சஜித் செம்மணிக்காகவும் சர்வதேச விசாரணையை கோர வேண்டும்; ரவிகரன் எம்.பி.

கவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கான நீதியான விசாரணைக்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை கோரும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச செம்மணி மனிதப்புதைகுழி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை உள்ளிட்ட விவகாரங்களுக்கும் பன்னாட்டு நிபுணர்களின் தலையீட்டுக்காகவும் பன்னாட்டு நீதி விசாரணைக்காகவும் தமிழ் தரப்புடன் சேர்ந்து தமிழ் மக்களுக்காகத் துணைநிற்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின்  வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 21-10-2026 அன்று  நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

 யானை மனிதமோதலால் ஆண்டொன்றுக்கு சராசரியாக முந்நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களும் உயிரிழப்பது சூழலியல் பேரிடராகும்.

 அதிகரித்துள்ள யானை மனிதமோதலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 முல்லைத்தீவின் பல்வேறு இடங்களிலும் யானை – மனித மோதலால் மக்களின் வாழ்வாதார நிலங்கள், சொத்துகள், உடைமைகள் அழிவுக்கு உள்ளாகுவதை இப்பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தேன். 

அண்மையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நோயுற்று பின்னர் மரணமான கவன்திஸ்ஸ யானையின் மரணம் தீவளாவிய வகையில் பெரும் பேசுபொருளானது. 

2018ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் மனித-யானை மோதலால் உயிரிழப்பதாக அரசதரப்பு புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 

யானைக்கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக இருந்த 2023ஆம் ஆண்டுகாலத்தில் தான் ஆண்டொன்றில் அதிகூடியதாக 488 யானைகள் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது. 2026ஆம் ஆண்டின் முதல் ஏழுமாதத்திலும் 180 காட்டுயானைகளும் 35 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். 

ஆண்டொன்றுக்கு சராசரியாக முந்நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களும் உயிரிழப்பது என்பது மனிதம் சார்ந்த, சூழலியல் பேரிடராக அமைகிறது.

அந்தவகையில் இன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்  எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, கடந்த கிழமை இறந்த கவன்திஸ்ஸ யானையின் மரணத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பை வேண்டுவதாக ஊடகங்கள் ஊடாக அறிய முடிந்தது. 

யானையின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை கோரும் எதிர்க்கட்சித்தலைவர்  எங்களின் நீண்டகாலக் கோரிக்கையை மேலும் விளக்கவேண்டியதில்லை.

செம்மணி புதைகுழியில் என்புகளாகியும் நீதிக்காக காத்திருக்கும் 580 இற்கும் மேற்பட்ட எம்முடைய உறவுகள் தொடர்பில், இறுதிப்போரில் அரச படையிடமே நம்பி ஒப்படைத்து இன்றளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் தொடர்பில், பன்னாட்டு போரியல் அறங்களையும் புறந்தள்ளி இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பில் இதுவரை மாறிவந்த இன்றுவரையுள்ள அரசாங்கம் ஒன்றேனும் நீதியைப் பெற்றுத் தராதநிலையில், மேற்படி எமது கோரல்களிலும்

வெளிப்படைத் தன்மையையும் 

நீதியையும் நிலைநாட்டும் பொருட்டு பன்னாட்டு நிபுணர்களின் தலையீட்டுக்காகவும் பன்னாட்டு நீதி விசாரணைக்காகவும்  எதிர்க்கட்சித் தலைவர்  எம்மோடு சேர்ந்து எமக்குத் துணைநிற்கவேண்டும் எனவும் பாராளுமன்றம் ஊடாக  வேண்டிக்கொள்கின்றேன். 

காடுகளின் நிலவுகைக்கு யானைகளின் உலவல் இன்றியமையாதது.நாட்டின்  செழிப்புக்கு மோதலற்ற யானை மனித பிணைப்பும் இன்றியமையாதது. மற்றொரு புள்ளிவிபரத்தில் முறையற்ற வெடிபொருட்களின் பாவனையால் 30% யானைகளுக்கு கேட்டல் திறன் பாதிப்பு எனவும் குறிப்பிடப்படுகிறது. 

எனவே, யானை மனித மோதலை மேலும் இழிவளவாக்கும் வகையில், யானை வேலிகளை அமைப்பதற்கு மேலாகவும், யானை வேலிகள் மீதான தொடர்ச்சியான பராமரிப்பு, வாழிடப்பாதுகாப்பு, முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு பயிற்சியளித்தல், பயிற்சி பெற்ற அவசர பதிலளிப்பு குழுக்களைச் செயற்படுத்தல், பாதுகாப்பான தற்காலிகத் தடுப்புகள் ஏற்படுத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீடுகள் தொடர்பில் பரிசீலித்தல் என்பவை தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்  என்றார்.

Leave A Comment