம்

2025 இன் மூன்றாம் காலாண்டு வரை பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் காணப்பட்ட போதிலும், அண்மைய பேரனர்த்தத்தினால் உருவான ஸ்திரமற்ற நிலையின் விளைவாக நான்காவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறித்து உறுதியாகக் கூறமுடியவில்லை எனத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எனினும் அது 5 சதவீதத்தை நெருங்கும் என எதிர்பார்ப்பு வெளியிட்டார்.

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் பதிவான பொருளாதாரப் பாதிப்புக்களிலிருந்து மீட்சியடைவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான நகர்வுகள் என்பன உள்ளடங்கலாக 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலைவரம் எவ்வாறு அமையும் என்பது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஆளுநர் நந்தலால் வீரசிங்க விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

அதன்படி கடந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டு வரை பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் காணப்பட்டதாகவும், இருப்பினும் ‘தித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் நாடளாவிய ரீதியில் உருவான ஸ்திரமற்ற நிலையின் விளைவாக நான்காவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறித்து உறுதியாகக் கூறமுடியவில்லை எனவும் தெரிவித்த அவர், எனினும் அது 5 சதவீதத்தை நெருங்கும் அல்லது கடந்த ஆண்டு பதிவான பொருளாதார வளர்ச்சியை விட சற்றுக் குறைவாகப் பதிவாகும் என எதிர்பார்ப்பு வெளியிட்டார்.

அத்தோடு ‘பேரனர்த்தத்தின் பின்னரான நெருக்கடிக்கு மத்தியிலும், குறிப்பிட்ட காலப்பகுதியினுள் மீள்நிர்மாணம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் முயற்சிகளுக்காக சரியான முறையிலும், செயற்திறன்மிக்க விதத்திலும் செலவிட்டால், 5 சதவீதத்தை விடவும் கூடிய பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று மீள்கட்டுமானப் பணிகளுக்கான செலவினங்கள் தொடர்பான பொறுப்பு பாராளுமன்றத்தின்வசமே இருப்பதாகவும், அதற்கான ஆணை மத்திய வங்கிக்கு இல்லை எனவும் தெளிவுபடுத்திய ஆளுநர், ‘ஆகையினாலேயே நாணயக்கொள்கை மற்றும் நிதிக்கொள்கையின் சுயாதீனத்துவம் இன்றியமையாததாகும். எவ்வாறிருப்பினும் முன்நோக்கிப் பயணிப்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு மத்திய வங்கி ஆலோசனை வழங்கும்’ எனக் குறிப்பிட்டார்.

அதேவேளை பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கு மத்திய வங்கி வழங்கியிருக்கும் நிவாரணம் குறித்துத் தெளிவுபடுத்திய அவர், ‘அண்மைய பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வணிக முயற்சியாளர்கள், அவர்கள் பெற்ற கடனை மீளச்செலுத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொள்வார்களாயின், அவர்கள் 3 – 6 மாதங்கள் வரை அதனைச் செலுத்தாமல் இருப்பதற்கான இடமளிக்கும் வகையிலான வழிகாட்டல்களை நாம் வெளியிட்டிருக்கிறோம். அதற்கமைய அவர்கள் கடன்பெற்ற வங்கியிடம் தமது கடனின் முதல் தவணையைச் செலுத்துவதற்குக் கால அவகாசம் கோரி விண்ணப்பிக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.

Leave A Comment