கலாநிதி ரமணி ஜயசுந்தர தலைமையில் பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு நியமனம்


தற்போது இயங்குநிலையில் உள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக 2024 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க பெண்கள் வலுவூட்டல் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ள பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி ரமணி ஜயசுந்தர ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அவர்களுக்கு எதிராக இடம்பெறும் மீறல்களை முடிவுக்குக்கொண்டுவருவதை இலக்காகக்கொண்டு 2024 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க பெண்களை வலுப்படுத்தல் சட்டத்தின் 5(2)(ஏ) மற்றும் 5(5) பிரிவின்கீழ் பிரிவின்கீழ் கலாநிதி ரமணி ஜயசுந்தர தலைமையில் நிறுவப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவில் ஷ்ரீன் ஸரூர் (முழுநேர உறுப்பினர்), ஜனகா செல்வராஸ் (முழுநேர உறுப்பினர்), தம்மிகா சோமரத்ன, கலாநிதி கலன சேனாரத்ன, கலாநிதி பத்மா சிறியானி குணரத்ன மற்றும் ஜயந்தி குரு-உடும்பல ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அடுத்த 4 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்நியமனங்கள் தொடர்பான நியமனக்கடிதம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சார்பில் ஜனாதிபதி செயலாளர் என்.எஸ்.குமநாயக்கவினால் கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சட்டம், பொருளாதார அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, பெண்கள் வலுவூட்டல் மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகள் என்பவற்றில் கொண்டிருக்கும் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே மேற்படி உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டள்ளனர்.

பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் தொடர்பில் தாமாகவே விசாரணைகளை மேற்கொள்வதற்கு அல்லது இத்தகைய உரிமை மீறல்கள் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற தரப்பினருக்கு எதிராகக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதன்படி இந்த ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கவும், சாட்சியங்களை வரவழைக்கவும், ஆதாரங்களைத் திரட்டவும் முடியும். 

Leave A Comment