சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரங்கள்; 6 ஊடக அமைப்புக்கள் கூட்டாகக் கண்டனம்
- Editor
- October 19, 2026
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வலிந்து காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையைத் தூண்டும் பிரசாரங்கள் தொடர்பில் 6 ஊடக அமைப்புக்கள் கூட்டாகக் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், தெற்காசிய பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பு, முஸ்லிம் மீடியா ஃபோரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகிய 6 அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக உண்மையையும் நீதியையும் கோரி அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட கடந்த 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவ்வாறிருக்கையில் இவ்விடயத்துடன் சம்பந்தப்பட்ட வகையில் சட்டபூர்வ நீதித்துறைச் செயன்முறையின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அவர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கக்கூடாது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் அவரது பாதுகாப்பைக் கேள்விக்கு உள்ளாக்குவதன் மாத்திரமன்றி, நாடளாவிய ரீதியில் ‘வெறுப்புணர்வு பிரசார’ கலாசாரத்தை மேலும் தீவிரமாக்கும்.
பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகளின்போது, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மேமாதம் அவர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுவிக்கப்பட்ட போதிலும், அந்தப் பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியமையால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தனிநபர்கள் அல்லது சமூகங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பதையோ, வன்முறைகளைத் தூண்டுவதையோ அல்லது வெறுப்புணர்வைப் பரப்பும் பிரசாரங்களை முன்னெடுப்பதையோ கருத்துச்சுதந்திரம் என ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
இந்நிலையில் சந்தியா எக்னெலிகொடவின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், இந்த வெறுப்புணர்வுப் பிரசாரங்கள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

