சமஷ்டி தான் இறுதியான தீர்வு; இராஜாங்க துணைச் செயலாளரிடம் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து

அநுரவின் அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பையேற்று மாதமொன்றாகியிருக்கின்ற நிலையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக சமஷ்டி அடிப்படையிலான நிரந்தரமான தீர்வு என்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்கு முன்னதாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு அக்கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவம் செய்து சந்திப்பில் பங்கேற்ற அக்கட்சியின் செல்வராசா கஜேந்திரன், 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டியதோடு, ஏலவே தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஒற்றாயாட்சி சொற்பதம் காணப்படுவதால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் திணைக்களத்தின் சமாதானம், மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் இரண்டு நாட்கள் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது 07-12-2024 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடக்கு மாகாணத்தின் தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் சுவிட்சர்லாந்தின் உதவி இராஜாங்க துணைச் செயலாளருடன் இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவர் கலாநிதி. சிறிவொல்ட், மனிதப் பாதுகாப்புக்கான முதற்செயலாளர் ஜஸ்டின் போலியட், தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்கான சிரேஷ்ட அதிகாரி சுசந்தி கோபால கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம், மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன்  ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, ஆட்சி மாற்றத்துக்கான பின்னரான நிலைமைகள் புதிய அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு, உள்ளிட்ட தொடர்பில் உதவி இராஜாங்கச் செயலாளர் கேள்விகளைத் தொடுத்திருந்தார்.

இச்சமயத்தில், தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று மாதமொன்றே கடந்திருக்கின்றது. அவ்விதமான நிலைமையில் அவர்களுக்கு சற்றுக்காலம் வழங்க வேண்டியுள்ளது. எவ்வாறாக இருந்தாலும் எமது விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடாகும்.

அந்த வகையில், தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரவை அண்மையில் சந்தித்து உரையாடியுள்ளோம். அந்த உரையாடல் ஆரோக்கியமாக இருக்கின்றபோதும், செயற்பாட்டில் அவர்கள் தங்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதும், புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது ஏலவே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை மையப்படுத்தியதாக ஆரம்பிப்பதாகவும் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் அநுர தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

எம்முடனான கலந்துரையாடல்களின்போதும் அதனையே அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆகவே அந்த விடயங்களை அவர்கள் கூறியதன் பிரகாரம் முன்னெடுக்க வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடாகும். அதேநேரம், புதிய அரசியலமைப்பு முன்னெடுக்கப்படுகின்றபோது குறித்த இடைக்கால அறிக்கையில் உள்ள ஒற்றையாட்சி விடயம் தொடர்பில் கரிசனைகொள்ள வேண்டும்.

மேலும், எம்மைப்பொறுத்தவரையில், 13ஆவது திருத்தச்சட்டமும், மாகாண சபை முறைமையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்கின்ற விடயமொன்றல்ல. இருப்பினும், அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி அக்கட்டமைப்பை வினைத்திறனாக செயற்படுவதற்கு இடமளிப்பதன் மூலமாக தங்களது அதிகாரப்பகிர்வுக்கான சமிக்ஞையை வெளிப்படுத்த முடியும் என்று கருதுகின்றோம் என்றனர்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டி அடைப்படையிலேயே அமைய வேண்டும். ஆகவே அரசாங்கம் சமஷ்டி அடிப்படையில் தீர்வினை வழங்குவதாக உறுதியளித்ததன் பின்னரேயே பேச்சுக்களையும், புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். எம்மைப்பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையானது ஏக்கிய இராஜ்ஜ என்று ஒற்றையாட்சியை மையப்படுத்தியதாகவே உள்ளது. ஆனால் தமிழிலும், ஆங்கிலத்திலும் அதன் வடிவங்கள் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளன. ஆகவே அந்த இடைக்கால அறிக்கையினை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாரில்லை. அதேபோன்று 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் நாம் ஏற்றுக்கொள்வதற்கு தயாரில்லை. இதனை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகின்றோம் என்றார்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காக சமஷ்டித் தீர்வே வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்களில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் திணைக்களத்தின் சமாதானம், மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் உறுப்பினர்களின் கருத்துக்களை செவிமடுத்திருந்தபோதும் தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ள

Leave A Comment