சந்திரிகாவின் தீர்வுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிந்தால் நாடு முன்னேறியிருக்கும்; கருஜயசூரிய
- Editor
- December 20, 2024
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாடு பாரியளவில் முன்னேற்றமடைந்திருக்கும். தற்போதைய ஜனாதிபதியாவது அதனை நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்காகக் கொண்டு கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு மஹரக இந்திரா புற்றுநோய் ஒழிப்பு அமைப்பிற்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்வு 18-12-2024அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க புதிய அரசியலமைப்பினை உருவாக்கி தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தமையை இன்று பலரும் மறந்துள்ளனர். இதற்காக 21 கூட்டங்களை அவர் நடத்தியிருக்கின்றார். அவற்றில் நானும் பங்கேற்றிருக்கின்றேன். அந்த அரசியலமைப்புக்கு எந்தவொரு அரசியல்வாதியும் எதிர்ப்பினை வெளியிடவில்லை.
அன்று அந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று நாடு எந்த நிலைமையில் இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடியும். அவ்வாறான புரட்சிகரமான மாற்றத்தை பொருளாதார மற்றும் சமூக ரீதியில் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அந்த முயற்சி நிறைவேறாது போனமை எமது நாட்டின் துரதிஷ்டமாகும். புதிய ஜனாதிபதி தற்போதாவது அதனை செய்வார் என்று நம்புகின்றோம் என்றார்.

